எம்.ஐ.சர்ஜுன் சாய்ந்தமருது-
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு சாய்ந்தமருது மக்கள் போராடி வருவதும் அதற்காக பல போராட்டங்களை கடந்த காலங்களில் செய்துவருவதும் நாடறிந்த விடயமே.
சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் அனுசரனையுடனும் இன்னும் பல பொது அமைப்புகளினதும் ஒத்துழைப்புடனும் 'சாய்ந்தமருது பிரகடணம்' நிறைவேற்றப்பட்ட விடயமும் நாம் அறிந்ததே. இந்தப் பிரகடணத்தின் அடிப்படையில் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தனியான சுயேற்சைக் குழுவை களமிறக்குகின்றது.
இதனடிப்படையில் கல்முனை மாநகர சபை ஆதிக்கப் பிரதேசத்தினுள் உள்ளடங்கும் சாய்ந்தமருது சார்பாக ஒரு சுயேற்சைக் குழுவும், காரைதீவு பிரதேச சபைக்குள் வரும் மாளிகைக்காடு சார்பாக ஒரு சுயேற்சைக்குழுவும் போட்டியிட தயாராகி வருகின்றது. சாய்ந்தமருதும் மாளிகைக்காடும் வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் தொன்று தொட்டு இந்த இரு மக்களும் ஒரே ஊராகவே வாழ்ந்து வருகின்றனர்.
சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ள மாளிகைக்காடு மக்கள் இந்த போராட்டதிற்கு கைகொடுக்கும் பொருட்டே புவியியல் மற்றும் நிருவாக ரீதியாக பல்வேறு வகையில் வேறு பட்டிருந்தும் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வண்ணமே இந்த சுயேற்சைக் குழுவை களமிறக்கியுள்ளனர். இதற்காக வேண்டி காரைதீவு பிரதேச சபைக்கான சுயேற்சைக் குழு தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாளிகை;காடு சுயேற்சைக் குழுவிற்கான வேட்பாளர் தெரிவையும் மாளிகைக்காட்டில் உள்ள பள்ளிவாசல் நிருவாகிகளுடன் ஒன்றினைந்து சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனையே முன்னெடுத்திருந்தது. சுயேற்சையில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து மக்கள் பணிமனை விண்ணப்பங்ளைக் கோரியிருந்தது. இந்த விண்ணப்பங்ளைக் கோரரும்போது விண்ணப்பதாரிகளுக்கான சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது மக்கள் பணிமனை.
அதாவது, இறையச்சம் உள்ளவராக இருத்தல், இஸ்லாமிய மார்க்க விழுமியங்களை கடைப்பிடிக்கக் கூடியவராக இருத்தல், தலைமைத்துவ கட்டுப்பாடு, தலைமைத்துவ விசுவாசம், மசூறா (கூட்டாக) அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்படுதல், நேரடி வட்டித் தொழிலுடன் அல்லது இஸ்லாம் மார்க்கத்திற்கு முறணான வழியில் பொருளாராதார நடவடிக்கைக்களில் ஈடுபடாதவராயிருத்தல், கிரிமினல் குற்றங்கள் செய்து நீதிமன்ற தண்டனைக்குட்படாதவராயித்தல், துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபடாதவராயிருத்தல் போன்ற பல்வேறு வரையறைகளை வைத்தே குறித்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டது. விண்ணப்பம் செய்தவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு ஒரு தெரிவிக்குழுவின் முன்னிலையில் வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது.
அதாவது, மாளிகைக்காட்டின் இரண்டு வட்டாரங்களுக்கு அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்த காரணத்தினால் விண்ணப்பதாரிகள் அனைவரையும் இரண்டு ரக்அத் சுன்னத்தான தொழுகை தொழுதுவிட்டு வருமாறு பணிக்கப்பட்டனர். அதன் பின்னர் இரண்டு வட்டாரங்களுக்காக விண்ணப்பித்தவர் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கிடையில் ஒரு பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் விட்டுக்கொடுப்பு அடிப்படையில் பேசுமாறு பணிக்கப்பட்டனர்.
