தலிபான்களால் சுடப்பட்டவள் என்பதல்ல! கல்விக்காக போராடியவள் என்பதே என் அடையாளம்- - மலாலா

2004-ம் ஆண்டை நினைத்துப்பார்க்கும்போது அவர்கள் நகரத்துக்குள் நுழைந்த காட்சிதான் மனதைத் துளைக்கிறது. அதற்கு முன்பு வரை ‘ஸ்வாட்' பள்ளத்தாக்கு சொர்கம்போல் இருந்தது. அப்போது அவர்கள் தங்களின் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றவில்லை; பள்ளிகளை, குண்டு வைத்துத் தகர்க்கவும் இல்லை. ஆனால், 2007-ம் ஆண்டு தொடர்ந்தது அவர்களின் வெறிச்செயல். ஸ்வாட் பகுதியில் இருக்கும் 400 பள்ளிகளை அடியோடு தகர்த்தனர்; எண்ணற்றவர்களை வெட்டிக்கொன்றனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றிலிருந்து நான்கு பேர்களை வெட்டிக்கொல்வார்கள். அதுவே பெண்கள் என்றால், அவர்களுக்குக் கசையடி கொடுப்பார்கள். சுதந்திரம் பறிக்கப்பட்டு அடிமைகள்போல்தான் பெண்கள் நடத்தப்பட்டார்கள். வீட்டைவிட்டு எங்குமே செல்ல முடியாத நிலை. எங்களின் உரிமைக்குரல் பறிக்கப்பட்ட தினத்தில் நிச்சயம் இதைப் பற்றிப் பேசவேண்டும் என நினைத்தேன். அப்போது பார்த்த கொடுமைகள்தான் கண்களைவிட்டு நீங்கவில்லை. அவை உண்மையிலேயே கறுப்பான நாள்கள்" என்று தாலிபான்கள், தான் வசிக்கும் நகருக்குள் வந்ததைப் பற்றி உருக்கமாகத் தெரிவித்தார் அந்தச் சிறுமி. இப்படிக் கூறிய பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சை நம்மால் மறக்க இயலுமா?2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி காலை, கோல்டு 45 துப்பாக்கியால் மலாலா சுடப்பட்டபோது துப்பாக்கிக் குண்டு மண்டையோட்டின் ஒரு பக்கத்தைத் துளைத்தது. மலாலா மயக்கத்தில் சரிந்ததால், அடுத்த இரண்டு குண்டுகள் அவரின் இரு தோழிகள் மீது பாய்ந்தன. இந்தச் செய்தி தெற்கே 200 மைல் கடந்து பாகிஸ்தானின் ராணுவத் தலைமை அலுவலகத்துக்கு உடனடியாகச் சென்று சேர்ந்தது. ஸ்வாட் பகுதியிலிருந்து தினம் தினம் இப்படியான செய்திகள் தொடர்வது வழக்கம்தான். `பள்ளி மாணவிகள் சுடப்பட்ட சம்பவம் அவ்வளவு தீவிரமானது அல்ல' என என்னும் தறுவாயில் மரணத்தின் படுக்கையில் இருப்பது மலாலா எனத் தெரிந்தவுடன், பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஜெனரல் அஷ்ஃபக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ராணுவ ஹெலிகாப்டர்கள் அந்த இடத்துக்கு விரைந்தன. ஏனென்றால், மலாலா என்பது வெறும் பெயர் மட்டுமல்ல, ஓர் இளம் அடையாளம்.

எப்பாடுபட்டாவது மலாலாவைக் காப்பாற்ற வேண்டும் என நினைந்த கயானி பிறப்பித்த உத்தரவு அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தது. கோமாவில் இருந்த மலாலாவின் உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியது. மூளைப்பகுதியில் அதிர்ச்சித் தாக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பதே அவர் உயிர் பிழைப்பதற்கான ஒரே நம்பிக்கை. இருப்பினும் பிழைப்பாரா, மாட்டாரா என்ற சந்தேகம் உலகத்தையே உருட்டத் தொடங்கியது. அனைத்து மக்களும் இன, மத பேதமின்றி மலாலாவுக்காகப் பிரார்த்தனை செய்தனர். ஒருவேளை இவர் உயிர் துறக்க நேர்ந்தால், பெண்களின் அடையாளம் துடைத்து அழிக்கப்படும்; தீவிரவாத சக்தி தழைத்தோங்கத் தொடங்கிவிடும். இருப்பினும் அவர் சிறிது சிறிதாக உணர்விழந்து தளர்ந்துகொண்டிருந்தார். தெளிவாகக் கூற வேண்டும் என்றால், அவர் மரணத்தின் நுழைவாயிலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார்.உடனடியாக நள்ளிரவில் அறுவைசிகிச்சையைத் தொடங்கிய மருத்துவர் கான் மலாலாவின் மண்டையோட்டில் பாதிக்கப்பட்ட சிறு பகுதியை வெற்றிகரமாக அகற்றி முடித்தார். சரியான நேரத்தில் திறம்பட செய்த அறுவைசிகிச்சை என கானுக்கு உலக அளவில் வரவேற்பும் கிடைத்தது. ஆனால், இந்த உயிர்பிழைப்பு நிரந்தரமல்ல என்பதை சிறிது நேரத்திலேயே உணர்ந்தனர். மலாலாவின் ரத்த ஓட்டம் சீரடையவில்லை. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ரத்தம் உறையவும் இல்லை. இதயம் கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழக்கத் தொடங்கியது. சிறுநீரகம் முற்றிலுமாகச் செயல்திறனைத் துண்டித்திருந்தது. பெஷாவர் மருத்துவமனையில் வசதிகள் குறைவாக இருந்ததை எண்ணி மருத்துவர்கள் கவலைகொள்ளவில்லை. பாகிஸ்தான் மருத்துவத்தால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என மலாலாவை துபாய்க்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பை மறுத்து, மாறாக ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

உலக மீடியாக்களின் மொத்தக் கண்களும் மலாலா மீதே குவிந்தன. அந்த வேளையில் தாலிபான்களைத் திட்டித் தீர்க்காத சேனல்களே இல்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் தன் தலைக்கு மேல் ஆயிரம் கேமராக்களின் ஒளியும், ஓராயிரம் கேள்விகளும் மலாலாவைச் சூழ்ந்திருந்த நிலையில் அவரைப் பற்றிய கயானியின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. `யுத்த பூமியிலிருந்து மீண்டு வந்து உலகுக்குப் பாடமெடுப்பாய். இனி உலகிலுள்ள ஒவ்வொருவரின் உதடும் உச்சரிக்கப்போகும் பெயராக மலாலா மாறப்படும்' என்பதுதான் அது. மலாலா, சமுதாயத்தின் ஓர் அங்கமாக மாறிய நேரமும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

1997-ம் ஆண்டு ஜூலை 12-ம் நாள் பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் கவிஞர் ஜியாவுதீன் - டோர் பீகாய் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். பிபிசி-யின் உருது இணையதளத்தில், `குல் மகாய்' என்ற பெயரில் பெண்களுக்கான கல்வி குறித்து தொடர்ந்து வலைப்பதிவிட்டு வந்தார். முகம் தெரியாத அந்தச் சிறுமியின் மீது தாலிபான்களின் கவனம் திரும்பியது. இருந்தும் பெண் கல்விக்கும் மனித உரிமைக்கும் ஆதரவாகத் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார். 2011-ம் ஆண்டில் உலக அமைதிக்கான குழந்தைகள் விருதுக்கு மலாலாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கும் `டிஸ்கவரி எஜுகேஷன்' நிறுவனம் மலாலாவின் வாழ்கை வரலாற்றைப் பாடமாகச் சேர்த்திருந்தது. பெண் கல்வியை ஆதரித்துப் பேசியதால் மலாலா சந்தித்து வந்த அச்சுறுத்தல்கள், அவரின் பள்ளிக்காலம், சிகிச்சைக்காலம் போன்ற எல்லாவற்றையும் விவரிக்கிறது இந்தப் பாடம். இதுதவிர, இங்கிலாந்தைச் சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழங்கிய 2013-ம் ஆண்டின் மனித உரிமைக்கான விருதையும் பெற்றார். 2014-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை மலாலா, இந்திய சிறார் உரிமைக்காகச் செயல்பட்ட கைலாஷ் சத்யார்த்தியுடன் சேர்ந்து பெற்றார்.விருதுகளும் பாராட்டுகளும் ஒருபுறம் குவிந்தவண்ணம் இருக்க, கொலை மிரட்டல்களும் மலாலாவைப் தொடர்ந்தன. அவரின் பெயரில் போலி முகநூல் கணக்குகள் தொடங்கப்பட்டன. இவரை `மதத்துக்கு எதிராகக் குரல்கொடுப்பவள்' எனக் கூறி கொலை செய்துவிடலாம் என்று தாலிபான்கள் முடிவெடுத்திருந்தார்கள். அதேபோல் துப்பாக்கிக் குண்டுகளும் மலாலாவை நோக்கிப் பாய்ச்சப்பட்டன. அவர் வீழ்ந்தவுடன் கட்டாயம் மரணத்தை எய்துவார் என எண்ணிய தீவிரவாதிகளுக்கு, மலாலாவின் பேச்சுதான் செவிகளை நனைத்தது.

உலகம் முழுவதும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்த பிறகும் `உயிருடன் திரும்பி வந்தால் மீண்டும் கொள்வோம்' எனக் கூறும் தாலிபான்களின் ஆணவத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து கல்விக்கான பாதையை வகுத்த பெண்களில் மலாலா முக்கியமானவர். ``நான் தாலிபான்களால் சுடப்பட்டவள் என அறியப்பட விரும்பவில்லை. மாறாக, பெண் கல்விக்காகப் போராடியவள் என்றே அறியப்பட விரும்புகிறேன்"
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -