'அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இருந்து டெங்கு பூண்டோடு ஒழித்தல்' எனும் தொனிப் பொருளில்; அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் ஆகியோரது வேண்டுகோளின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டத்தை, முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் கடந்த 2017.03.25ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.
நாடளாவிய ரீதியில் டெங்குக் காய்ச்சல் அதிதீவிரமாகப் பரவி வருவதுடன், மரணங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. கிழக்கு மாகாணத்தில் இந்நோயினால் 18 பேருக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளதுடன், தற்போது எமது பிரதேசத்திலும் டெங்குக் காய்ச்சல் அதி தீவிரமாகப் பரவி வருவது அவதானிக்கப்பட்டு வருகிறது. எனவே, தேசிய அபாயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள டெங்கு நோயை ஒழிப்பதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், 32 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட இப்பிரதேசத்தில் சகல கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியவாறு மேற்கொள்ளப்படும் இவ் வேலைத்திட்டம் எதிர்வரும் 08ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுவதுடன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் காணப்படும் குடியிருப்பு வீடுகளைப் பரிசீலித்தல் மற்றும் பிரதான வீதியில் உள்ள வடிகான்களைத் துப்பரவு செய்தல், பள்ளிவாசல்கள் மூலம் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகள் தற்போது மும்மூரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ் வேலைத் திட்டத்திற்கு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஆகியன பூரண அனுசரணை வழங்குவதுடன், களப்பரிசீலனை நடவடிக்கைகளில் இளைஞர் படையணி, இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி, ஹீறோ விளையாட்டுக் கழகம், அல் ஜென்னா விளையாட்டுக் கழகம், அந்நபா, அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னனி போன்ற வலிந்துதவு தொண்டு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
இவ் வேலைத்திட்டத்தின் மூலம் மரணத்தை உண்டுபண்ணும் கொடிய டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாத்து இப்பிரதேசத்தை டெங்கற்ற பிரதேசமாகவும், ஏனைய பிரதேசங்களுக்கு முன்மாதிரியான பிரதேசமாகவும் மாற்றியமைப்பதே தமது இலக்காகும் என செயலாளர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.