![]() |
பவித்ரா வன்னியாரச்சி |
அரசாங்கள் பெண்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் மகளிர் தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போதைய அரசாங்கம் பெண்கள் மீது கடும் அழுத்தங்களை பிரயோகிக்கின்றது.
இரண்டு பிள்ளைகளின் தாய் என்ற ரீதியில் நான் இதனை உணர்கின்றேன். இன்று எமது பிள்ளைகளுக்கு கஞ்சி குடிக்கக்கூட அரிசி இல்லை. க்ரோட்டன் இலைகளை சாப்பிட நேரிட்டுள்ளது.
எமது பிள்ளைகள் பழைய ஆடைகளை அணிந்து பாடசாலை செல்ல நேரிட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்போரின் பிள்ளைகள் பேகன் சாப்பிடுகின்றார்கள். போர் இடம்பெற்ற காலத்தில் சந்திரனிலிருந்தேனும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எமது பிள்ளைகளுக்கு சாப்பிட அரிசி வாங்கி வந்தார்.
நகை அடகு வட்டிகளை குறைப்பதாகக் கூடிய அம்மாக்களின் உணர்வுகளுடன் இவர்கள் அரசியல் செய்துள்ளனர். கர்ப்பிணி பெண்களுக்கு வழங்குவதாகக் கூறிய போசாக்கு பொதியும் இல்லை அதனை வழங்குவதாகக்கூறிய ரோசியும் இல்லை.
பெண்களுக்கு பலவந்தமாக குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படுகின்றது. போசாக்கு பொதியை வழங்க முடியாத காரணத்தினால் இவ்வாறு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ச தாய்மாரை மதிக்கின்றார் அதற்கு காரணம் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள் என பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.