ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைத் திரட்டினால் முக்கிய இடங்களில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை கிடைத்து விடும் என்ற நிலையில், மு.காவின் தலைவர் உட்பட அக்கட்சியின் எம்.பிக்கள் குழு, ஜனாதிபதி மைத்திரிபாலவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
தேர்தல் முடிவு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. குறிப்பாக இணைந்து ஆட்சியமைப்பது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேற்படி சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் கூறியவை வருமாறு:
''உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு ஆசனங்களைப் பெரும்பான்மையாகப் பெற்றிருந்தபோதும் பல சபைகளை தனியாக ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று ஜனாதிபதியுடன் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட எமது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக ஒரு சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தோம்.
இந்தச் சந்திப்பில் கிழக்கின் தற்போதைய உள்ளூராட்சி சபைகளை ஆட்சியமைப்பது குறித்த பேச்சு இடம்பெற்றது. இதன் பிரதிபலனாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து நாங்கள் பல சபைகளை ஆட்சியமைப்பதற்கான தீர்மானங்களும் எட்டப்பட்டன.
எனவே, உத்தியோகபூர்வமான முடிவை அறிவிக்க முடியாத நிலை இருந்தாலும்கூட இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் பெறுபேறாக கிழக்கில் பல சபைகளை எமது கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி யமைக்கவுள்ளது என்பதே எனது கருத்தாகும்'' என்றார்.
