தூய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்த பங்களிப்புச் செய்யும் வகையிலான வழிப்புணர்வுக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் தவிசாளர் வ.பரமசிங்கம் தெரிவித்தார்.
அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இக்கலந்துரையாடல் நாளை (09) சனிக்கிழமை காலை 10.00 மணியில் இருந்து 3.00 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும், இதில் உள்ளுராட்சி மன்றங்களின் திருத்தச் சட்டமூலம், வட்டார தேர்தலின் நன்மை, தீமை மற்றும் அதன் அவசியம் தொடர்பாகவும், அரசியலில் பெண்களின் வகிபங்கு எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றியும், உள்ளுராட்சி கட்டமைப்பு பற்றிய தெளிவுறுத்தல் தொடர்பாகவே இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் கூறினார்.
புதிய அரசியலமைப்பு மாற்றமும், மக்களின் எதிர்பார்ப்பையும் ஊடக மயப்படுத்துவதின் மூலம் தூய அரசியலுக்கான பங்களிப்பை வழங்கள் எனும் எண்ணக்கருவிற்கு அமைவாக ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரை இணைத்து இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் கூறினார்.
மக்களின் அபிலாசைகளையும், எதிர்பார்ப்புக்களையும் வெளிக்கொணரச் செய்து இந்நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் வலுப்படுத்தும் வகையில் தூய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
