எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு 2017.04.25ஆந்திகதி-செவ்வாய்கிழமை பிரதித் தவிசாளர் கௌரவ. இந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
இம்மாகாண சபை அமர்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிப்பால சிரிசேன அவர்களினால் வர்த்தமாணி அறிவித்தலாக வில்பத்து பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் பூர்வீக காணிகள் உள்ளடங்கிய பகுதிகளை அவசர அவசரமாக பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடணப்படுத்தியமை தொடர்பாக தனிநபர் பிரேரணை ஒன்றினை முன்வைத்து உரையாற்றினார்.
பிரேரணையினை முன்வைத்து சபையில் உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள்...
முப்பது வருட கால யுத்தத்தின்போது சுமார் 75000 இற்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள் இரவோடு இரவாக 24 மணித்தியாலத்திற்குள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதன் விளைவுதான் இன்று அந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்தில் குடியேறுகின்றபோது பல சர்ச்சைகளையும் சவால்களையும் எதிர்நோக்குகின்ற ஒரு விடயமாக மாறியிருக்கின்றது.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் இந்நாட்டின் ஜனாதிபதியாக கடமையேற்றபோது சிறுபான்மை சமூகத்தினர் அவர் மீது பாரியதொரு நம்பிக்கையினை வைத்திருந்தனர். கடந்த 2012ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச அவர்கள் வில்பத்து பிரதேசத்திலுள்ள காணிகளை ஒதுக்குக்காணி என்று 2012ஆம் ஆண்டு பிரகடணப்படுத்தியிருந்தார்.
அதன் பிற்பாடு தற்போதுள்ள ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவர்கள் வில்பத்து பிரகடன விடயத்தில் இனரீதியாக செயற்படும் அமைப்புக்களான தேசிய சங்க நிறுவனம் (National Sanga Organization), சூழல் பாதுகாப்பு முகவர் (Environmental Protection Agency), உயிரியல் பாதுகாப்பு மையம்(Bio-Concervation Centre), சூழல் குழுமம் இலங்கை(Envirorment Forum of Sri Lanka) மற்றும் வில்பத்து பாதுகாப்பு ஒன்றியம்(Protect Wilpattu organization) போன்ற நிறுவனங்கள் இதன் பின்னனியில் இருந்துகொண்டு அந்த முடிவுகளை மாற்றுகின்ற சக்தியாக மாறி இருக்கின்றது என்றால் அது மிகையாகாது என நான் நினைக்கின்றேன் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து தனது உரையில் இது குறிப்பாக தேசிய ரீதியான அமைப்புக்கள் இந்த ஐந்து அமைப்புக்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களை 2015.06.05ஆந்திகதி சந்தித்து மிகப்பெரும் அறிக்கை ஒன்றினை வழங்கியிருந்தனர். இதன் பிரகாரம் அந்த அறிக்கையினை வைத்துக்கொண்டு ஜனாதிபதி அவர்கள் அவசர அவசரமாக 2017.03.24ஆந்திகதி இந்த வர்த்தமாணி அறிவித்தலை செய்திருந்தார்.
அதுவும் வெளிநாட்டு விஜயத்தின்போது ரஷ்யா நாட்டிலே இருந்துகொண்டு வர்த்தமாணி அறிவித்தலுக்கு ஒப்பமிட்ட விடயம் பாரிய அச்சத்தினையும், சந்தேகத்தினையும் ஏற்படுத்தி இருக்கின்றது. நேர்மையான எந்தவொரு விடயத்தினையும் நாங்கள் செய்வதற்கு அவசரப்பட வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது. ஆனால் இவ்வாறு நடந்துகொண்ட விடயம் எங்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த பிரதேசத்திலே குறிப்பாக முசலி பிரதேசத்தில் முசலி தெற்கு என்கின்ற பிரதேசத்தில் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு 1871 தொடக்கம் 1981ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற கணக்கெடுப்பின் பிரகாரம் அந்த மக்கள் வாழ்ந்ததுக்குரிய அனைத்து விதமான ஆதாரங்களும் இருக்கின்றன். அவ்வாறு இருக்கும்போது இப்பிரதேசத்தினை பாதுகாக்கப்பட்ட வனம் என்று பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பொழுது நாங்கள் சட்டரீதியான விடயங்களுக்கு வரலாம் என நினைக்கின்றேன். அதாவது காடுகளை வர்த்தமானிப்படுத்துகின்ற போது காடுகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றது. முதலாவது forest reserve எனப்படும் ஒதுக்குக் காடுகள் என்றும் இரண்டாவதாக conservation forest எனப்படும் பாதுகாக்கப்பட்ட வனமாகவும் வகைப்படுத்தப்படும். இவ்விரண்டு வகையான காணிகள் தொடர்பாக சட்டதிட்டங்கள் அனைத்தும் முற்றிலும் மாறுபட்டவையாகும்.
ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் பிரகடணப்படுத்தும்போது ஒதுக்குக்காடாக இருந்த இந்த காணிகள் தற்பொழுது பாதுகாக்கப்பட்ட வனம் என்று மாறி இருக்கின்றது.
எனவே இந்த காணிக்குள் யாரேனும் ஒருவர் அத்து மீறுவது, அல்லது விறகுகள் எடுத்து வந்தாலும்கூட குறைந்த பட்சம் இருபதாயிரம் ரூபா தொடக்கம் இரண்டு இலட்சம் ரூபா வரை அவர்களுக்குரிய தண்டப்பணத்தினை விதிக்க முடியும். அது மாத்திரம் அல்லாது நேரடியாக ஏழு வருட கால சிறைத்தண்டனையும் வழங்கக்கூடிய வகையில் பாரியதொரு அச்சுருத்தலான விடயம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
இந்த பாதுகாக்கப்பட்ட வனத்திற்குள் யாரும் உட்செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதோடு யாரனுமொருவர் இத்தகைய காணி ஒன்றிற்குள் அத்துமீறி நுழையும் பட்சத்தில் அவருக்கு அதியுச்ச பட்ச தண்டனையாக 7 வருடகால சிறைத்தண்டனை மற்றும் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு மேற்படாத இருபதாயிரத்திற்கு குறையாத தண்டப்பணம் என்பனவற்றினையும் அறவிட முடியும்.
இனவாதிகள் முன்வைக்கும் ஒரு விடயம் புதிதாக மக்கள் குடியேற்றப்பட்டுள்ள பிரதேசமானது இந்த வர்த்தமாணி அறிவித்தல் செய்யப்பட்டுள்ள பகுதிக்குள் உள்ளடக்கப்படவில்லை என்பதாகும். தற்போது அந்த பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்ட வனமாக எல்லைப்படுத்தப்படுகின்ர போது அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் பின்புற சுவர்களை ஒருமித்ததாக அந்த எல்லை கோடுகள் குறுக்கறுத்து செல்லுகின்றது. இதனால் அந்த மக்கள் தமது வீட்டு பின்சுவறிற்கு அப்பால் ஒரு சென்ரிமீற்றர் கூட நகர முடியாத அளவிற்கு பாதுகாக்கப்பட்ட வனம் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனூடாக அந்த மக்கள் எதிர்காலத்தில் தமக்கான மதஸ்தானங்கள், கலச்சார கட்டடங்கள், மைதானங்கள், மயானங்கள் போன்ற எவற்றினையும் அமைக்க முடியாத ஒரு நிலை காணப்படுகின்றது.
இதனை நாங்கள் பார்க்கின்றபோது அங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை திட்டமிட்ட வகையில் அங்கிருந்து துரத்தியடிக்கின்றதொரு செயற்பாடாகவே இதனை பார்க்கின்றோம். ஆகவே இவ்விடயத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் வர்த்தமாணி அறிவித்தலை மீளப்பெறுவதன் ஊடாக இந்த மக்களுக்கு சிறந்தாரு விடிவினை வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டு தனது சபை உரையினை நிறைவு செய்தார்.
இதனைத்தொடர்ந்து மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வில்பத்து சரணாலயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிப்பால சிரிசேன அவர்களினால் புதிதாக வெளியிடப்படுள்ள வர்த்தமாணி அறிவித்தலை உடனடியாக ரத்துசெய்யுமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொள்வதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதித் தவிசாளர் கௌரவ. இந்திரகுமார் அவர்களினால் சபையில் அறிவிக்கப்பட்டது.