கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை எமது மாகாணத்திலுள்ள வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்கு அனுமதியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளை உள்வாங்கும் நடவடிக்கையினை துரிதப்படுததுவதன் ஊடாக அவர்களுக்கான தீர்வை வழங்கி அவர்களின் துயருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதன் போது பிரதமர் மற்றும் ஜனாதிபதி முன்னிலையில் வேண்டுகோள் விடுத்தார்.,
திருகோணமலையில் இடம்பெற்ற யொவுன்புரய இறுதிநாள் நிகழ்வில் உரையாற்றும் போதே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர்,
மட்டக்களப்பில்,அம்பாறையில் ,திருகோணமலை ஆளுனர் மாளிகையின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகளுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என பிரதமரை சந்தித்து கலந்துரையாடிய போது அதற்கென குழுவொன்றை அமைத்து அவர்களுக்கு தீர்வினை வழங்க முன்வந்தமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்களோ,எதிர்ப்பு நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் .அதற்கு யாருக்கும் அநீதி இழைக்காத வகையிலான வௌிப்படைத்தன்மையான பொறிமுறையொன்று உருவாக்கப்ப் வேண்டும்.இதன் மூலம் எமது நாடும் எமது மக்களும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் தலைநிமிர்ந்து வாழ வழிவகுக்கும்,
இவை அனைத்தையும் சாத்தியப்படுத்த அதிகாரப் பகிர்வு மிக முக்கியமானதாகும்,ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமிடத்து மாத்திரமே அனைத்து சமூகங்களுக்கிடையேயான சந்தேகங்கள் களையப்பட்டு ஒற்றுமையாக முன்னேற முடியும் என்பதுடன் இந்த நாட்டில் தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளுக்கும் சமமான அந்தஸ்த்து உறுதிப்படுத்தப்படுவதன் ஊடாக பல அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
அது மாத்திரமன்றி இந்த நாட்டில் வாழும் அனைவரும் இரு மொழிகளிலும் பேசக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன் வடக்கிற்கும் கிழக்கிற்கும் தெற்கிலிருந்து அதிவேகப் பாதையொன்று உருவாக்கப்படுவதன் ஊடாக பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இவ்விருமாகாணங்களுக்கும் பலம் மிக்க கேந்திரஸ்தானமாக அமையும் என்பதை இவ்விடத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டும்,
அத்துடன் பாரிய வளங்களை கொண்ட இந்த மாகாணத்தில் விமானநிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் வலியுறுத்திக் கூறுவதுடன் துறைமுகராக திருகோணமலை நகரை அபிவிருத்தி செய்ய முன்வந்தமைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன் ஆக்கபூர்வமான முதலீடுகளை கிழக்கில் ஊக்குவித்து அவற்றை எமக்கு தடையின்றி முன்னெடுக்க வழிவகைகள் மேற்கொள்ளப்படுமானால் கிழக்கின் இளைஞர் யுவதிகள் நாளை குறித்த நம்பிக்கையுடன் தமது கல்விகளைத் தொடர்ந்து தொழில்வாய்ப்புக்கள் குறித்து எவ்வித சந்தேகமுமின்றி வளமான வாழ்க்கையை முன்னெடுக்க ஏதுவாக அமையும்,
இன்று அரசியல் நிர்வாக ரீதியிலும் கிழக்கு மாகாணம் முழு இலங்கைக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றது என்பதுடன் நாட்டின் முக்கிய பிரதான கட்சிகளான ஐக்கியத் தேசியக் கட்சி,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இணைந்து இன்று ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்து வௌிப்படைத்தன்மையுள்ள ஆட்சியை முன்னெடுத்து வருகின்றோம்.
அதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்ரமசிங்க,எதிர்க்கட்சித்தலைவர் இரா, சம்பந்தன் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் நன்றி கூறியாக வேண்டும்.
அத்துடன் யுத்தத்திற்கு பின்னர் மக்களுடைய உள்ளங்களை இணைக்கும் பணியினை யாரும் செய்ய முன்வரவில்லை யொவுன்புரய போன்ற நிகழ்ச்சிகளின் ஊடாக அவ்வாறான நிலையினை ஏற்படுத்தி நாளை சமூகத்தில் சந்தேகங்கள் களைந்து இன மத பேதங்களை மறந்து சுபீட்சமிக்க சமூகமாக நம் சமூகம் வாழ வழியினை ஏற்படுத்தும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.