சட்டத்தின் அனுமதியுடன் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் நடந்தது மஹிந்த ஆட்சியில்தான் ஆரம்பம் என அரசியல் வரலாறு தெரியாத சிலர் கூறுகிறாகள். மஹிந்த ஆட்சியில் சட்டம் பார்த்துக்கொண்டிருக்க முஸ்லிம்களுக்கெதிராக நடந்த ஒரேயொரு சம்பவமான அளுத்கம சம்பவம் ஒரே இரவில் விடிவதற்கு முன்னரே சட்டம் கட்டுப்படுத்தியது. அதற்கு முன்னரே கட்டுப்படுத்தாதது தவறுதான். ஆனாலும் வேறு ஊர்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால் இதை விட பயங்கரமான சட்ட அனுமதியுடன் அத்துமீறல்கள் வரலாற்றில் நடந்தன. 90ல் பிரமதாச unp அரசின் அனுமதியுடன் சட்டம் கை கட்டி வாய் பொத்தி நிற்க கிழக்கு முஸ்லிம்கள் பலர் புலிகளால் பிடித்து செல்லப்பட்டனர். இன்று வரை அவர்கள் பற்றிய தகவல் இல்லை. அவர்கள் பொலிசாரும் இராணுவமும் பார்த்துக்கொண்டிருக்க அவர்கள் கண் முன்பாகவே பிடித்துச்செல்லப்பட்டனர்.
அதே போல் மாவனல்லை கலவரத்தை சட்டம் 2 நாட்கள் பார்த்துக்கொண்டிருந்தது. 2001ல் வாழைச்சேனையில் சட்டமும் நீதியும் வாய் பொத்தி கைகட்டி நிற்க முஸ்லிம்களின் இரு உடல்கள் பகிரங்கமாக எரிக்கப்பட்டன. நல்லாட்சியில் சட்டம் பார்த்து நிற்க பெஷன் பெக் எரிக்கப்பட்டது. cctv கமெராவையும் சட்டம் பறித்து சென்றது. இவை எல்லாம் மஹிந்த ஆட்சிக்கு முன்பே சட்டம் அனுமதியுடன் நடைபெற்ற கொடூரங்களாகும். இவை போன்ற பல விடயங்கள் நாட்டில் நடை பெற்றுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சொல்வதன் மூலம் அளுத்கம சம்பவத்தை யாரும் நியாயப்படுத்த முடியாது. தவறு யார் செய்தாலும் தவறுதான். அதேவேளை தவறுகளை விமர்சிக்கும் போது நியாயத்தின் அடிப்படையில், உண்மையாக விமர்சிப்பதே இஸ்லாமியர்களின் பண்பாக இருக்க வேண்டும். உலமா கட்சியை பொறுத்தவரை யாரையும் உண்மைக்கு மாற்றமாக தலையில் தூக்கி வைக்காது. யார் நல்லது செய்தாலும் அவர்களை பாராட்டுவோம். யார் சமூகத்துக்கு தீங்கு செய்தாலும் அவர்களை கண்டிப்போம். மஹிந்த அரசில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத நடவடிக்கைகளின் சூத்திரதாரிகளை கைது செய்ய தயங்கிய போது மஹிந்த அரசுக்கு பாராளுமன்றத்துக்கு வெளியே ஆதரவளித்த உலமா கட்சி தனது ஆதரவை விலக்கியது.
இவ்வாறு செய்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சி மட்டுமே. அதே போல் மஹிந்தவுடன் இருந்த இனவாதிகள் தேர்தலின் போது வெளியேறியதன் காரணமாக நாம் மீண்டும் மஹிந்தவுக்கு ஆதரவளித்து நல்லாட்சியை நம்ப முடியாது என தெரிவித்தோம். இன்று முஸ்லிம்கள் நல்லாட்சியை பற்றி தம் தலையில் தாமே அடித்துக்கொள்கிறார்கள்.
மஹிந்த ஆட்சியில் தவறு நடக்கவே இல்லை என நாம் ஒரு போதும் சொல்லவில்லை. ஆனால் சந்திரிக்காவின் ஆட்சி, ஐ தே க ஆட்சி என்பவறோடு ஒப்பிட்டு பார்க்கையில் மஹிந்தவின் காலத்தில் குறைவான சம்பவங்களே முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்றது என்பதுடன் மஹிந்தவின் காலத்திலேயே முஸ்லிம்கள் மிக அதிக நன்மைகளை பெற்றனர் என்பதே எமது உறுதியான வாதம்.
இந்த நாட்டின் வரலாற்றை நாம் பார்க்கும் போது ஐ தே க காலத்தில்தான் சிறுபான்மை மக்களுக்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் இனவாதம் மிக அதிகமாக வளர்ந்தது. 1960களில் டி எஸ் சேனாநாயக்க அம்பாரை மாவட்ட முஸ்லிம்களை கல்லோயா திட்டம் என்ற பெயரில் விரட்டி அடித்தார். அதன் பின் அம்பாரையில் முஸ்லிம்களுக்கு வியாபாரம் செய்ய கடைகள் கொடுக்க கூடாது என்ற சட்டத்தை அமுல் படுத்தினர். பின்னர் 83ல் முஸ்லிம்களும் அடி வாங்கினர். கொழும்பு முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டன. 87ல் ஜே ஆர் கிழக்கை வடக்குடன் இணைத்து முஸ்லிம்களை அடிமையாக்கினார். தமிழ் முஸ்லிம் மோதல்களை உருவாக்கினார். 90ல் பிரேமதச புலியுடன் சேர்ந்து கிழக்கு முஸ்லிம்களை கொன்றார். புலிகளின் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் ஐ தே க எடுக்கவில்லை. பின்னர் புலிகள் அவர் மார்பில் பாய்ந்த போதே உண்மையை உணர்ந்தார்கள்.
2001ல் ரணில் பிரதமராக இருந்த போது கிழக்கு முஸ்லிம்களை மொத்தமாக புலிக்கு விற்றார். 98ல் கலகெதர கலவரம் பலராலும் மறக்க முடியாது. இப்போது ரணிலின் ஆட்சியில் பட்டியல் போட்டு முடிக்க முடியாத அளவு இனவாதம் தலை விரித்தாடுகிறது.
ஆகவே முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் என்பது ஐ தே கவினால் ஆரம்பிக்கப்பட்டு ஏனைய அரசுகளினால் வளர்த்தெடுக்கப்பட்டது. இதில் விசேசம் என்னவென்றால் சுதந்திரத்துக்கு பின் பெரும்பாலான முஸ்லிம்கள் ஐ தே கவுக்கு வாக்களிப்பவர்களாக இருந்தும் அக்கட்சியினர் முஸ்லிம்களுக்கெதிராகவே செயற்பட்டனர் என்பதை முஸ்லிம் சமூகம் இன்னமும் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்.
எனவே நாம் இனவாதத்தை விதைத்தவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மஹிந்த ஆட்சியின் இறுதி இரண்டு வருடங்களில் நடைபெற்ற இனவாத செயல்களின் பின்னணியிலும் ஐ தே கவும் ஹெல உறுமயவும் இருந்தன என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. அவற்றின் பின்னால் மஹிந்த அரசு இருந்திருந்தால் இந்த அரசினால் இனவாதம் கட்டுப்படுத்தப்பட்டு மஹிந்த அரசில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும். இது எதுவுமே நடக்காததன் மூலம் இவர்களே மஹிந்த ஆட்சியில் இரகசியமாக செயற்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
முபாறக் அப்துல் மஜீத் மௌலவி,
தலைவர் - உலமா கட்சி.