எப்போது தேர்தல் நடைபெறும் என்ற ஆர்வத்தோடு அனைவரும் அந்த தினத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ... ஆனால் இன்னும் வேட்பாளர்கள் கட்சிகளால் அடையாளப் படுத்தப்படாத நிலையில் தேர்தலில் போட்டியிட ஆசை கொண்டவர்கள் புதிய அமைப்புகளோடும் பண மூட்டைகளோடும் அரசியல் சேவை செய்வதற்காக களம் இறங்கியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது ..
தான் சார்ந்த சமூகத்தின் தேவைகளையும் , பிரச்சனைகளையும் , உரிமைகளையும் அரசாங்கத்திடம் கொண்டு சேர்த்து அதற்குரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பவர்தான் மக்கள் பிரதிநிதியாகும் ... அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் அல்லது மாகாணசபை உறுப்பினராக இருக்கலாம் அல்லது பிரதேச சபை உறுப்பினராக கூட இருக்கலாம் . ஆனால் அந்த தேர்தலில் போட்டியிட கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற பொறுப்பு யாருக்கு உள்ளது என்று பார்த்தால் ஒன்று அந்த பிரதேச மக்களின் செல்வாக்கினைப் பெற்ற கட்சிகளுக்கு இருக்கலாம் அல்லது பொதுமக்கள் தெரிவு செய்யக்கூடிய ஒருவராக இருக்கலாம் ..
எமது உரிமைக்காக போராட உள்ள எமது வேட்பாளரிடம் நாம் எதற்காக பணம் வாங்க வேண்டும் அல்லது அவர் எதற்காக பணத்தினை செலவு செய்ய வேண்டும். அவர் சேவை செய்ய வேண்டும் என்றால் தேர்தலில் வெற்றி பெற்ற பின் அரசாங்க நிதியில் இருந்து சேவை செய்ய வேண்டும் . அல்லது தனது ஹலாலான சம்பாத்தியத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் இறைவனின் திருப்தியினை மட்டும் நாடி தர்மம் செய்ய வேண்டும் ..
ஆனால் தற்போதைய சூழ்நிலையானது அரசியல் காலத்தில் மட்டும் இளைஞர்களுக்கு பணம் கொடுப்பது , கழகங்களுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது , சிவில் அமைப்புகளுக்கு நன்கொடை வழங்குவது என்று தமது அரசியல் அடைவுகளை மாத்திரம் இலக்காக கொண்டு சொந்த பணத்தில் இருந்த செலவு செய்கின்றனர் ...
மக்கள் பிரதிநிதியாக சென்று எமது உரிமைக்காக போராட இருப்பவர் , அந்த அமானித பொறுப்பை சுமக்க இருப்பவர் எதற்காக இவ்வாறு பணங்களை செலவு செய்ய வேண்டும் . தேர்தலில் வெற்றி பெற்ற பின் தான் செலவு செய்த பணத்தை அரசியல் சந்தையில் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பதால் தானே தவிர வேறில்லை ...
எனவே எனதருமை சமூகமே அரசியல் காலத்தில் நமது பெருமதிமிக்க வாக்குகளை பேரம் பேசுபவர்களுக்கு நீங்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். மதிப்பு மிக்க எனது இளைஞர் சமூகமே வேலை வாய்ப்பிற்காகவோ அல்லது அன்பளிப்பிற்காகவோ சோறம் போகாமல் உரிமை அரசியல் பேசுபவர்களாக நீங்கள் மாற வேண்டும் ..
" நக்குன்டோர் நாவிலந்தார் " என்று சொல்வார்கள் ...
எனவே எந்த எதிர் பார்ப்பும் இன்றி எமது உரிமைக்காக போராடும் ஒருவரை தெரிவு செய்து நம் உரிமை மீட்க போராடும் சமூகமாக நாம் மாற வேண்டும் .. ஊரான் வீட்டு கோழி அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதும் அலிமா கண்டுகளுக்கு அழிவுகள் ஆரம்பம் ...
பாறுக் றியாஸ்,
செம்மண்ணோடை.