க.கிஷாந்தன்-
உள்ளுராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை. இதற்கு முன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பல நம்பிக்கையில்லா பேரரணைகளை கொண்டுவந்தனர். ஆனால் அது எதுவும் வெற்றியளிக்க போவதில்லை என மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சரும், விவசாயம், தோட்ட உட்கட்டமைப்பு, மீன்பிடி, இந்துக்கலாசார அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
நாவலப்பிட்டி கெட்டபுலா குயின்ஸ்பெரி பிரதேசங்களிலுள்ள ஆலயங்களுக்கும், விளையாட்டு கழகங்களுக்கும் சமையல் பாத்திரங்கள், விளையாட்டு உபகரணங்கள், நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் ரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் 25.11.2017 அன்று கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்திலும், குயின்பெரி தமிழ் மகா வித்தியாலயத்திலும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு இ.தொ.காவின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத், அமைச்சின் செயலாளர் நவரத்தினம் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று பைசர் முஸ்தபா ஒரு சிறுபான்மையினர் என்பதால் சிறுபான்மைக்கட்சிகள் மற்றும் ஜனாதிபதி அவருடனிருப்பதால் அரசாங்கமே வெற்றி பெறும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளுராட்சி சபைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவில்லை. எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவே வழக்குத்தாக்கல் செய்யவுள்ளது.
இன்று பலர் உள்ளுராட்சி சபைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் இ.தொ.கா செய்ததென குற்றஞ்சுமத்தி வருகிறார்கள். ஆனால் நல்லது செய்தால் அது அவர்கள் செய்தது. அதில் குறைபாடுகள் இருந்தால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்தது என்பதே இவர்களின் நியாயமாக உள்ளது. இதையாவது இ.தொ.கா செய்ததென ஏற்றுக்கொண்டமையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம் என்றார்.


