தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அழுத்தத்தினாலும் நல்லாட்சி அரசாங்கத்தின் அனுசரணையினாலும் நுவரெலியா மாவட்டத்தில் நான்கு புதிய பிரதேச சபைகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள போதும் இந்த மாவட்டத்தின் மக்கள் தொகைக்கேற்ப மேலும் பிரதேச சபைகள் அதிகரிக்கப்படவேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மத்திய மாகாணசபை தலைவர் எல்.டி.நிமலசிறி தலைமையில் இடம் பெற்ற மத்திய மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது :
நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் , மஸ்கெலியா , கொட்டகலை , அக்கரப்பத்தனை என்ற பெயர்களில் புதிதாக நான்கு பிரதேச சபைகள் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக எமது நாட்டின் ஜனாதிபதி , பிரதம மந்திரி , தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சர்களான மனோகணேசன் , திகாம்பரம் , இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இந்தச்சபையில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மத்திய மாகாணத்தில் ஏற்கனவே உள்ள 33 பிரதேச சபைகளுடன் புதிய பிரதேச சபைகள் நான்கும் சேர்த்துத் தற்போது 37 பிரதேச சபைகள் செயற்படவுள்ளன. இந்தப் புதிய பிரதேச சபைகளுக்கான உரிய வளங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு மத்திய மாகாண உள்ளூராட்சி திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனினும் மக்கள் தொகைக்கேற்ப நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள் அதிகரிக்கப்படாமை பாராபட்சமாகவே கருதப்படவேண்டியுள்ளது. சுமார் நாலரை இலட்சம் மக்கள் தொகை கொண்ட மாத்தளை மாவட்டத்தில் ஒரு மாநகர சபையும் 11 பிரதேச சபைகளும் 11 பிரதேச செயலகங்களும் உள்ளன.
சுமார் 13 இலட்சம் மக்கள் தொகை கொண்ட கண்டி மாவட்டத்தில் ஒரு மாநகரசபையும் 4 நகரசபைகளும் 17 பிரதேச சபைகளும் 20 பிரதேச செயலகங்களும் உள்ளன.
ஆனால் ஏழு இலட்சம் மக்கள் தொகை கொண்ட நுவரெலியா மாவட்டத்தில் ஒரு மாநகரசபையும் இரண்டு நகரசபைகளும் 5 பிரதேசசபைகளும் 5 பிரதேச செயலகங்களுமே உள்ளன. எனவே மக்கள் தொகைக்கேற்ப நுவரெலியா மாவட்டத்தில் கிராமசேவகர் பிரிவுகள் , பிரதேச செயலகங்கங்கள் , பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
இந்த அதிகரிப்புக்கள் மூலமாகவே அரசியல் பிரநிதித்துவத்தையும் அரச சேவைகளையும் அதிகரித்துக்கொள்ள முடியும். எனவே மத்தியமாகாண சபையில் நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 17 உறுப்பினர்களும் இவ்விடயம் தொடர்பில் ஒருமித்துச் செயற்பட வேண்டும் என்றார்.
