ஜல்லிக்கட்டு தன்னெழுச்சி போராட்டம் - நல்ல மாட்டுக்கு நல்ல சூடுமுனையூரான் முபாரிஸ்-

  இன்றைய தேதிக்கு ட்ரெண்டிங் வேறெதுவுமில்லை ஜல்லிக்கட்டுதான். எங்கும், யார் வாயிலும் ஜல்லிக்கட்டு தான் பேச்சு. இனி யார் தடுக்க நினைத்தாலும் ஜல்லிக்கட்டை கட்டுப்படுத்த முடியாதளவு அந்தப் போராட்டத்தின் வீரியமும், நீட்சியும் எல்லை தாண்டிவிட்டது என்பதே உண்மை. 

  ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் இருப்பது சர்வதேச கொழுத்த வாணிப முதலைகளின் வர்த்தக அரசியலும், பார்ப்பண ஆதிக்க வர்க்கத்தின் தமிழர்கள் மீதான அடையாள அழிப்புமே தவிர வேறில்லை. 

  ஜல்லிக்கட்டு வெறும் வீர விளையாட்டு என்பதை தாண்டி அது தமிழர்களின் நூற்றாண்டுகள் கடந்த பாரம்பரியம். பாரம்பரியம் ஒரு சமூகத்தின் அடையாளம். ஒரு சமூகத்தின் பாரம்பரியத்தை அழிப்பது அந்த சமூகத்தின் அடையாளத்தை அழிப்பதற்கு சமமானது. இதனை அறிந்ததனால் தான் இன்று தமிழ் நாடு விழித்துக்கொண்டு வீறுகொண்டு எழுந்து போராடி வெற்றியீட்டியுள்ளது. 

  கி. ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்' என்ற நாவலில் வரும் ஒரு சம்பவத்தை இங்கே இடைச்செருகளாக சேர்த்துக்கொள்கிறேன். வெள்ளைக்காரன் இந்தியாவை ஆட்சி செய்ய ஆரம்பித்த காலம். தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் மங்கத்தாயாரம்மா என்ற வயது முதிந்த கிழவியிடம் சொல்கிறார்கள் "வெள்ளைக்காரன் வருகிறான், நாட்டை ஆட்சி செய்யப்போகிறான்" என்று. அந்தம்மா கேள்வி கேற்கிறாள் "வெள்ளக்காரன் நம்ம பொம்புள புள்ளைகள ஏதும் பன்றானா", "இல்லை", "நம்ம பாரம்பரியத்தை ஏதும் அழிக்கிறானா", "இல்லை", "நம்ம உணவுப் பழக்க வழக்கத்த கேலி செய்கிறானா", "இல்லை", "நம்ம கடவுள் நம்பிக்கைகள கொச்சை படுத்திறானா", "இல்லை", "அப்படியென்றால் விட்டுவிடுங்கள்... வெள்ளைக்காரன் ஆட்சி செய்துட்டு போகட்டும்" என அந்தம்மா சொன்னாள். 

  கி. ராஜநாராயணன் பதிவு செய்த இந்த சம்பவத்தில் இருந்து இரண்டு விடயங்களை எடுத்துக்கொள்ளலாம். ஒரு இனத்துக்கு பாரம்பரியம் எவ்வளவு முக்கியம் என்பது ஒன்று. நாட்டைப் பிடித்து ஆட்சி செய்ய வந்த வெள்ளைக்காரனுக்கு கூட எந்தெந்த விடயங்களில் கைவைக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளனர் என்பது மற்றொன்று. ஆக ஒரு சமூகத்தினது பாரம்பரியத்தின் முக்கியத்துவம் எப்படிப்பட்டது என்பதை அழகாக புரியவைக்கிறது இந்தச் சம்பவம். 

