எஸ்.அஷ்ரப்கான்-
கம்பஹா மாவட்ட கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு கடந்த 28.10.2017 சனிக்கிழமை காலை 9 மணிக்கு யக்கலலின்றோஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
மல்வானை அல்- முஹ்ஸீன் நிறுவனத்தின் அனுசரனை ஏற்பாட்டில் அமைப்பின் ஸ்தாபகர் தொழிலதிபர் அல்-ஹாஜ் எம்.எம்.ஏ. இஸ்மாயீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேட பேச்சாளராக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.ரீ.ஏ. நிஸாம் அவர்கள் கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆசிய சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் தவிசாளர் அல்-ஹாஜ் எம்.ஆர்.எம். றிஸ்வி அவர்களும் கௌரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ்.முஹம்மட், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அல்-ஹாஜ் எம்.எம்.ஏ. கபூர் அவர்களும் மற்றும் கிழக்கு மாகாண பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ.எம். ஹூனைஸ் உட்பட கல்வித்துறையின் உயர் அதிகாரிகளும் அல்-முஹ்ஸீன் நிறுவனத்தின் உயர்பீட உறுப்பினர்களும் மற்றும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அல்-முஹ்ஸீன் நிறுவனத்தின் அமைப்பாளர் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எம்.ஸாபிர் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறையில் உள்ள சவால்கள் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற, நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
சுமார் 4 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இலங்கையின் கல்வித்துறை மற்றும் முஸ்லிம்களின் கல்வித்துறைச் சவால்கள் தொடர்பிலும் மிக ஆழமான கருத்துக்களை இதன்போது அவர் முன்வைத்தார்.