ஏறாவூர் ஏ எம் றிகாஸ்-
மட்டக்களப்பு - ஏறாவூர் நகரில் இன்று 04.12.2017 அதிகாலை ஒருமணியளவில் இரண்டு லொறிகள் மோதிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் சிறிய ரக லொறி வீதியோர மின்கம்பம் மற்றும் உணவகம் ஒன்றை உடைத்துக்கொண்டு உட்புகுந்துள்ளது.
இந்த விபத்தில் தெய்வாதீனமாக உயிர்ப்பலிகள் ஏற்படாதபோதிலும் உணவகத்தின் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பெரிய லொறிச் சாரதியின் நித்திரைக்கலக்கமே இவ்விபத்திற்குக் காரணமென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவி;த்தனர்.
கொழும்பிலிருந்து பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக களுவாஞ்சிக்குடி நோக்கி மிக வேகமாக சென்றுகொண்டிருந்த லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக லொறியின் பின்புறமாக மோதியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வழக்கமாக இந்த இரவு ஹோட்டலின் முற்றத்தில் பலர் கூடியிருந்து தேநீர் அருந்துவதுண்டு. எனினும் சம்பவநேரம் அங்கு எவரும் இருக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.