  இந்த இடத்தில் வைத்து இந்தக் கட்டுரையின் கோணத்தை சற்று இலங்கையின் பக்கம் திருப்புகிறேன்.  ஐ சப்போர்ட் ஜல்லிக்கட்டு என இங்கிருந்து பதிவுகள் போட்டு தமிழ் நாட்டின் பாரம்பரியத்திற்காக குரல் கொடுக்கும் சகோதரர்களே! 
  இலங்கைச் சோனகர்களாகிய நமது பாரம்பரியத்தினதும், அடையாளங்களினதும் நிலை என்னவாக இருக்கிறது? நமது பாரம்பரியம், அடையாளங்கள் என்று சொல்லிக்கொள்ள எதை மிச்சம் வைத்திருக்கிறோம்? 

  ஒரு இனத்தின் இருப்பை பிரதிபலிப்பது அந்த இனம் சார்ந்த பாரம்பரியமும், கலாசாரமுமே. நாமெல்லாம் வந்தேறிகள் என இனவாதிகள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். நமது இருப்புக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுவிட்டன. ஆனாலும் இந்த நிலத்தின் மூத்த குடி நாம் என்பதை பரைசாற்ற நம்மிடம் எந்த அடையாளம் மிச்சமாக உள்ளது? 

  இஸ்லாத்தின் பெயராலும், இயக்கங்களின் வெறியாலும் இறக்குமதி செய்யப்பட்ட ஏதேதோ தர்க்கங்களை திணித்து நமக்கான பாரம்பரியங்கள், அடையாளங்கள், கலைகள், கலாசாரங்கள், சின்னச் சின்ன கொண்டாட்டங்கள் என இப்படி எத்தனையோ நம் கண் எதிரே நம்மவர்களாலே அழிக்கப்பட்டு நிலைகுலைந்த நிர்வாண சமூகமாக இன்று நின்றுகொண்டிருக்கின்றோம். ஆம் பாரம்பரியம் அற்ற ஒரு சமூகத்தை நிர்வாண சமூகம் என்றே சொல்வேன். 

  எமது பூர்வீக அடையாளங்களாக திகழ்ந்த பல நூற்று ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியோர்களது அடக்கஸ்தலங்கள், தர்ஹாக்கள் அழிக்கப்பட்டு விட்டன, சில தினங்களுக்கு முன்பும் பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த முஸ்லிம்களின் அடையாளமாக திகழ்ந்த சம்மாந்துரை மல்கம்பிட்டி ஷியாரம் சேதமாக்கட்டது குறிப்பிடத்தக்கது. நமது பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் ஃபக்கீர்கள், அவர்கள் வழி வந்த பாடல்கள், பொல்லடி, சீனடி என எத்தனையோ கலைகள், சின்னச் சின்ன கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் என எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தி இல்லாமலாக்கிவருகிறோம். இதனால் நமது இனத்தின் இருப்பின் அடர்த்தியே நீர்த்துக்கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம். இந்தப் போக்கு எதிர்காலத்தில் தோற்றுவிக்கும் எதிர்வினை மிக்க ஆபத்தானது. 

  இயக்க கொள்கையின் அடிப்படைவாதத்தில் இது குறித்த மாற்றுக்கருத்து ஒவ்வொருவருக்கும் இருக்கலாம் ஆனாலும் கால தேச வர்த்தமான கூறுகளை கருத்தில் கொண்டு இவைகள் நமது பாரம்பரியம், கலாசாரம் குறித்த விடயங்களில் அனுசரிப்புடனும், நெகிழ்வுடனும் செயற்படுதல் நமது நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சரியான புரிதலையும், அதற்கான தயார்படுத்தலுமாக அமையும். 

  ஹேஸ்டக்குடன் ஐ சப்போர்ட் ஜல்லிக்கட்டு என்பதோடு மட்டும் கடந்துவிடாமால் தமிழக ஜல்லிக்கட்டு தன்னெழுச்சிப் போராட்டத்தின் பின்னனியும், அது சொல்லும் பாடத்தையும் நுணுக்கமாக கவனித்து நாமும் பிரயோகிப்பதே புத்திசாலித்தனம். 

  நல்ல மாட்டுக்கு இந்த சூடு போதும். 
  இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

  எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

  எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

  முக்கிய குறிப்பு :

  எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -