திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி ஏழு மாத கர்ப்பிணியாக்கிய பதினேழு வயதுடைய சந்தேக நபரை அடுத்த ஜுலை மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் சனிக்கிழமை (23) உத்தரவிட்டார்.
கருக்காமுனை,ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு அயல் வீட்டில் உள்ள பதினைந்து வயதுடைய சிறுமியின் வீட்டுக்குச் சென்று வருவதை அயல் வீட்டிலுள்ளோர் கண்டுள்ளதாகவும்,துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பிணியாக்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் திருமணம் முடித்துள்ளதாகவும்,சந்தேக நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய வெள்ளிக்கிழமை (22) இரவு கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டுள்ள பதினைந்து வயதுடைய சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வேண்டி வெருகல் கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.