இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் காஷ்மீர் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் காஷ்மீர் மற்றும் பலஸ்தீன் சிறுவர்களின் நிலை அங்கு மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளினால் மிகவும் மோசமடைந்திருப்பதாக அக்குறணை மாணவி ஷாமா முயீஸ் ஐக்கிய நாடுகள் உபமாநாட்டில் ஆற்றிய உரையின்போது தெரிவித்தார்.
அக்குறணையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் College Saint Exupery யில் கல்வி கற்று வரும் ஷாமா முயிஸ் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 34 ஆவது மனித உரிமை மாநாட்டு அமர்வில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் உரிமை உப மாநாட்டில் உரையாற்றினார்.
அவர் அங்கு ஆற்றிய உரையை தமிழில் தருகின்றோம்.2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆந் திகதி இந்தியப் படையினரால் கப்வாறாப் பகுதியில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து வயதான கின்ஸா மற்றும் 14 வயதான அமீன் ஆகியோரின் கொலைகளை கண்டித்துக் கொண்டு எனது உரையினை ஆரம்பம் செய்கின்றேன்.
ஜம்மு காஷ்மீர் ஆள்புலப் பிரதேசத்தை இந்தியப் படையினர் ஆக்கிரமித்ததிலிருந்து மனித உரிமை மீறல்கள் அந்த மாநிலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்த அடக்குமுறை சட்டத்திற்கு புறம்பான கொலைகள், வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுதல், சித்திரவதை, பாலியல் வன்புணர்வு, இடையூறு மற்றும் முறையற்ற விதத்தில் தடுத்துவைத்தல் போன்ற மனித உரிமைகள் துஷ்பிரயோகம் போன்றவற்றால் வெளிப்படுத்தப்படுகின்றன.
கடந்த ஆண்டுகளைப் போலவே 2016 ஆம் ஆண்டு புறநடையான வன்முறைகள் தொடராக நடைபெற்ற ஆண்டாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவமயப்படுத்தப்பட்ட அடக்குமுறை, ஆயுதப் படையினருக்கு மறைமுக அனுமதி வழங்கப்பட்டு அரசாங்க ஆதரவுடனான பாகுபாடு காட்டும் வன்முறைகள், அதிகரித்த மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், காயப்படுத்தல்கள், சட்டவிரோத தடுத்துவைப்புக்கள், சித்திரவதை, பாலியல் வன்செயல்கள், காணாமலாக்கப்படுதல், எரியூட்டல்கள் மற்றும் பொதுமக்கள் சொத்துக்களை அழித்தல், சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒன்றுகூடுவதைத் தடுக்கும் கட்டுப்பாடுகள், ஊடகங்களுக்கு போடப்படும் வாய்ப்பூட்டு, தொடர்பாடல் மற்றும் இணையத்தள செயற்பாடுகளில் உரிமை மீறல்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இந்தியப் படையினரால் பயன்படுத்தப்படும் உருண்டைத் துப்பாக்கிகளால் சுடப்பட்டு பெரும் எண்ணிக்கையிலான காஷ்மீர் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், கண்பார்வையினை இழந்துள்ளனர் மற்றும் உடலியக்கம் இல்லாத நிலைக்கும் ஆளாகியுள்ளனர். உருண்டைத் துப்பாக்கி ரவையொன்றினுள் 500 வரையான சன்னங்களைக் கொண்டிருக்கும். குறித்த ரவை வெடிக்கும்போது அதனுள் இருக்கும் சன்னங்கள் அனைத்து திசைகளிலும் சிதறுகின்றன.
இந்த உலோகச் சன்னங்கள் ஆறு சதுர அடி வடிவில் 60 யார் வரையான தொலைவு வீச்செல்லை வரை அகப்படும் அனைவரையும் அது தாக்கும். துப்பாக்கி ரவைகளை விட இது குறைவான பாதிப்பை ஏற்படுத்தினாலும் கண்களில்படுமானால் பாரதூரமான காயங்களை ஏற்படுத்துகின்றன. அதேபோன்று பலஸ்தீனத்தில் சிறுவர் பராயத்தினர் தடுத்து வைக்கப்படும் தகவல்கள் பற்றியும் தங்களது கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
சிறுவர் பிரகடனத்தின் உறுப்புரை 1 சர்வதேச சட்டத்தின் பிரகாரம் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களை சிறுவர்களாகக் கருதுகின்றது.
2000 ஆம் ஆண்டு தொடக்கம் செப்டம்பர் 2015 வரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் 8500 பலஸ்தீனச் சிறுவர்களைக் கைது செய்து சிறைத் தண்டனை விதித்துள்ளனர். கற்களை வீசியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் சிறுவர்களுக்கு இராணுவ நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கும் ஒரேயொரு நாடு இஸ்ரேலாகும். இவ்வாறான நீதிமன்றங்களினால் வருடாந்தம் 500 தெடக்கம் 700 பலஸ்தீனச் சிறுவர்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்றனர். இவ்வாறான சிறுவர் கைதிகள் பெரிய கைதிகள் போலவே கணிக்கப்படுகின்றனர். அவர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்,
அநீதியான முறையில் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர். இது அவர்களது எதிர்காலத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி அடிப்படை உரிமைகளை மீறுவதோடு சர்வதேச சட்டங்கள் விதிமுறைகள் மற்றும் சிறுவர் பிரகடனத்தையும் மீறுபவையாக உள்ளன.
பலஸ்தீன சிறுவர் கைதிகளின் நிலை எண்ணிக்கையில்
* 762 சிறுவர் கைதிகள் ஜெரூஸலத்தைச் சேர்ந்தவர்கள்
* 7 சிறுவர்கள் அரசியல் கைதிகளாக உள்ளனர்.
* 443 சிறுவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
* 2015 ஒக்டேபர் 1 ஆம் திகதிக்கும் 2016 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கும் இடையே 1000 சிறுவர் கைதிகள்
* 2179 சிறுவர்கள் 2015 ஆம் ஆண்டின்போது தடுத்துவைப்பு சிறைச்சாலைகளில் சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்படும் மிகக் குரூரமான
அணுகுமுறைகள்;
1. விசாரணையின்போது கடுமையாக தாக்கப்படுதலும் சித்திரவதைக்குள்ளாக்குதலும்
2. கைதின்போது மோப்ப நாய்களைக் கொண்டுவருதல்.
3. மனிதக் கேடயங்களாக அவர்களைப் பயன்படுத்தல்.
4. காயமடைந்த சிறுவர்களை அவர்களது மோசமான உடல் நிலையினையும் கருத்திற்கொள்ளாது விசாரணை நிலையங்களுக்கு மாற்றுதல்.
5. தனிமைச் சிறையில் அடைப்பதோடு குடும்பத்தினர் மற்றும் சட்டத்தரணிகளுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியாதவாறு தடுத்தல்.
6. நோயுற்ற சிறுவர் கைதிகளை வைத்தியசாலையில் அவர்களது கட்டிலுடன் சேர்த்து கைவிலங்கிடுதல்
உள்ளிட்ட விடயங்களை ஷாமா முயீஸ் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.ஷாமா முயீஸ் முன்னாள் அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் வஹாப்தீன் (வஹாப் மாஸ்டர்) மற்றும் அக்குறணையின் பிரபல சமூக சேவையாளர் மவ்ஜூத்தின் பேத்தியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.