க.கிஷாந்தன்-
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் 30.11.2017 அன்று மாலை பெய்த கடும் மழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 86 வயதுடைய மூக்கன் மருதாயி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மூதாட்டி வீட்டில் சமயலறையில் தனிமையில் இருந்த வேளையில் திடீரென சுவர் இடிந்து மூதாட்டியின் மேல் விழுந்ததனால் உயிரிழந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளாக தெரிவித்த டயகம பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.




