மனிதம் புனிதமாக இரத்ததானம் செய்வோம்..!

ல்லாஹ் இப்பூமியைப் படைத்து அதில் மனிதனை மிக சிரேஷ்டமான படைப்பாகப் படைத்துள்ளான். படைக்கப்பட்ட மனிதன் இஸ்லாத்தை அவனது வாழ்க்கை நெறியாக எடுத்துக் கொள்ளும் போது அல்லாஹ்விடம் கண்ணியம் பொருந்தியவனாக விளங்குகின்றான். இதனால் அவன் என்றும் மற்ற மனிதர்களுக்கு இஸ்லாத்தை சொல்லாலும் செயலாலும் சான்று பகரக் கூடியவனாக மாறுகின்றான்.

சொல்லால் சான்று பகர்வதானது அவன் பேசினால் நல்லதை பேசுவான், அவனது பேச்சினால் மற்ற மனிதர்கள் துன்பம் அடைய மாட்டார்கள். நிந்தனைக்கு உட்பட மாட்டார்கள். சுருக்கமாக கூறினால் அவனது நாவு மற்றவர்களுக்கு சான்றாக அமையும்.

செயலால் சான்று பகர்வதானது அவன் மற்ற மனிதர்களுக்கு எப்போதும் பிரயோசனமிக்கவனாகவும் மற்ற மனிதர்களின் விடயத்தில் கரிசனையுள்ளவனாகவும் இருப்பான். இதனால் அவனது வாழ்வும் மரணமும் மனிதர்களிடத்தில் சான்று பகரும்.

சான்று பகர்கின்ற ஒரு முஃமின் இரண்டு விடயத்தில் எப்பொழுதும் கரிசனையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒன்று படைத்த இறைவனுக்கு செலுத்த வேண்டிய கடமை விடயம். மற்றையது படைப்புகளுக்கு செலுத்த வேண்டிய கடமையுமாகும். ஏனெனில் படைத்தவனுக்கு மாத்திரம் கடமையை செலுத்தி விட்டு படைப்புக்கள் மீது அக்கறை கொள்ளாத பட்சத்தில் நாளை மறுமையில் அவன் நஷ்டவாளியாகவே எழுப்பப்படுவான்.

படைப்புக்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளில் கொடை ஒரு கடமையான விடயமாகும். இதில் இரத்தானம் ஒரு மனிதனது உள்ளத்தை வெல்கின்ற அம்சமாகும். வெல்கின்ற உள்ளங்களை இணைக்கின்ற ஒரு பாலமாகும்.வாழ்நாளில் மறக்க முடியாத கொடைகளில் ஒன்றாகும். ஒரு ஆத்மாவை வாழவைக்கின்ற உன்னத அம்சமாகும்.

இன, சாதி, பேதம் மலிந்து கிடக்கும் இவ்வுலகத்தில் அவைகளை தகர்த்து இனங்களுக்கிடையிலான உறவுப் பாலத்தை இணைக்கின்ற கொடைகளில் பெருங்கொடை இரத்த தானம் என்றால் மிகையாகாது.

'எவன் ஒருவன் ஒரு ஆன்மாவை வாழவைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவன்' (5:32)

இங்கு அல்குர்ஆன் பொதுப்படையாக ஆன்மா என்றே பேசுகிறது. ஒரு ஆன்மா துன்பத்தில் இருந்து உதவி கேட்கும் பட்சத்தில் அவனுக்கு உதவுவது முழு மனித சமூகத்தையும் வாழவைப்பதற்கு ஈடானதாகும்.

ரஸுல் (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் அருளப்பட்டவரல்ல. இவ்வுலகிற்கு அருட்கொடையாகவே அனுப்பபட்டவராவார். அவர்கள் மற்ற மனிதர்களுக்கு உதவும் விடயத்தில் தன்னையே அர்ப்பணித்த புனிதராவார்.

பல்லின சமூகத்தில் வாழ்கின்ற நாம் மற்ற மனிதர்கள் விடயத்தில் கரிசணை செலுத்துவதானது இஸ்லாத்தை செயல்களால் சான்று பகர்கின்ற அம்சமாகும். இது இனங்களுக்கிடையிலான நல்லுணர்வையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்றது.

இந்தவகையில் எந்தவித ஆரவரமும் ஆர்ப்பாட்டங்களுமின்றி கடந்த 10 வருடங்களாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை மாவனல்லை வாழ் சமூகத்துடன் இணைந்து இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து வருகின்றது.

இதன் மூலம் மாவனல்லை பிரதேச பல்லின சமூகங்களுக்கு மத்தியிலும் கேகாலை, கண்டி, பேராதனை மற்றும் கம்பளை பிரதேச வைத்தியசாலைகளின் நன்மதிப்பையும் பெற்று வருடா வருடம் அவர்களின் இரத்தவங்கிகளுக்கு தேவையான கணிசமான இரத்தங்களையும் வழங்கி வருகின்றது.

கடந்த வருடம் 570 இரத்தபைந்துகள் மேற்குறிப்பிட்ட இரத்தவங்கிகளுக்கு வழங்கிய விடயம் இங்கு குறிப்பிட்டு கூறப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

அன்பு, சகோதரத்துவம், மனிதநேயம் முதலான விழுமியங்கள் பேசுபொருளாக கொள்ளப்படும் இக்காலப்பிரிவில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை மாவனல்லை வாழ் சமூகத்துடன் இணைந்து 11 ஆவதுதடவையாகவும் இவ்வருடமும் டிசம்பர் 11 ஆம் திகதி மாவனல்லை ராழியா வரவேற்பு மண்டபத்தில்இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் நீங்களும் கலந்துகொண்டு மனிதர்கள் அனைவரையும் வாழவைக்கும் முயற்சியில் பங்குதாரர் ஆகுங்கள்.
எம். ஆர். ரயீஸ் முஹம்மத்,
தோஹா – கத்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -