கடந்த ஆட்சியில் ஹலால் பிரச்சினையை ஆரம்பமாக கொண்டு பள்ளிவாயல்களை, முஸ்லிம் வர்த்தக நிலையங்களை, இலக்குவைத்து தீக்கிரையாக்கியதை கண்டித்தே முஸ்லிம் சமூகம் இந் நல்லாட்சியை கொண்டுவர பெரும்பங்காற்றியது.
அரசாங்கம் மாற்றம் பெருவதனூடாக முஸ்லிம் சமூகத்தின் மத, கலாச்சார விழுமியங்கள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இல்லாது மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நல்லாட்சியிலும் தொடர்ந்து இடம்பெறும் இனசுத்திகரிப்புக்கான திட்டம் தொடர்ந்தும் நடைபெருவதனால் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அச்சத்தையும் சந்தேகத்தையும் தற்போது உருவாக்கியுள்ளது.
கடந்த ஆட்சியை தவறு கண்ட முஸ்லிம் சமூகம் இந்த ஆட்சியில் நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு காரணமானவர்களை கண்டுகொள்ளாததும், முஸ்லிம் அரசியல் தலமைகள் விடுகின்ற தவறுகளுக்கு தண்டனை வழங்காமல் மீண்டும் மீண்டும் அவர்களை தேர்தல் காலங்களில் ஆதரிப்பதும் பின்னர் அங்களாய்ப்பதும் வாடிக்கையானதொன்றாகிப்போனது மாத்திரல்ல இவ்வாறானஅசம்பாவிதங்கள் காலத்திற்கு காலம் தொடர்வதற்கான காரணமாகவும் மாறியுள்ளது.
நல்லாட்சியை கொண்டுவருவதற்கு முந்தியடித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கடந்த மற்றும் நிகழ்கால பிரச்சினைகள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு அதற்கான உத்தரவாதத்தினை ஆளும் அரசிடம் ஒப்பந்தங்கள் ஊடாகவோ அல்லது அரசியல் பேரம் பேசும் சக்தியினூடாகவோ செயல்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து அமைச்சுப்பதவிகளை இலக்காக கொண்டு சராணாகதி அரசியல் செய்வதனால் தொடர்ந்தும் இப்பிரச்சினை முஸ்லிம்களை கருவறுத்துக் கொண்டிருக்கிறது.
இன்றுள்ள இருபத்தியொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் ஆளும் அணியில் இருந்த போதிலும் கடந்த அல்லது நிகழ்கால அசம்பாவிதங்களில் இருந்து பாதுகாக்கவோ அல்லது அதற்கான பரிகாரம் என்னவேன்பதை ஆராயவோ அல்லது இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்கவோ இன்னும் முயற்சிக்கவில்லை. அதிலும் முஸ்லிம் சமூகத்தின் முகத்தில் அரைவதுபோல பள்ளிவாயல்களை உடைப்பது எரியூட்டுவது கண்டிக்கத்தக்க விடயமாகும். இதனை இனியும் தொடராது தடுத்து நிறுத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும்.
மாதத்திற்கு நான்கு தடவை பாராளுமன்றத்திற்கு புதிய புதிய திருத்தங்களை கொண்டுவந்து ஆளும் அரசாங்கத்தை பாதுகாக்க கை உயர்த்துபவர்கள் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து பெரிய ஜும்மா பள்ளிவாயல்களையும் தேசிய சொத்தாக வர்த்தமானி அறிவித்தல் அறிவிப்பு செய்யப்படுவதுடன் பாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கிழ் கொண்டுவரப்படல் வேண்டும் என பாராளுமன்றத்தில் சட்டமூலம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுவதனூடாக பள்ளிவாயல்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் அத்தனைக்கும் பாதுகாப்பு அமைச்சே பொறுப்பேற்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
இதனூடாக பள்ளிவாயல்கள் அணைத்தும் தேசிய சொத்தாக மாற்றம் பெருவதுடன் அங்கீகாரம் பெற்ற வணக்கஸ்தளங்களாகவும் அதற்கு கீழ் இயங்கும் ஏனைய சிறு பள்ளிவாயல்களை பாதுகாக்கவும் உதவும் என தெரிவித்தார்.