மாகாணசபைகள் தங்களுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதுடன் அவற்றில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டும் என முன்னாள் வட.கிழக்கின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
'மாகாணசபைகள் தமக்கான அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவற்றினைப் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டும். இதன்மூலமே மாகாணசபைகள் தமக்கான பல அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன் மக்களுக்கான சிறந்த ஆட்சியினை வழங்க முடியும்.
மூன்று இனங்களும் உள்ள இந்த கிழக்கு மாகாணத்திலே மக்கள் ஒற்றுமையாக வாழ முடியுமென்ற தோற்றப்பாட்டினை ஆட்சியாளர்கள் ஏற்படுத்த வேண்டும். அத்துடன் ஆட்சியாளர்களால் பாரபட்சமற்ற முறையில் மக்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக இங்கு நிலைமை அப்படியல்ல என்பது தெரிகின்றது' என வரதராஜப் பெருமாள் தெரிவித்தார்