![]() |
ஹசன் அலி - முன்னாள் செயலாளர் நாயகம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் |
பல கட்சிகள், பல அமைப்புகள் என்னை அழைக்கின்றன. எவருக்கும் அழைக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் அவர்களுடன் இணைவதா இல்லையா? என்பது பற்றி நான்தான் தீர்மானிக்க வேண்டும்.
வெறும் அபிவிருத்தியை மாத்திரமல்லாது வட, கிழக்கு பிரச்சினைகளை முதன்மைப்படுத்தும் எந்தக் கட்சியுடனும் இணைந்து கொள்வேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
தனது எதிர்கால அரசியல் முன்னேற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கில் கூட்டு முன்னணியொன்று உருவாக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாடுகளில் புத்திஜீவிகள் இருப்பதாக அறிகிறேன். இந்தக்கூட்டு முன்னணியின் கொள்கைகள் என்ன? திட்டங்கள் என்ன? வட–கிழக்கு தொடர்பான நிலைப்பாடுகள் என்ன? என்பனவற்றை அறிந்து கொண்ட பின்பே கூட்டு முன்னணியில் இணைந்து கொள்வதாக இல்லையா-? என்று தீர்மானிக்க முடியும்.
வெறும் அபிவிருத்தியை மட்டும் நோக்காகவும் அமைச்சர் பதவிகளை இலக்காகவும் கொள்ளும், மக்களை ஏமாற்றி வரும் கட்சிகள், அமைப்புகள் எமக்குத் தேவையில்லை.
நான் தொடர்ந்து எனது அரசியல் அபிலாஷைகளை மக்களுக்குத் தெரிவித்து வருகிறேன். தொடர்ந்து விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தவுள்ளேன்.
எனது அடுத்த கூட்டம் பொத்துவிலில் நடைபெறும். கிழக்கு மாகாணம் எங்கும் கூட்டங்களை நடத்தவுள்ளேன். அதன் பிறகு வடக்கிற்கும் செல்வேன்.
வடக்கு மக்களுக்கும் அரசியல் தெளிவுகளை வழங்குவேன். வடக்கு, கிழக்கில் எமது மக்களின் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் முஸ்லிம்காங்கிரஸ் தீர்வுகளை எட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
இறக்காமம் மாணிக்கமடு சிலை வைப்பினையடுத்து கிழக்கின் முஸ்லிம்களின் காணி உரிமை சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. பிரபல அரசியல் வாதியொருவர் இதன் பின்னணியில் இருந்து செயற்படுகிறார். இதன் பிறகு பதவி, பட்டம், அமைச்சர் பதவி எனக்குத் தேவையில்லை. வடகிழக்கு முஸ்லிம்களின் நிலை பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது. இம்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்ட வேண்டும்.
பஷீர் சேகு தாவூதுக்கும் எனக்கும் அரசியல் ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை. எனது 32 வருட அரசியல் வாழ்வில் நான் பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன். என்னை எவரும் ஏமாற்ற முடியாது என்றார்.
விடிவெள்ளி-