அத்துடன் இவ் வழக்கின் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமார் மற்றும் ஏழாம் எதிரியான பழனிரூபசிங்கம் குகநாதன் ஆகிய இருவருக்கும் எதிராக எந்தவிதமான சாட்சியங்களும் இல்லையெனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எடுத்துக்கூறினார்.
மாணவி வித்தியாவின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள ட்ர யல் அட்பார் நீதிமன்றில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் மற்றும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரை உள்ளடக்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
இவ் வழக்கு விசாரணையில் வழக்கு தொடுநர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சிப் பதிவுகள் நிறைவடைந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை 16 ஆவது நாளாக குறித்த வழக்கு இரு தரப்பு தொகுப்புரைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது வழக்கு தொடுநர் தரப்பு சார்பாக இவ் வழக்கினை நெறிப்படுத்தும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் இவ் வழக்கின் தொகுப்புரையை மேற்கொண்டிருந்தார்.
அவர் தனது தொகுப்புரையில் தெரிவித்திருப்பதாவது,
இந்த வழக்கானது புங்குடுதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற மிகக் கொடூரமான ஓர் சம்பவம் தொடர்பானதாகும். இவ் வழக்கில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேருக்கும் எதிராக சட்டமா அதிபரால் 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பகிர்வு பத்திரமானது தயார் செய்யப்பட்டு பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த மூன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இவ் வழக்கின் ஆரம்பத்தில் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு வாசித்து காண்பிக்கப்பட்டு அதற்கு அவர்கள் நிரபராதிகள் என மன்றுரைத்ததை தொடர்ந்து இவ் வழக்கு சாட்சி பதிவு நடவடிக்கையானது ஆரம்பித்திருந்தது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இச் சாட்சிப் பதிவில் வித்தியாவின் தாயார் சாட்சியமளிக்கும் போது தனது மகள் சம்பவ தினமான 2015.05.13 ஆம் திகதி காலை பாடசாலையில் சுத்தம் செய்ய வேண்டியிருந்ததால் அன்று காலை 7 மணிக்கும் 7.15 மணிக்குமிடையில் பாடசாலை புறப்பட்டு சென்றதாகவும் அன்று வித்தியா தனியாகவே பாடசாலைக்கு சென்றிருந்தார் என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் வித்தியா 12 ஆம் திகதி பாடசாலை செல்லவில்லை எனவும் தனியார் வகுப்பு ஒன்று பார்ப்பது தொடர்பாக சென்றுவிட்டு வந்தார் எனவும் அவ்வாறு தனியார் வகுப்பு பார்த்துவிட்டு வரும் போதே தன்னை யாரோ பார்ப்பதாக அவர் கூறியதாகவும் வித்தியாவின் தாயார் தனது சாட்சியத்தில் கூறியிருந்தார்.
இவற்றைவிட மேலும் வித்தியாவின் தாயார் சாட்சியமளிக்கும் போது வித்தியா சம்பவ தினத்தன்று அணிந்திருந்த பாடசாலை சீருடை, புத்தகப்பை, துவிச்சக்கரவண்டி என அனைத்தையும் அடையாளம் காட்டியிருந்தார்.
இதன் பின்னர் குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்ட போது அங்கு அழுத வித்தியாவின் தாயார் தன்னிடம், 'வித்தியா நேற்று சொன்னாள் தன்னை யாரோ வடிவாக பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள், பார்க்க வெளிநாட்டுகாரர்கள் போல இருக்கு' என்று கூறியே அழுதார் என ஞானேஸ்வரன் இலங்கேஸ்வரன் இந் நீதிமன்றில் சாட்சியமளிக்கும் போது கூறியிருந்தார்.
இதேபோன்று வித்தியாவின் கண்ணாடி 6 ஆவது எதிரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அதனை வித்தியாவினுடயது தான் என வித்தியாவின் தாயார் உறுதிப்படுத்தியதாகவும் விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா சாட்சியமளித்திருந்தார். அத்துடன் அது வித்தியாவுக்கு தான் சிபாரிசு செய்த கண்ணாடி தான் என்பதை கண் வைத்திய நிபுணர் மலரவனும் அக் கண்ணாடியை வித்தியாவுக்கு விற்பனை செய்த கண்ணாடி கடை உரிமையாளரும் அதன் பவரை பரிசோதித்தவர்களும் இந் நீதிமன்றில் தமது சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.
மேலும் இவ் வழக்கில் பதினொராவது சந்தேகநபராக கைதுசெய்யப்பட்டு பின்னர் சட்டமா அதிபரது சிபாரிசின் அடிப்படை யில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்ட உதய சூரியன் சுரேஸ்கரன் சாட்சியமளிக்கும் போது, மாப்பிள்ளை என்பவர் வீட்டில் 5 ஆம், 6ஆம், 2ஆம், 3ஆம் எதிரிகள் கள்ளு குடிக்கும் போது 6ஆம் எதிரி தாம் வித்தியாவை காதலிப்பதாகவும் அவளை தூக்கி தர வேண்டும் என 2ஆம் எதிரியிடம் கேட்டதாகவும் அதற்கு 2ஆம் எதிரி தனக்கு அதற்காக 23 ஆயிரம் ரூபா பணம் கேட்டதாகவும் சாட்சியமளித்திருந்தார்.
இதன்படி தானும் 5 ஆம், 6 ஆம் எதிரிகள் வித்தியாவின் நடமாட்டம் தொடர்பாக அவதானித்ததாகவும் 11 ஆம் திகதி வித்தியா வேறொரு பிள்ளையுடன் பாடசாலைக்கு சென்றதாகவும் 12 ஆம் திகதி வித்தியா பாடசாலைக்கு செல்லவில்லை என்பதும் தம்மால் அவதானிக்கப்பட்டதாகவும் சாட்சியமளித்திருந்தார்.
பின்னர் 13ஆம் திகதி வித்தியா தனியாக வரும் போது வித்தியாவை 6ஆம் எதிரியே வழிமறித்ததாகவும் தன்னை காதலிக்கிறாயா? இல்லையா? என கேட்டு அவரது கன்னத்தில் அறைந்ததாகவும் இதன்போது அவரது கண்ணாடி கீழே வீழ்ந்ததாகவும் சாட்சியமளித்தார். அதன் பின்னர் வித்தியாவை பலவந்தமாக பற்றைக்காட்டுக்குள் இழுத்து சென்று பாழடைந்த வீட்டிற்குள் படுக்க வைத்து மாறி மாறி பாலியல் வல்லுறவு புரிந்ததாகவும் சாட்சியமளித்தார்.
இவரது சாட்சியத்தை போன்றே இவ் வழக்கின் மற்றுமொரு சாட்சியான கள்ளு விற்பனை செய்யும் மாப்பிள்ளை என்பவரும் சாட்சியமளித்திருந்தார். அவற்றைவிட இவ் வழக்கில் முன்வைக்கப்பட்ட மற்றுமொரு சாட்சியமான மணிவண்ணன் தனுராம், தானும் தனது நண்பனான இலங்கேஸ்வரன் தனுஜன் என்பவனும் பாடசாலை செல்லும் போது சம்பவம் நடந்த அன்று வித்தியா கட்டப்பட்டிருந்த இடமான பகுதியில் தனது நண்பனின் செருப்பு கழன்று வீழ்ந்த போது தான் அதனை இறங்கி எடுத்ததாகவும் அப்போது அங்கே ரவி மாமா மஞ்சள் நிற ரீசேட்டுடன் நின்ற தாக சாட்சியமளித்தார். அத்துடன் அங்கு ம்ம்ம்ம் என்ற சத்தம் ஒன்று வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மற்றுமொரு சாட்சியமான பாலசிங்கம் பாலசந்திரன் என்பவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இது ஒரு முக்கியமான சாட்சியமாகும். அதாவது இச் சாட்சியானது யாருடைய தூண்டுதலும் இன்றி சுயாதீனமாக வழங்கப்பட்ட சாட்சியாகும். இவ் சாட்சி சாட்சியமளிக்கும் போது வித்தியாவின் சம்பவம் நடந்த இடத்தில் அச் சம்பவ தினத்தன்று 2ஆம், 3ஆம் எதிரிகளை தாம் கண்டதாக சாட்சியமளித்திருந்தார்.
இதேபோன்று இலங்கேஸ்வரன் என்ற சாட்சி சாட்சியமளிக்கும் போது சின்னாலடி பகுதியில் 2015.05.12 ஆம் திகதி வித்தியா பஸ் வண்டியில் இருந்து இறங்கி வீடு நோக்கி துவிச்சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு செல்லும்போது வெள்ளை நிற வானில் நின்று 4ஆம், 5ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகள் அவளை பார்த்துக்கொண்டு நின்றதாக சாட்சியமளித்திருந்தார்.
சாந்தரூபினி என்ற சாட்சி சாட்சியமளிக்கும் போது 5ஆவது எதிரி சம்பவ தினத்தன்று சாரத்தை மடித்து கட்டிக்கொண்டு ஐயனார் கோவில் பக்கம் சென்றதாக சாட்சியமளித்தார். ஆனால் 5ஆவது எதிரி சாட்சியமளிக்கும் போது தான் மீன்பிடிக்க கடலுக்கு சென்றதாக கூறினார்.
வேலணை பிரதேச சபையில் குறித்த 6ஆவது எதிரி சம்பவ தினத்தன்று காலை 9.15 மணிக்கு சென்று 8.15 மணிக்கு சென்றதாக வரவுப்புத்தகத்தில் கையெழுத்திட்டிருந்தமையும் அதற்கான சான்றுகளும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இவற்றைவிட இவ் வழக்கில் மற்றுமொரு முக்கிய சாட்சியாக பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி உருத்திரபசுபதி மயூரதன் சாட்சியம் காணப்படுகின்றது. இவரது சாட்சியத்தில் வித்தியாவின் சடலத்தில் தலைப்பகுதியில் காணப்படும் காயங்கள் அது ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்பானவை உதயசூரியன் சுரேஸ்கரன் மற்றும் மாப்பிள்ளை என்பவர் கூறிய சாட்சியங்களுடன் ஒத்துப்போவதாகவுள்ளது. அதாவது வித்தியாவை பாழடைந்த வீட்டில் கீழே படுக்க வைத்து அவர் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்தில் அவரது தலை பலமுறை நிலத்தோடு உராய்வுபட்டதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சட்டவைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கையுடனான சாட்சியம் குறிப்பிடுகின்றது.
இவ்வாறு வழக்கு தொடுநர் தரப்பால் முன்வைக்கப்பட்ட எந்தவொரு சாட்சியத்திலும் முரண்பாடுகளோ அல்லது விடுகைகளோ காணப்படவில்லை. அத்துடன் அவ்வாறு முரண்பாடுகள் விடுகைகள் காணப்படுவது தொடர்பாக எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்படவுமில்லை.
மேலும் இவ் வழக்கில் எதிரிகளில் முதலாம் எதிரி சாட்சியமளிக்கும் போது தான் தனது சகோதரனான 3ஆம் எதிரியுடன் சம்பவ தினத்தன்று ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு செல்வதற்காக துவிச்சக்கரவண்டியில் பேருந்து நிலையத்துக்கு சென்றதாக சாட்சியமளிக்கவில்லை. ஆனால் 3ஆம் எதிரி மேற்கூறியவாறு சாட்சியமொன்றை முதல் தடவையாக மன்றில் தெரிவித்தார். எனினும் இவ் வழக்கில் முதலாம் எதிரிக்கு எதிராக எந்தவொரு சாட்சியமும் காணப்படவில்லை.
6ஆவது எதிரி சாட்சியமளிக்கும் போது இவ் வழக்கில் முதல் தடவையாக கூறினார் தம்மிடம் பொலிஸார் குடிபோதையில் வாக்குமூலம் பெற்றதாக. ஆனால் அது தொடர்பாக குறுக்கு விசாரணையின் போது எந்தவிதமான கேள்விகளும் பொலிஸார் சாட்சியமளிக்கும் போது அவர்கள் தரப்பு சட்டத்தரணிகளால் கேட்கப்பட வில்லை.
8 ஆவது எதிரி சாட்சியமளிக்கும் போது தன்னை பொலிஸார் சித்திரவதை செய்து பின்னர் முகத்தை கழுவி பவுடர் போட்டு வீடியோ எடுத்ததாக கூறினார். ஆனால் இது தொடர்பாக பொலிஸார் சாட்சியமளிக்கும் போது அது தொடர்பாக குறுக்கு விசாரணையில் எந்தவிதமான கேள்விகளையும் அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் கேட்கவில்லை. அத்துடன் இவர் தனது சாட்சியத்தில் தனக்கு கம்பியூட்டர் தொடர்பாக அனைத்தும் தெரியும் எனவும் சாட்சியமளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இவ் வழக்கின் 9 ஆவது எதிரி சாட்சியமளிக்கும் போது தான் ஒருமுறை இலங்கை வந்தால் தனக்கு 20 இலட்சம் செலவாகும் என சாட்சியமளித்திருந்தார். அப்படியாயின் இவர் வவுனியா சிறையில் வைத்து இப்லார் ஊடாக நிஷாந்த சில்வாவுக்கு 2 கோடி இலஞ்சம் கொடுக்க முற்பட்டதை ஏற்றுக்கொள் ளக் கூடியதாக இருக் கும். அத்துடன் இவர் சார்பில் சாட்சிக்காக அழைக்கப்பட்ட இவரது மனைவி சாட்சியமளிக்கும் போது 2015.05.08ஆம் திகதியில் இருந்து 2015.05.13ஆம் திகதி வரை வெள்ளவத்தை ஏஞ்சல் லொட்ஜில் தனது கணவரான 9ஆம் எதிரியுடன் இருந்ததாகவும் வெளியே எங்கும் சென்றதில்லை எனவும் சாட்சியமளித்திருந்தார்.
ஆனால் குறித்த 9ஆம் எதிரியான சுவிஸ்குமார் சாட்சியமளிக்கும் போது குறித்த காலப்பகுதியில் தான் வெளியில் சென்று வந்ததாக சாட்சியமளித்துள்ளார். அவ்வாறு பார்க்கும் போது குறித்த இரண்டு சாட்சியங்களுக்குமிடையே முரண்பாடுகள் காணப்படுகின்றதை அவதானிக்கலாம்.
இவ்வாறு அரச தரப்பு மற்றும் எதிரி தரப்பு சாட்சிப் பதிவுகளுடன் குறித்த வழக்கானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இவ் வழக்கில் குறித்த ஒன்பது எதிரிகளில் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமார் மற்றும் 7ஆம் எதிரியான பழனிரூபசிங்கம் குகநாதன் ஆகிய இருவருக்கும் எதிராக எந்தவிதமான சாட்சியங்களும் முன்வைக்கப்படவில்லை.
ஆனால் இவ் ஒன்பது பேரில் மேற்கூறிய இருவரும் தவிர்ந்த ஏனைய எதிரிகளான 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன், 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன், 6ஆம் எதிரி சிவதேவன் துஷாந்தன், 8ஆம் எதிரி ஜெயதரன் கோகிலன், 9ஆம் எதிரி மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஏழு பேருக்கு எதிராகவும் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட 41 குற்றச்சாட்டுக்களும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றார்.
தொடர்ந்து குறித்த வழக்கினை விரை வாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங் கிய ட்ரயல் அட்பார் நீதிபகளுக்கும், குற்றச் சம்பவம் தொடர்பான விரைவான விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனா ய்வு பிரிவினர், பொலிஸாருக்கும் வழ க்கு நடவடிக்கையின் போது உதவி வழங் கிய நீதிமன்ற பணியாளர்களுக்கும், சிறை க்காவலர்களுக்கும், எதிரிகள் தரப்பு சட்ட த்தரணிகளுக்கும் இவ் வழக்கு தொடர் பாக குற்றச் சம்பவம் இடம்பெற்றதில் இருந்து இன்றுவரை இவ் வழக்கு தொட ர்பான செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்களுக்கும் சட்டமா அதிபர் சார்பில் தனது நன்றிகளை தெரிவித்து இவ் வழக்கு தொடர்பான தனது இறுதி தொகுப்புரையை நிறைவு செய்திருந்தார்.
இதேவேளை, குறித்த வழக்கு தொடுநர் தரப்பு தொகுப்புரையானது நேற்றுக் காலை 9.40 மணியளவில் ஆரம்பித்து மாலை 4.25 மணிவரை நீண்ட நேரம் இடம்பெற் றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
