தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றிவந்த கலாநிதி திருமதி பாத்திமா ஹன்சியா றஊஃப் பேராசிரி யராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பேராசிரியரும்,முதலாவது பெண் பேராசிரியரும்,முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் முதலாவது பேராசிரியரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியராகக் கடமையேற்றிருக்கும் இவர் இப்பீடத்தின் பட்டப்பின்படிப்பு நிலையத்தின் இணைப்பாளராகவும், வெளிவாரிப்பட்டப்படிப்பு மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் இயக்குணராகவும், முகாமைத்துவத் திணைக்களத்தின் தலைவராகவும் பதவிகள் வகித்துள்ளார்.
கற்பித்தல் மற்றும் ஆய்வுசார் பணிகளில் தனக்கெனத் தனியான பாணியையும் மாணவர்கள் மத்தியில் நற்பெயரையும் பெற்ற இவர் சிறந்த அனுபவம் மிக்க நிருவாகி என்பதைச் செயல்மூலம் இப்பல்கலைக் கழகத்திற்கு நிரூபித்துக் காட்டியவர். இவர் இப்பீடத்தின் பீடாதிபதியாகச் சேவையாற்றிய காலத்தில் கணக்கீடு, நிதியியல், தகவல் முறைமை, சந்தைப்படுத்தல் மற்றும் மனிதவள முகாமைத்துவம் போன்ற விசேட கற்கைகளை அறிமுகப்படுத்தி அவற்றிற்கான கல்விசார் பிரிவுகளையும் உருவாக்கியதுடன் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானமானிக் கற்கையை உருவாக்கி இவையனைத்துக்குமான ஆளணிகளையும் ஏனைய பௌதீக வளங்களையும் ஏற்படுத்தியதோழு முகாமைத்துவ பீடத்தை இப்பல்கலைக் கழகத்தின் முன்மாதிரியான பீடமென்று எல்லோரும் போற்றுமளவுக்கு வளரச் செய்த பெருமைக்குரியவராவார்.
இவர் சர்வதேச ஆய்வரங்குகளில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதோடு பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் வெளியிட்டு மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்.இவர் தனது வியாபார நிருவாக இளமானிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும்,வியாபார நிருவாக முதுமானிப் பட்டத்தை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகத்திலும்,மனிதவள முகாமைத்துவம்சார் கலாநிதிப் பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் பெற்றுள்ளார்.
தனது தொழில்சார் வாழ்க்கையில் மிகப்பாரிய வெற்றிகளைச் சம்பாதித்தது மட்டுமல்லாது தனது குடும்ப வாழ்க்கையிலும் பல தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் மத்தியில் வெற்றிவாகை சூடியுள்ளார் என்பது மெச்சத்தக்கது. ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சைகளில் உயர்புள்ளிகள் பெற்றுப் பாடசாலைகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவரது முதல் மகள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுக் கடந்த வருடம் களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர் தர்ஹா டவுனைச் சேர்ந்த முஹம்மது ஸகரியா,நூர் ஸபா ஆகியோரின் புதல்வியும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணக்கியல் மற்றும் நிதியியல் திணைக்களத்தின் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஹமட்லெப்பை அப்துல் றஊஃப் அவர்களின் பாரியாருமாவார்;.இவர் தர்ஹா நகர் அளுத்கம முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியுமாவார்.