சவால்கள் நிறைந்த ஐந்து தசாப்தங்களை ஊடகப் பணிக்காக அர்ப்பணித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் இன்று கௌரவிக்கப்படவுள்ளார்.
இதனையொட்டி அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் அவர்களை வாழ்த்திக் கௌரவிக்கும் 'பொன்விழா' வைபவம் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர்; சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசனம் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பொன்விழாக் காணும் ஊடகவியலாளர் சலீமின் 'பொன்விழா' வைபவத்திற்கு பிரதம அதிதியாக வர்த்தக வாணிபத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாட் பதியுடீன் அவர்களும், கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா அவர்களும் விஷேட அதிதியாக முன்னால் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவர்களோடு பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்,. பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் என பெரும்திரளானோர் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். இவ்விழாவின் சகல ஏற்பாடுகளையும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் மேற்கொண்டுள்ளதோடு சம்மேளத்தினால் பொன்விழாக் காணும் சலீம் என்ற தலைப்பில் பொன்விழா சிறப்பு மலரும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
