மத்திய மலை நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மண்சரிவு மற்றும் பாறைகள் சரிவு அபாயம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 98 குடும்பங்களைச் சேர்ந்த 428 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக இம் மாவட்டத்திற்கு கடும் மழை பெய்து வருவதுடன் கடும் குளிரான காலநிலை நிலவி வருகிறது 29.05.2017 அன்று மாலை முதல் பல பிரதேசங்களுக்கு கடும் காற்று வீசி வருகின்றன.
இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழந்துள்ளன. அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் பகுதியில் பாரிய மரம் ஒன்றின் கிளை முறந்து வீழ்ந்ததனால் ஒரு வழி போக்குவரத்தே இடம்பெற்று வந்தன.
மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக அக்கரபத்தனை ஹோல்புறுக் கொட்டகலை யூலிபீல்ட், அப்கோட், காட்மோர், போர்ட்மோர் அட்டன் உட்பட பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்துள்ளனர்.
30.05.2017 அன்றைய தினம் காலை முதல் தொடர்ச்சியாக மழை மற்றும் காற்று கடும் குளிர் காரணமாக பொது மக்களிள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியிருந்தன. இச்சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக காணப்பட்ட தாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியான மழை காரணமாக தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்தன.