இதனடிப்படையில் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்திற்கு விட்டுக்கொடுப்புச் செய்யப்பட்டு ஒருவர் போட்டியின்றித் தெரிவானார். ஆனால், மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்திற்கு விட்டுக்கொடுப்புச் செய்யப்படாமையால் தெரிவுக் குழுவின் கூட்டுத் தீமானத்தின் அடிப்படையில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். இந்த தெரிவிக் குழுவில் பள்ளிவாசல் நிருவாகிகள், மார்க்கப் பெரியார்கள், புத்திஜீவிகள், மற்றும் பல்துறை சார்ந்தோரும் உள்ளடக்கப்பட்டே இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதே அடிப்படையிலேயே சாய்ந்தமருதுக்கான வேட்பாளர் தெரிவும் இடம்பெற்றது. அதாவது, விண்ணப்பதாரிகள் அனைவரும் கடந்த சனிக்கிழமை அழைக்கப்பட்டு இஸ்லாமிய மார்க்க பெரியார் ஒருவரினால் தலைமைத்துவ கட்டுப்பாடு, கூட்டுத் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளல் போன்ற விடயங்களை உள்ளடக்கிய மார்க்க சொற்பொழிவு நடாத்தப்பட்டது. இதன் பின்னர் விண்ணப்பதாரிகள் அனைவரும் வட்டாரம் வட்டாரமாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி குழுக்களாக்கப்பட்டனர்.
அந்தந்த வட்டார குழுக்கள் அவர்களுக்கிடையில் புரிந்துணர்வு அடிப்படையில் பேசியதன் பின்னர் பல விண்ணப்பதாரிகள் ஊரின் நலன்கருதி விட்டுக்கொடுப்புகள் செய்யத் தயாராக இருப்பதை வெளிப்படையாக தெரிவித்தனர். இதன்போது யாரைத் தெரிவு செய்வது என்ற சங்கடமான நிலை தெரிவுக் குழுவிற்கு ஏற்பட்டது. விண்ணப்பித்தவர்களின் ஏகோபித்த முடிவுகளின் அடிப்படையில் வேட்பாளர்களை தெரிவுசெய்யும் பொறுப்பை சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைமையிடம் ஒப்படைப்பதாக ஒருமித்த கருத்தை வெளியிட்டு பைஅத் (உறுதிமொழி) எடுத்துக் கொண்டனர்.
இந்த ஒன்றுகூடலின் பின்னரும் சில விண்ணப்பதாரிகள் குழுக்களாக பேசி தமது வட்டாரங்களில் சிறந்த வேட்பாளர்களை நமது சுயேற்சை சார்பில் களமிறக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் மேலும் பலர் தாங்கள் விட்டுக்கொடுப்புச் செய்யத் தயாராகவிருப்பதை தெரிவித்தனர்.
பள்ளிவாசல் தலைமையானது விண்ணப்பித்தவர்களுள் விட்டுக்கொடுப்புகள் செய்யத் தயாராகவிருந்தவர்கள் நீங்கலாக எஞ்சியோரில் சாய்ந்தமருதில் உள்ள ஆறு வட்டாரங்களுக்கான வேட்பாளர்களை கடந்த திங்கட்கிழமை இரவு அறிவித்தது. இந்த அறிவிப்பானது பல நூற்றுக் கணக்கான சாய்ந்தமருது பொதுமக்கள் முன்னிலையில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு உலமா சபைத் தலைவரின் பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ்.வை.எம்.ஹனீபா அவர்களினால் அறிவிப்புச் செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பின் பிரகாரம் ஒரு பெண் சட்டத்தரணி உட்பட அரச உத்தியோகத்தர்கள், தொழிலதிபர்கள் அடங்கிய ஆறு பேர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருது சார்பாக களமிறங்கும் சுயேற்சை அணியில் உள்ளடக்கப்பட்டனர்.
அறிவிப்புச் செய்யப்பட்ட பின்னரும் இந்த ஆறு பேரில் இரு வேட்பாளர்கள் விட்டுக்கொடுப்புச் செய்து இருவர் உள்வாங்கப்பட்டனர். அதாவது, தெரிவு செய்யப்பட்ட ஒருவரது 2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் முறையாகப் பதிவு செய்யப்படாமையின் காரணமாக அவரை நியமனப் பத்திரத்தில் பேடுவதா இல்லையா என்ற சந்தேகம் வேட்புமனு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்ட குழுவினரிடத்தில் நிலவியது.
