நல்லாட்சி என பெயரை வைத்துக்கொண்டு இந்த ஆட்சியை நிறுவிய முஸ்லிம் மக்களின் மீது தமது சொந்த முகத்தை காட்ட ஆரம்பித்து இருக்கும் இந்த அரசில் முக்கிய பாத்திரத்தை வகிக்கும் ஐ.தே. கட்சி தலைவர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதம மந்திரி பதவிக்கு மேலதிகமாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியையும் கொண்டிருந்தும் ஆன பலன் எதுவும் இல்லை.
உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ஒலிவாங்கி முன்னிலையில் ஒப்பாரி வைக்கும் முஸ்லீம் ஜனாஸாக்கள் (பா.உ க்கள்,அமைச்சர்கள்) தமது சுய இலாபம் அடைந்ததை தவிர மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்கள் எதையும் உருப்படியாக சாதிக்க வில்லை.
கடந்த மஹிந்த அரசில் முஸ்லிம் பள்ளிக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் சேதம் ஏட்படும் போது வானுக்கும் பூமிக்குமாக குதித்த நமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இப்போது முகப்புத்தகத்தில் வடை சுடுவதை தவிர சாதிப்பது எதுவுமே இல்லை என்பது வேதனையான ஒன்றாகும்.
மஹிந்த ஆட்சி காலத்தில் சிறிய அளவிலான சேதங்கள் இடம்பெற்ற போது பூதாகரமாக பேசிய ஊடகங்கள் இப்பொழுது மௌனமாக இருப்பதும் மக்கள் மத்தியில் பாரிய சந்தேக அலையை தோற்றுவித்துள்ளது.
இந்த அரசை நிறுவ பங்காற்றிய ஒரு இனத்துக்கு திட்டமிட்டு சில விஷமிகள் பல்வேறு வகையான அசௌகரியங்களையும் , அவப்பெயர்களையும் உருவாக்கி ஏனைய சமூகத்தினருடன் சண்டைகளை உருவாக்கி நாட்டின் ஒற்றுமையை சீரழிக்கும் வேலை திட்டத்தை நிறைவேற்ற அர்ப்பணித்து கடமையாற்றுகிறதை இந்த அரசு ஏன் கவனியாது இருக்கிறது?
மஹிந்தவின் அரசில் முஸ்லிம் சமூகம் பட்ட அவலத்தை விட பலமடங்கு அவலத்தை இந்த நல்லாட்சி எனும் பெயரில் இயங்கும் அரசில் பட்டுக்கொண்டிருப்பதை அறிந்தும் தமது சுகபோக வாழ்க்கை முறையை வாழ தொடர்ந்தும் இந்த அரசுக்கு முட்டுக்கொடுக்காமல் கலிமா சொன்ன முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவிகளை வீசி எறிந்து விட்டு அரசுக்கு வெளியே வந்து உங்கள் சமூகத்தின் நலனுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என அனைவரையும் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
அமைச்சர் பதவிகளில் இருந்து விலக விருப்பம் இல்லை என்றால் இந்த கால கட்டத்தில் உங்கள் சொந்த, தனிப்பட்ட கட்சி தலைவர்கள் மற்றும் இதர போட்டி நிலைகளை மறந்து விட்டு ஒரு பெரிய அளவில் எமது சமூக ஒற்றுமை யை நிலை நிறுத்தி நமது இருப்பை தக்க வைக்க ஒன்றிணைத்து குரல் கொடுக்க வேண்டும் என எமது மக்களின் பிரதிநிதிகள் சகலரையும் வேண்டிக்கொள்கிறேன்.என அல் மீஸான் பவுண்டேஷன் தலைவர் அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமர் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்தார்.