பஷீர் சேகுதாவூதின் பிந்திய அறிக்கை மிகவும் கண்டிக்கதக்கது -YLS.ஹமீட்


எஸ் அஷ்ரப் கான்-

ஜனநாயக அரசியலில் காத்திரமான விமர்சனங்கள் இன்றியமையாதவை. அரசியல்வாதிகளின் அல்லது கட்சிகளின் பிழையான செயற்பாடுகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும். அப்பொழுதான் மக்கள் தாங்கள் தெரிவுசெய்த பிரதிநிதிகள் அல்லது தாம் சார்ந்த கட்சிகள் மக்கள் நலனுக்காக செயற்படுகின்றார்களா? அல்லது தன் நலனுக்காக செயற்படுகின்றார்களா? என்பதை சீர்தூக்கிப் பார்த்து எதிர்காலத்தில் முடிவுகளை எடுக்கக் கூடியதாக இருக்கும். ( The voters can make an informed judgment on their representatives and decide on their future course of action). ஆனால் ஒருவர் அரசியலோடு தொடர்பற்ற தனிப்பட்ட நடத்தையோடு சம்பந்தப்பட்ட தவறுகளைச் செய்வதற்கு தானே உதவி செய்துவிட்டு அல்லது களம் அமைத்துக் கொடுத்துவிட்டு ( அவரது கூற்றின்படி) அதை திருட்டுத்தனமாக வீடியோ வேறு எடுத்துவிட்டு இத்தனை ஆண்டுகள் கழித்து அவற்றை வெளியிடப்போவதாக ஊடகங்களில் அந்த கமராவின் படங்களையும் போட்டு செய்திவெளியிடுவதென்பதும் அதை சில இணையதளங்களும் முகநூல்களும் செய்தியாகப் போட்டுக் கொண்டாடுவதென்பது கண்டிக்க தக்கதும் சமூகம் வெட்கித்தலைகுனிய வேண்டியதுமாகும்.

அவர் அந்த பிழையான விடயங்ளைப் படம் எடுத்தது உண்மையானால் அவர் அந்த பிழைகளுக்கு அன்று பிழையான நோக்கத்தோடு உதவி செய்து, அவற்றைப் பிழையான நோக்கத்தோடு படம்பிடித்து, அவற்றை இவ்வளவு காலமும் பிழையான நோக்கத்தோடு பாதுகாத்து வைத்திருந்து, இன்று பிழையான நோக்கத்தோடு ( தானும் நாறி மற்றவர்களையும் நாறவைக்க) அவற்றை வெளியிடப்போவதாக அவர் கூறும்போது நம்மவர்களும் அதனை பிழையான நோக்கத்தோடு செய்தியாக வெளியிடுகின்றார்களா? என்ற கேள்வி எழுகின்றது.

இந்த அறிக்கையை எழுத முனையும்போது எனக்குள் மிகப்பெரிய மனப்போராட்டம்; இந்த அறிக்கையையும் பலர் பல கோணங்களில் பார்க்கலாம் என்பதனால். ஆனாலும் இன்று முஸ்லிம் அரசியல், சாக்கடையின் உச்சக்கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்ற நிலையில் மௌனமாக இருப்பதற்கு மனச்சாட்சி இடம் தரவில்லை. இது அடுத்த கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினை என்று விட்டுவிடலாமா என்ற ஒரு கேள்வியும் என்னுள்ளத்தில் எழுந்தது. வீடியோ கமராக்களின் படங்களையும் போட்டு வெளியிடப்பட்ட மட்டரகமான இச்செய்தி சமூகத்தின் கௌரவத்தை எவ்வளவு தூரம் பாதிக்கப் போகின்றது; என்பதை உணராமல் அரசியல் பகைமை உணர்வுகளுக்காக சமூக வலைத்தளங்களில் இதனைக் கொண்டாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வாளாவிருக்க முடியவில்லை.

இன்று முஸ்லிம் அரசியல் பாரிய ஒரு நோயாளியாக மாறிவிட்டது. அந்த நோய்க்கிருமிகள் வளர்வதற்கான என்பதைவிட வளர்ப்பதற்கான நீர்க்குட்டையாக இன்று சமூக வலைத்தளங்கள் பாவிக்கப்படுகின்றன. அரசியலில் கட்டாயம் செய்யப்படவேண்டிய காத்திரமான விமர்சனங்களுக்கு இன்று இடமில்லை. கூலிக்கு ஆள்வைத்து சேறுபூசப்படுகின்றது.

'Reading maketh a man' வாசிப்பு மனிதனை உருவாக்கும் என்றும் 'Reading makes a full man' வாசிப்பு மனிதனை முழுமையாக்கும், என்றெல்லாம் கூறப்படுகின்றது. வாசித்தலின் மூலம் மனிதன் அறிவை வளர்ப்பதில் ஊடகங்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. ஆனால் இன்று சமூகவலைத்தளங்கள் என்ற ஒன்று வந்ததன்பின் மனித அறிவு மழுங்கடிக்கப் படுகின்ற சூழ்நிலையே அதிகம் காணப்படுகின்றது. ஆக்கபூர்வமான கட்டுரைகள் அபூர்வமாகக் கூட காண கிடைப்பதில்லை. அதையும் தாண்டி யாராவது எழுதினாலும் அதனை வாசிப்பதிலும் பெரிய அக்கறை இல்லை. ஆனால் யார்வேண்டுமானும் எதையும் எழுதலாம்; என்கின்ற நிலை உருவாகி இருக்கின்றது. அவற்றில் பாதி பித்னாக்கள். இவ்வாறு மனிதன் காலையில் எழுந்ததில் இருந்து தூங்கும்வரை முகநூலில் பாவச்செயலில் மூழ்கிக் கிடக்கின்றான்.

இந்த நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட இருக்கின்றது. அதில் அதிகாரப்பகிர்வு முக்கிய இடத்தை வகிக்கப் போகின்றது. முஸ்லிம்களின் எதிர்காலமே இந்த அதிகாரப்கிர்வில் கேள்விக்குறியாக்கப்படப் போகின்றது. இதில் பல விடயங்களில் றவூப் ஹக்கீமின் நிலைப்பாடு முஸ்லிம்களுக்கு பாதகமான தன்மையைக் கொண்டிருக்கின்றது. இவற்றைப்பற்றி பேசுவதற்கோ எழுதுவதற்கோ யாரும் ஆயத்தமில்லை. அவற்றைப்பற்றி எழுதினாலும் அவற்றை வாசிப்பதற்கோ அல்லது சிலாகிப்பதற்கோ பெரிதாக ஆர்வமில்லை. சில வட்ஸ்அப் குறூப்புகளுக்கு அதிகாரப்பகிர்வு தொடர்பாக சில குறிப்புகளை அல்லது voice cut களைக் கொடுத்து இதனை உங்கள் தலைப்பாக எடுத்து இன்று அளவளாவுங்கள்; என்று கொடுத்துப் பார்த்தேன். அதில் யாருக்கும் அக்கறை இல்லை. சிலர் அதிகாரப் பகிர்வு என்றால் வட கிழக்கு இணைப்பு/ பிரிப்பு என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் தமிழர்களுக்கு வழங்கட்படுகின்ற சமஷ்ட்டி எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும், தமிழர்கள் கேட்கும் சுயநிர்ணய உரிமை எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்; என்கின்றார்கள். ஆனால் சமஷ்டி என்றால் என்ன? அதன் சாதக பாதகங்கள் யாவை, அல்லது சுயநிர்ணயம் என்றால் என்ன? அதன் சாதக பாதகங்கள் யாவை? அவர்களும் சொல்லமாட்டார்கள் மக்களும் கேட்க மாட்டார்கள்; என்கின்ற நிலை. 'வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது. பிரிந்தே இருக்க வேண்டும். ஆனால் கிழக்கில் உள்ள தமிழ் பிரதேசங்கள் வடக்குடன் இணையலாம், அதேபோன்று சிங்களப் பிரதேசங்கள் ஊவாவுடன் இணையலாம்; ' என்று சிலர் எழுதினால் அருமையான கருத்து' என்று comment போடுகின்ற நம்மவர்களும் இருக்கின்றார்கள். இவற்றை மிகவும் கவலையுடன் குறிப்பிடுகின்றேன். நாளை அதிகாரப் பகிர்வு நடந்து 'முஸ்லிம்கள் இந்நாட்டின் நிரந்தர அடிமைகள்' என்று முத்திரை குத்தப்படும்பொழுது நமது சமுதாயம் நீண்ட தூக்கத்திலிருந்து விழித்தெழும். அப்பொழுது பஸ் ஏற்கனவே நம்மைக் கடந்து சென்றிருக்கும். இது தான் நம் சமூகத்தின் நிலை.

மறுபுறத்தில் தனக்கு வாக்களித்து ஆளாக்கிய முசலி மக்களின் எப்பொழுதோ தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சினையை, அது தீர்ந்துவிட்டால் தன் அரசியலும் முடிந்துவிடும் என்னும் அச்சத்தில் இன்னும் தீர்க்காமல் வைத்துக்கொண்டு ஊடகங்களில் விளம்பரம் தேடுகின்ற, தனக்கு வாக்களித்த மக்களுக்கே துரோகம் செய்கின்ற அரசியல் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது . இவற்றைப் பற்றி பேசுவதற்கோ எழுதுவதற்கோ யாருமில்லை. யாராவது இந்த உண்மையை சுட்டிக்காட்டினால் கூலிப்பட்டாளத்தை வைத்து முகநூல்களில் நாட்கணக்கில் சேறுபூசப்படுகின்றது. முஸ்லிம் சமுதாயத்தின் நிலையைப் பார்த்தீர்களா?

இந்த லட்சணத்தில் ஒருவர் பிழையான நடத்தையில் ஈடுபட்டாராம், அதற்கு இன்னொருவர் உதவி செய்துவிட்டு அவற்றைப் படமும் பிடித்துக்கொண்டு இத்தனை வருசமும் இருந்து, அவரது பிழைகளப் பாதுகாப்பதற்காகவே பாராளுமன்றத்தில் பேசாமடந்தையாக இருந்ததாகவும் ஒப்புக்கொண்டு இப்பொழது கட்சியைக் காப்பாற்ற அந்தப் படத்தை திரையிடப் போகிறாராம். நமது கலிமாச் சொன்ன சகோதரர்கள் இப்பொழுதே டிக்கட் எடுப்பதற்கு முகநூல்களில் வரிசையாக காத்து நிற்கின்றார்களாம். நமது சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது. தானும் நாறி அடுத்தவர்களையும் நாறடிக்கப் போகின்றாராம். ஒரு மரியாதையுள்ள, தன்மானம் உள்ள முஸ்லிம் கூறுகின்ற வார்த்தையா இது? எவ்வளவு மட்டரகமான கூற்று. இதைப்பார்த்து வெட்கித்தலைகுனிய வேண்டிய சமுதாயம் முகநுல்களில் வஞ்சம் தீர்ப்பதற்காக விழாக்கொண்டாடுகின்றோம்.

றவூப் ஹக்கீமால் அரசியலில் பாதிக்கப்பட்ட, அல்லது அவரது அரசியல்
செயற்பாடுகளை வெறுக்கின்றவர்கள் இருக்கலாம். ஏன் வை எல் எஸ் ஹமீட் பாராளுமன்றம் செல்லக் கூடாது; என்பதற்காக இரண்டு தேர்தல்களில் திட்டமிட்டு செயற்பட்ட ஒருவர்தான் றவூப் ஹக்கீம். தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நியாயமாக வை எல் எஸ் ஹமீட்டிற்கு கல்முனையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை மறுத்தார். 2004 ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட அனுமதித்து விட்டு கல்முனையில் ஒரே ஊருக்குள் இன்னுமொரு வேட்பாளரையும் திட்டமிட்டு இறக்கி கட்சியின் முக்கியஸ்தர்களை வை எல் எஸ் ஹமீட்டிற்கு எதிராக பல ஊர்களில் செயற்படவைத்து திட்டமிட்டு தோற்கடித்தவர்தான். அதற்காக பசீர் செய்கின்ற இந்த கேவலமான செயற்பாட்டில் சந்தோசமடைய முடியாது. றவூப் ஹக்கீமை 12 வருடங்கள் அரசியல் ரீதியாக மனச்சாட்சியை அடகுவைக்காமல் விமர்சனம் செய்த ஒருவர்தான் வை எல் எஸ் ஹமீட், ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவரது தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி பேசியது கிடையாது. அரசியல் நாகரீக எல்லைக்குள் யாரையும் யாரும் விமர்சனம் செய்யுங்கள்.

இதற்குமுன்னால் உள்ள பல சமூகங்களை இறைவன் அழித்திருக்கின்றான், என்பதை ஞாபகமூட்டி இறைவனைப் பயந்து கொள்வோம். இவ்விடயங்களில் உலமாக்கள் வாய்திறக்க வேண்டும்; படித்தவர்கள் வாய்திறக்க வேண்டும். இந்த சமுதாயம் தொடர்ந்தும் இவ்வாறு சீரழிய இடம் கொடுக்க முடியாது. சமுதாயத்தில் முதலாவது நேர்மையான சிந்தனைப் புரட்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். அரசியல் சாக்கடைகள் தூக்கி வீசப்பட வேண்டும். ஒரு புதிய சமுதாயம் கட்டி எழுப்பப்பட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -