ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
யுத்தத்தினால் அழிவடைந்திருந்த மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் நிலையம் 31 வருடங்களின் பின்பு சனிக்கிழமை (29.07.2017) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மாதிபர் யாகொட ஆராச்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் மாதிபர் பூஜித் ஜயசுந்தர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்தார்.
வெல்லாவெளியில் உள்ள பொலிஸ் நிலையம் கடந்த கால யுத்தத்தினால் அழிவடைந்திருந்தது.
சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் ஒரு கோடி ரூபா நிதியில் கட்டிமுடிக்கப்பட்டு பழைய பொலிஸ் நிலையம் இருந்த அதே இடத்தில் தற்போதைய புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்டுள்ளது.
இப் பொலிஸ் நிலையத்தில் ஆயுத களஞ்சியம், பொறுப்பதிகாரி அலுவலகம், கடமை பொலிஸ் உத்தியோகஸ்தர் அலுவலகம், இரண்டு சிறைக்கூடங்கள், தொலைபேசி இயக்குனர் அலுவலகம், பொலிஸ் விடுதி அலுவலகம் உட்பட கட்டிடத்தொகுதி என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குள் 31 ஆயிரம் பொதுமக்கள் உள்ளடங்குகின்றனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், பிரதியமைச்சர் எம்.எஸ்.எம். அமீரலி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கே. கருணாகரம், எம். நடராஜா, என். கிருஸ்ணப்பிள்ளை, பிரதி பொலிஸ் மாதிபர், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், மாவட்ட அரச அதிகாரிகள், மதப்பெரியார்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.