துபாயிலுள்ள ஆடையகம் ஒன்றில், உடை மாற்றும் அறையில் ஒரு பெண் விளையாட்டுக் காற்சட்டை ஒன்றை அளவு பார்ப்பதற்காக அணிந்து கொண்டிருக்கும் போது, கதவின் கீழால் கைத் தொலைபேசியுடன் ஒரு கை உள்ளே நீள்வதை அவதானித்துள்ளார். உடனே குனிந்து அந்தக் கையைப் பிடித்துக் கொண்டு சத்தமிட்டுள்ளார். ஆயினும் கைக்குரியவன் தனது கையை விடுவித்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து ஓடித் தப்ப முயன்றுள்ளான். அவ்வேளை பெண்ணின் கூக்குரல் கேட்ட அந்த ஆடையகப் பணியாளர்களும் காவலர்களும் ஓடிய இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அவனது தொலைபேசியைப் பரிசோதித்த போது அரைகுறை ஆடையணிந்த நிலையில் அந்தப் பெண்ணின் படமும் வேறு பல ஆபாசமான புகைப்படங்களும் அவனது தொலைபேசிக் கமராவில் பதிவாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த இளைஞன் துபாய் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அவனைப் போலீசார் நீதிமன்றத்தில் நிறுத்தினர். நீதிமன்றம் அந்த இளைஞனுக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்ததோடு, சிறைவாசம் முடிந்ததும் நாடுகடத்துமாறும் உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த இளைஞன் 25 வயதானவர் என்பதும் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
