எப்.முபாரக்-
திருகோணமலை மூதூர் தள வைத்தியசாலையை ஏ தரம் வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார். மூதூர் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (30) மாலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே:
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் பதில் சுகாதார அமைச்சராக இருந்த போது சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் போது முதூர் வைத்தியசாலையை ஏ தரம் வைத்தியசாலையை உயர்த்துவதற்கான அனைத்து தகவல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் பின் கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானத்தின் படி மூதூர் வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தும் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது. இதனை அதாவது மூதூர் வைத்தியசாலை ஏ தரம் வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு கோரி நேற்று வியாழக்கிழமை (30) காலையில் வைத்தியசாலை முன்பாக மூதூரில் உள்ள அனைத்து நலன்புரி சங்கங்கள், "தேசிய ஒருமைப்பாட்டிற்கான முற்போக்கு பேரவை" மற்றும் அமைப்புகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சரையும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரையும் தொடர்பு கொண்டு குறித்த மூதூர் தள வைத்தியசாலைக்கு ஏ தரம் வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தாம் மேற்கொண்டுள்ளதாகவும், தாம் இதற்கு முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் முதலமைச்சர், மற்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.
அதே போன்று மத்திய சுகாதார பிரதியமைச்சரும் தொடர்பு கொண்டு மூதூர் வைத்தியசாலையை ஏ தரம் வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறியதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.இந்த விடயத்தில் கூடிய விரைவில் தீர்க்கமான முடிவொன்றினை ஏற்படுத்தாவிட்டால் மீண்டும் மூதூர் வைத்தியசாலைக்கு முன்பாக மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்ததாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.