குறித்த சகோதரரான சாய்ந்தமருது டவுன் ரவல்ஸ் உரிமையாளர் சகோ. ஜலீல் (ஜவாஹிர்) அவர்கள் பெருந்தன்மையுடன் தாமாக முன்வந்து 'இந்த விடயத்தில் எமது உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனையும், பள்ளிவாசல் தலைமையும் என்னை மதித்து, பலர் விண்ணப்பித்திருந்த நிலையில் என்னைத் தெரிவு செய்தமைக்காக இந்த போராட்டத்தில் இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். வாக்களார் பட்டியலில் உள்ள குறைபாட்டை வைத்துக்கொண்டு நான் விடாப்பிடியாக நின்று எனது பெயரை வேட்பாளர் நியமனப் பத்திரத்தில் போட்டு அது நிராகரிக்கப்பட்டு அதன் பின்னர் நமது மக்கள் பணிமனையை நீதிமன்றம்வரை கொண்டுசெல்ல விரும்பாததால் அதிகமானோரின் ஆலோசனைகளைப் பெற்று விட்டுக்கொடுப்புச் செய்வதாக' அறிவித்தார்.
அடுத்தாக முன்னர் அறிவிக்கப்பட்ட பெண் சட்டத்தரணியை குறித்த சுயேற்சைக் குழுவின் விகிதாசாரப் பட்டியலில் உள்ளடக்குவதே சிறப்பான செயலாகும் என்று பல அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டன. ஏனெனில், குறித்த சுயேற்சைக் குழுவிற்கு கிடைக்கப்பெறும் விகிதாhசார உறுப்பினர்களுக்கான வாய்ப்பு பெண்களுக்கே வழங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதற்குப் மிகவும் பொருத்தமானவர் சட்டத்தரணி என்பதால் அவரது பெயர் விகிதாசாரப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு அந்த வட்டாரத்திற்கும் வேறு தொழிலதிபரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது. இந்த விடயத்திலும் குறித்த பெண் சட்டத்தரணி அனைவரது ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டு தான் தெரிவு செய்யப்பட்டும் தனது இடத்தினை விட்டுக்கொடுத்தமை சாய்ந்தமருது மக்கள் மிகப் பண்பாளர்கள் என்பதை பறை சாற்றுகின்றது.
இங்கு குறிப்பிடத்தக்க முக்கிய விடயமானது, சாய்ந்தமருதில் உள்ள ஆறு வட்டாரங்களுக்காக ஆறு வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்காக 45 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றது. ஆனால், இதிலிருந்து ஆறு பேரை மட்டும் தெரிவு செய்வதென்பது மக்கள் பணிமனைக்கும் தெரிவுக் குழுவிற்கும் பலத்த சவாலாக விளங்கியபோது விண்ணப்பித்தவர்களே சுயமாக முன்வந்து வேட்பாளர் தெரிவை பள்ளித்தலைமையிடம் ஒப்படைக்கின்றோம் என்ற மிகக் காத்திரமான முடிவை எடுத்தமை பலராலும் போற்றத்தக்க விடயமாக மாறியுள்ளது. இது மட்டுமல்லாது சாய்ந்தமருது மக்கள் தமது பள்ளி நிருவாகிகளுடன் அந்நியோன்னியமாக நடந்துகொள்ளும் மனப்பாங்கு இன்று பலராலும் பாராட்டிப் பேசப்படுகின்றது.
வேட்பாளர் தெரிவுடன் நின்றுவிடாது குறித்த 45 பேரில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பேர் நீங்கலாக எஞ்சியோர் அனைவரும் மாற்றுக் கட்சிகளிடம் சென்று வாய்ப்புக் கேட்காமலும், மாற்றுக் கட்சி வேட்பாளர்களுடன் இணைந்து இந்த சுயேற்சைக் குழுவை மலினப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் இருப்பதானது இந்த சுயேற்சைக் குழுவிற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
இந்த சுயேற்சைக் குழுவின் நியமனப் பத்திரம் இன்று கையளிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இந்த சுயேற்சைக் குழு சாய்ந்தமருது மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றத்தினை வெற்றிகொள்ளும் பயணத்தை அரசியல் இன்று ஆரம்பித்து வைக்கின்றது.

