உள்ளூராட்சி சபைத்தேர்தலை சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மைக்கட்சிகளின் பிரதிநிதித்துவத்துக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் நடாத்தும்படி மல்வத்து பீட மகா நாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதேவேளை, இன மற்றும் மத ரீதியான அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு இடமளிக்க வேண்டாமெனவும் இது நல்லிணக்கத்துக்குப் பாதிப்பாக அமையுமெனவும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வரகாகொட ஞானரத்ன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் நேற்று முன்தினம் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டார். அச்சந்தர்ப்பத்திலே பீடாதிபதிகள் இவ்வேண்டுகோளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.
புதிய தேர்தல் முறைமையின் கீழ் சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படுமெனக் கூறப்படுகிறது.
அவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படாவண்ணம் தேர்தலை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யுங்கள் என மல்வத்து பீட மகாநாயக்க தேரர் வேண்டிக் கொண்டார்.
மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளின் ஆலோசனைகளையும் வேண்டுகோள்களையும் ஏற்றுக்கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, ‘உள்ளூராட்சி மன்றத்தேர்தல் கால தாமதப்படுத்தப்படமாட்டாது.
புதிய வட்டார முறையையும் விகிதாசார முறையில் கலந்த கலப்பு தேர்தல் முறையில் கீழே தேர்தல் நடத்தப்படும்.
சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மைக்கட்சிகளின் பிரதிநிதித்துவத்துக்கு பாதிப்புகள் ஏற்படமாட்டாது. மாகாண சபை தேர்தல் சட்டத்திலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படும்.
எதிர்க்கட்சியினரே பல குற்றச்சாட்டுக்களை வைத்து வருகிறார்கள். அவர்கள் எந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் எத்தரப்பையும் பாதிக்காத வகையிலே தேர்தல் நடாத்தப்படும்.
தேர்தலை அரசாங்கம் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தவில்லை.
எல்லை நிர்ணயங்களின் குறைபாடுகளை சீர்செய்து எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கே காலம் தேவைப்பட்டது. இது மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டது என்றார்.