மூதூர் மாணவிகள் மூவர் துஷ்பிரயோகம் - கிழக்கு மாணவர்களை கண்டன பகிஷ்கரிப்புக்கு அழைப்பு..!

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
திருகோணமலை மாவட்டம் மூதூர் கல்வி வலயத்திலுள்ள பெரியவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதான விடயத்தைக் கண்டிக்கும் வகையிலும் நடந்த சம்பவத்திற்கு நீதி விசாரணையோடு தண்டனை பெற்றுக் கொடுக்கக் கோரியும் மாகாணம் தழுவிய அனைத்து மாணவர் ஒரு நாள் பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் புதன்கிழமை 31.05.2017 விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மூதூர் பெரியவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆரம்பப்பிரிவு மாணவிகள் மூவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 28.05.2017 பிரத்தியேக வகுப்பிற்குச் சென்ற வேளையில் சில காமுகர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். அண்மைக் காலங்களில் வடக்கு கிழக்கில் மாணவர்கள் அதிகம், இது போன்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீட்டில், வேலைத் தலங்களில் மட்டுமின்றி பாடசாலைகளில், பிரத்தியேக வகுப்புக்குச் செல்லுமிடங்களில் அதிபர்கள் ஆசிரியர்களின் செயற்பாடுகளினாலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதனைக் கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்களும் புத்திஜீவிகளும் மாத்திரம் செயற்பட்டால் போதாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் பொலிஸார் நீதிக்குத் தலைவணங்கி செயற்பட வேண்டும். குற்றச் செயலில் ஈடுபடுவோரை செல்வந்தர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், இனம் மதம் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் பார்த்து சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தக் கூடாது.

ஆனால், அரசியல்வாதிகளோ பொலிஸாரோ சமத்துவமான நீதியை அழுத்தம் கொடுக்காமல் ஒரு போதும் பெற்றுத் தரப்போவதில்லை. எனவே எமது உரிமையை வென்றெடுப்பதற்கும், எமது அனைத்து மாணவ சமுதாயத்தையும் சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பதற்கும் நாம் போராட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே பாதிக்கப்பட்ட சிறுமியருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க எதிர்வரும் 02.06.2017 வெள்ளிக்கிழமையன்று கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாணவர்களும் இன, மத, மொழி பேதமின்றி பாடசாலையைப் புறக்கணித்து மாணவர்களின் பலத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். இன மத மொழி பேதமின்றி ஒருங்கிணையும் மாணவர் ஒற்றுமையே மாபெரும் சக்தி...!!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -