ஞானசார தேரருக்கு எதிரான நீதி மன்ற அவமதிப்பு வழக்கு நாளை 24 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் கடந்த ஓரிரு தினங்களாக முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை அவரது சேனா தீவிரப்படுத்தியுள்ளமை நாம் அறிந்த விடயமாகும்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி காணாமல் போன ஊடகர் பிரதீப் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை ஹோமாகம மஜிஸட்ரேட் நீதி மன்றத்தில் இடம்பெற்ற போது நீதிமன்றத்தை அவமதித்ததன் பேரிலும் அரச ஊழியர் ஒருவரை அச்சுறுத்தியதன் பேரிலும் துறவி ஞானசார மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்து.
மேன்மறையீட்டு நீதி மன்றில் நாளை 24 ஆம் திகதி விசாரணைக்கு வரும் வழக்கில் குற்றவாளியாக துறவி காணப்படின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். நீதிமன்றத்தை அவமதித்து தண்டணைக்குரிய குற்றத்தை துறவி இழைத்துள்ளதாக அரச வழக்குரைஞர் நாயகம் மேன் முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முறையிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் ஹீரோவாக முனைவதன் மூலம் பல் பரிமாண அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றை துறவி மேற்கொண்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.
முஸ்லிம்களின் அழுத்தத்தின் பேரிலேயே தான் கைது செய்யப்பட இருப்பதாக அவரும் சகாக்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர், இந்த நிலையிலேயே முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திப்பதனை ஜனாதிபதி தவிர்த்துக் கொண்டு வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நாளை துறவி ஞானசார கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிலை வந்தால் ஏக காலத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தாலும் இடம் பெற்றால் எந்தெந்தத் தரப்புக்கள் இலாபமடைவர் என்பதனை முஸ்லிம்கள் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே நாளை எந்தவொரு முஸ்லிம் பிரதேசத்திலும் "ஹர்த்தால்" அனுஷ்டிக்காது இயல்புவாழ்க்கையை முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
அரசியல் மற்றும் சிவில் நடவடிக்கைகளை முஸ்லிம் தலைமைகள் நன்கு சமயோசிதமாக திட்டமிட்டு மேற்கொள்வதே ஆரோக்கியமான அணுகு முறையாகும். அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளும் அரசோடு பங்காளிகளாக உள்ள சக்திகளும் கூட இனவாத சக்திகளை கவனமாக கையல்வதாகவே உணர முடிகிறது.
முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்பு குறித்த விடயங்களில் அவ்வப்பிரதேசங்களில் முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருப்பதோடு கூட்டுப் பொறுப்புடனும் சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்ள வேண்டும்.
ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்.