ஏறாவூர் தபாலகம் தொடர்ந்து புறக்கனிக்கப்பட்டு வருவது தொடர்பில் விசனம்- அலி ஸாஹிர் மௌலானா

பால் சேசைகள் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான விவாதத்தின்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா. மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் சேவையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதன் போது உரையாற்றிய அவர்.

எமது மாவட்டத்தில் தபால் சேவைகளை மக்களுக்கு சிறப்பாக வழங்குவதற்கு பல குறைபாடுகளும் , தேவைகளும் தடையாக இருக்கின்றமையினை தங்கள் கவனத்திற்கு முன்வைக்கின்றேன்.

குறிப்பாக எமது மாவட்டத்தில் தற்போது சேவையிலுள்ள 02 தபால் விநியோக வாகனங்களும் அடிக்கடி பழுதடைவதன் காரணமாக, தபால் விநியோகத்தில் காலதாமதம் ஏற்படுவதுடன் தபால் ஊழியர்கள் பல அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். எதிர்வரும் நிதியாண்டில் எமது மாவட்டத்திற்கு மேலதிகமாக புதிய தபால் வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் பல தபாலகங்களில் தபால் சேவகர்களின் எண்ணிக்கை பெரும் பற்றாக்குறையாகவுள்ளது. இதனால் சேவையிலிருக்கின்றவர்கள் மிகவும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து பணியாற்றுகின்றனர்.


தபாலக எல்லைக்குள் வதியும் மக்கள் தொகையினரையும், நிலப்பரப்பினையும் கருத்தில் கொண்டு போதிய தபால் சேவகர்களை புதிதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

மீள்குடியேற்றம், மக்கள் பரம்பல் என்பவற்றைக்கருத்திற்கொண்டு தபால் சேவையை விரிவு படுத்துவதற்காக பொருத்தமான இடங்களில் புதிய உப தபாலகங்களை அமைத்துத் தருமாறும் வேண்டிக்கொள்கின்றேன்.

ஏறாவூர் தபாலகமானது பல்வேறு தேவைகளை எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் திகதி எனது வேண்டுகோளின்பேரில் இத் தபாலகத்தை தரிசித்த நீங்கள் குறைகளைக் கேட்டறிந்ததுடன் அவற்றை நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தமையை நன்றியுடன் நினைவுபடுத்துகின்றேன்.

ஏறாவூர் தபாலக எல்லைக்குள் சுமார் 11,000 குடும்பங்களைச் சேர்ந்த 50,000 மக்கள் வசித்து வருகின்றபோதிலும் தபால் விநியோக செயற்பாடுகளுக்காக 4 சேவகர்கள் மாத்திரமே பணியில் உள்ளனர். பல கிலோமீற்றர் தூரம் பயணித்து பகல் உணவுக்குக்கூட ஓய்வில்லாமல் அவ் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆகக் குறைந்தது இன்னும் 2 சேவகர்களையாவது மேலதிகமாக நியமனம் செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

1ம் தரத்திலுள்ள ஏறாவூர் தபாலகத்தினை விசேட தர அஞ்சல் அலுவலகமாக தரமுயர்த்தும் கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவருகின்றது. இது தொடர்பாக தபால் மா அதிபதிக்கு 30.05.2016ல் தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட பணிப்புரைக் கடிதத்திற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

2000ம் ஆண்டு கட்டப்பட்ட இத் தபாலக கட்டடமானது மக்களுக்கு நிறைவான சேவையை வழங்கக் கூடியவகையில் புனரமைப்பு வேலைகளோ , திருத்தவேலைகளோ மேற்கொள்ளப்படாது, புறக்கணிக்கப்பட்டுவருகின்றது. சேவைகளைப் பெறுவதற்காக வருகைதரும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மண் தரையிலே அமர்ந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே இத் தபாலகத்தைதை தரமுயர்த்தி புனரமைத்துத் தருமாறு தயவுடன் வேண்டுகின்றேன்.

எமது பகுதியில் அமைந்துள்ள மீராகேணி உப தபாலகமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் முதற்தர உப தபாலகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதுடன் , குறைந்த வளங்களுடன் மக்களுக்கு சிறந்த சேவையினை அர்ப்பணிப்புடன் வழங்கி வருகின்ற உப தபால் அதிபர் அல் - ஹாஜ்.ஏ.நசீர் அவர்களையும் , உத்தியோகத்தர்கiயும் நான் பாராட்டுகின்றேன்.

இம் மீராகேணி உப தபாலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதுடன் , அண்மித்த பிரதேசங்களான தளவாய் , ஏறாவூர் ஹிதாயத் நகர் போன்ற இடங்களில் புதிய உப தபாலகங்களை அமைத்துத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

நாட்டுநலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி மறைந்த அரசியல் தலைவர்களை கௌரவித்து நினைவு முத்திரை வெளயிடும் தபால் திணைக்களத்தின் பணி பாராட்டத்தக்கது. அந்தவகையில் நாட்டு நலனுக்காக பணிபுரிந்த முன்னாள் அமைச்சர்களான அல்-ஹாஜ்.எம்.எச்.முஹமட், தொழிற்சங்கவாதியும் ஆளுனருமான அஷ; செய்யித் அலவி மௌலானா, பிரதி அமைச்சர் டாக்டர் பரீத் மீராலெவ்வை முன்னால் செனட்டர் அஷ; செய்யித் மசூர் மௌலானா ஆகியோருக்கும் கௌரவம் வழங்கி நினைவுமுத்திரை வெளியிட ஆவனை செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -