நான் ஏறாவூர் பகுதிக்கு வரும்போதெல்லாம் மிகவும் சந்தோசமடைகிறேன் - ஜனாதிபதிஏ.எச்.ஏ. ஹுஸைன்-
யுத்தத்தை விட பாரிய அழிவு போதைப் பொருள் பாவனையினால் ஏற்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதன்கிழமை 01.02.2017 மட்டக்களப்பு ஏறாவூருக்கு வருகை தந்த ஜனாதிபதி அங்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்களையும் வீடுகளையும் கையளித்தார். இங்கு தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் 1762 காணி அனுமதிப் பத்திரங்களும் 962 வீடுகளும் 10 ஆயிரம் மரக்கன்றுகளும், வீடுகள் திருத்தத்திற்கான பண உதவி, மற்றும் போதையொழிப்பு நிகழ்வு என்பன ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி;

நான் ஏறாவூர் பகுதிக்கு விஜயம் செய்யும்போதெல்லாம் மிகவும் சந்தோசமடைகிறேன். உங்களை இங்கு சந்திக்கக் கிடைப்பதை எனது பாக்கியமாகக் கருதுகின்றேன். இந்தப் பகுதி முஸ்லிம் தமிழ் மக்கள் நீங்கள் எல்லோரும் எனது ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது முழுமையான ஆதரவைத் தந்தீர்கள். உங்களின் ஆதரவோடு அமைக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை இப்பொழுதும் புதிய அரசாகவே நான் பார்க்கின்றேன்.

யுத்த காலத்தில் நான் வாழும் பொலொன்னறுவை உட்பட வடமாகாணம், கிழக்கு மாகாணம் வடமத்திய மாகாணம் ஆகியவற்றைச் சேர்ந்த மக்கள் பல கஸ்டங்களை அனுபவித்தார்கள். கடந்த கால யுத்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் நல்லாட்சியில் நன்மைகளை அடைய வேண்டும் என்பதற்காகவேதான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். பொய்யில் வாழ்பவர்கள் பொய்யாகவே பரப்புரைகளைச் செய்கின்றார்கள்.

நீங்களும் நாங்களும் எல்லோரும் ஒன்று சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் பேதமின்றி ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அரச சேவை புரிவோர் ஒன்றுபட்டு இமுரண்பாட்டுத் தீர்வுக்காக பணியாற்ற வேண்டும். யுத்தம் வன்முறை புறக்கணிப்பு என்பவை நல்லதல்ல, அது ஒரு போதும் இனி இந்த நாட்டுக்கு ஏற்பட்டுக்கு விடக் கூடாது. போதைப் பொருள் பாவனை என்பது நாட்டில் மிக மோசமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.

இஸ்லாம், இந்து பௌத்தம் கிறிஸ்தவம் ஆகிய மதங்கள் போதைப் பொருளை அனுமதிக்கவில்லை, இந்த நாடு ஏழ்மையானதற்கும், நோயாளிகள் அதிகரித்திருப்பதற்கும் போதைப் பொருள்தான் காரணம். தெருவிலே மதுவுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிப்பதை விட போதைக்கு எதிரான போராட்டத்தை வீட்டுக்குள்ளேயே ஆரம்பிக்க வேண்டும். நல்லாட்சி அரசு வசதி படைத்தவர்களின் நலனுக்காக பாடுபடாது. அது வறிய மக்களின் அரசு. ஏழ்மை, நோய், மதுவுக்கு அடிமை போன்றவற்றிலிருந்து இந்த நாடு விடுபட வேண்டும்.

கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, வீட்டு வசதிகள், பொது வசதிகள், என்பனவற்றை இந்த நாட்டில் அனைத்தையுமே நாம் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றோம். எனவே இந்தப் பாக்கியத்தை நீங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சியைக் கவிழ்க்க கனவு காண்பவர்களால் இன்னும் 5 வருடங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆட்சிக் கவிழ்ப்பு என்பது அது மக்களின் கையில் தான் உள்ளது.

முன்னைய ஆட்சியாளர்கள் அரச சொத்தான ஹெலிகொப்டரை தங்களது மோட்டார் சைக்கிளைப் போல்தான் பாவித்தார்கள். அவர்களைப் பற்றி எல்லாவற்றையும் நான் இப்போது சொல்ல விரும்பவில்லை . முன்னைய ஆட்சியிலுள்ளவர்கள் தவறு செய்ததால் அவர்கள் இப்பொழுது நீதி மன்றங்களில் அலைகிறார்கள். அதுபோல் தற்போதைய ஆட்சியிலும் யாராவது தவறு செய்தால் அவர்களும் நீதிமன்றம் அலைய வேண்டிவரும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டை நாங்கள் சுபீட்சம் மிக்க வறுமையற்ற, யுத்தமற்ற, போதையற்ற, அமைதி நிலவும் நாடாக மாற்றியமைப்போம். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -