பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு கிழக்கு முதல்வரின் பதில்..!

நான் சில்லறைத்தனமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு ஒரு போதும் விரும்புவதில்லை. அவற்றுக்கு பதிலளிப்பதற்கு செலவிடும் நேரத்தை மக்களுக்கு பணி செய்வதில் செலவிடலாம் என சிந்திப்பவன் நான். எனினும் ஏறாவூர’ ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி என்னால் தடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட எனது சக அரசியல்வாதியும் பிரதியமைச்சருமான அமீர் அலி அவர்கள் நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு முன்னர் இதே குற்றச்சாட்டை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மாகாண சபை உறுப்பினர் சுபைர் ஆகியோர் முன்வைத்திருந்த போதும் சில்லறைத்தனமான ஆதாரமற்ற ரீதியில் ஆங்காங்கே சிறு கூட்டங்களில் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு வீணே என் காலத்தை செலவிட்டு பதிலளிப்பதை தவிர்த்து என் கடமைகளை தொடர்ந்தேன், எவ்வாறாயினும் இம்முறை நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் என்மீது குற்ற்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமையினாலும் ஜனநாயகத்துக்கும் மக்களாட்சிக்கும் முழுமையாக மதிப்பளிப்பவன் என்ற ரீதியில் மக்கள் பிரதிதிநிதிகளின் அவையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு நான் பதில் கூற விளைகின்றேன்.

ஏறாவூர் ஆதாரவைத்தியசாலைக்கு வௌிநாட்டு வர்த்தகர் ஒருவரின் உதவியுடன் தமது அமைப்பினால் உதவிகளை வழங்க வைத்தியசாலையின் வைத்திய அத்தியகட்சகரிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கு முதலமைச்சர் முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் தமது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு உதவிகளை வழங்க கௌரவ இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களை கோரிக்கை விடுத்திருப்பாராயின் அவர் கோரிக்கை விடுத்த உத்தியோகபூர்வ கடிதத்தை வௌியிடுமாறு வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.

பல ஆண்டு காலமாக அரசியல்வாதியாகவும் பல அமைச்சுக்களையும் வழி நடத்தி அனுபவம் பெற்றவரான அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு நிர்வாக நடைமுறைக்கான வழிமுறைகள் நன்கு தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

ஆகவே ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு உதவிகளை வழங்க விரும்புவதாக அவர் தெரிவித்திருப்பாயின் சாதாரண அரசாங்க நிர்வாக நடைமுறையின் படி பல மில்லியன் கணக்கான உதவிகளுக்கு கட்டாயம் எழுத்து மூல கோரிக்கைகளை அவர் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

தான் தொலைபேசியூடாக தான் தொடர்பு கொண்டு  கேட்டுக் கொண்டதாக அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறுவாராயின் யார் வேண்டுமானாலும் ஹிஸ்புல்லாஹ் என்ற பெயரில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடியும், அத்துடன் நான் கடந்த 2015.02.06 ஆம் திகதியன்றே கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றேன், இந்நிலையில் கடந்த 26.03..2016 ஆம் திகதியன்று ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகரின் ஊடாக வைத்தியசாலைக்கு உதவி கோரி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு BH/ER/GEN/2016 என்ற இலக்க கோரிக்கை கடிதம் நான் முதலமைச்சராக இருக்கும் காலப்பகுதியிலேயே வழங்கப்பட்டது.

நான் உண்மையாகவே அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை இடுபவராக இருந்தால் அந்தக் கோரிக்கை கடிதம் கொடுக்காமல் எனக்கு தடுத்திருக்கவும் முடியும் என்னை மீறி கொடுத்தார் என்ற ரீதியில் வைத்திய அத்தியகட்சகருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கவும் முடியும், இங்கு இது எதுவுமே நடை பெறவுமில்லை எனக்கு அவற்றைத் தடுப்பதற்கு எந்த விதமான தேவையுமில்லை.

அந்தக் கோரிக்கைக்கு கடிதத்துக்காக எவ்விதமான பதிலோ அல்லது உதவிகளோ அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கப்படவில்லை.

இதனையடுத்து BH/ER/GEN/2016 என்ற கோரிக்கை கடிதத்தினூடாக 03.08.2016 அன்று ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு என்னிடம் கேட்கப்பட்டது. இதையடுத்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேற்று பிரிவு ஆகியவற்றை நாம் அபிவிருத்தி செய்ததுடன் அதற்குரிய உபகரணங்கள் மற்றும் சிற்றூழியர்களையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வளம் குறைந்த ஆதார வைத்தியசாலையான ஏறாவூர் ஆதார வைத்தியசாலையை வளம் மிக்க ஆதார வைத்தியசாலையாக மாற்ற அதற்கான சிசிரிவி பாதுகாப்பு கமராக்கள் மற்றும் நோயாளர்களை ஏற்றி இறக்க உதவியான மின் தூக்கி(PASSENGER LIFT) ஆகியவற்றையும் பெற்றுக் கொடுத்துள்ளோம், அத்துடன் இவ்வாண்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களின் உதவியுடன் 117 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளோம், எமது பகுதிகளின் அபிவிருத்துகளை தடுக்க வேண்டிய எந்த விதமான தேவையும் எமக்கில்லை,வறுமையிலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் பல இன்னல்களை எதிர் கொண்டு வரும் கிழக்கு வாழ் நம் மக்கள் சகல அபிவிருத்திகளையும் பெற்று ஏனைய மாகாண மக்களைப் போன்று நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே எனது ஒரே இலக்காகும்.

ஆகவே வீண்பழி சுமத்தல்களை விடுத்து கிழக்கிற்கான அபிவிருத்திகளைப் பெற்றுக் கொடுக்க எமது மாகாண அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டுமென பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். அத்துடன் பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினருக்கு உரையாற்ற கிடைக்கும் நேரம் என்பது மிக மிக பெறுமதியானது என்பதை உணர்ந்து அந்த காலப்பகுதிக்குள் தமது பகுதி மக்களின் பிரதான பிரச்சினைகளை எடுத்துரைத்து அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமேயன்றி தமது தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்துக் கொள்ள அதை பயன்படுத்துவது தமக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்,

எனவே கல்குடா தொகுதி மக்கள் எதிர் நோக்கும் வாழைச்சேனை முஸ்லிம் பிரதேச சபைக்கான கோரிக்கை,இன்னும் காணிகள் பல விடுவிக்கப்படாமல் அங்கு துயர்படும் மக்களின் அவலம் மற்றும் வாழ்வாதார ரீதியாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதியமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து அவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.

கிழக்கு மாகாண முதலமைச்சர்,
ஹாபிஸ் நசீர் அஹமட் (பொறியியலாளர்)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -