அகில இலங்கை ரீதியாக 'கிறீடா சக்தி' என்னும் தொனிப்பொருளில் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட கால் பந்தாட்டப் போட்டி நிகழ்வுகளில் 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான போட்டியில் அம்பாறை மாவட்டம் மூன்றாம் இடத்தைப் பெற்றிருப்பதனை வெகுவாக பாராட்டுவதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
குறித்த கால் பந்தாட்ட போட்டி நிகழ்வில் முதல் மூன்று இடங்களை தெரிவு செய்வதற்கான போட்டிகள் இன்று (27) செவ்வாய்க்கிழமை பொலன்னறுவையில் நடைபெற்றது. இதன்போது அம்பாறை மாவட்டம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இவ்வெற்றி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் அவர் மெலும் குறிப்பிடுகையில், மாவட்டங்களுக்கிடையில் நடைபெற்ற இக்கால் பந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தை புத்தளம் மாவட்டமும் இரண்டாம் இடத்தை கண்டி மாவட்டமும் பெற்றுக்கொண்டன. வெற்றிபெற்ற இம்மாவட்ட அணிகளை பாராட்டுகின்றேன்.
கொழும்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் அம்பாறை மாவட்டம் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது, இதனையிட்டு அம்பாறை மாவட்ட கால் பந்தாட்ட குழு வீரர்களை மனதார பாராட்டுவதோடு எதிர்காலத்தில் சிறந்த வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்.
அத்தோடு அம்பாறை மாவட்ட கால் பந்தாட்ட குழுவின் வெற்றிக்காக உழைத்த மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள் அனைவரையும் பாராட்டுவதோடு இவ்வீரர்களுக்கு பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.