இன்று 68வது சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். அனைத்துலக மனிதஉரிமைகள் பிரகடனம் ஜக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1948ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இத்தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டுவருகின்றது. ஆனால் மனித உரிமைகள் எந்தளவிற்கு பேணப்படுகின்றது எந்தளவிற்கு மீறப்படுகின்றது என்பதெல்லாம் நாளாந்தம் ஊடகங்களில் கண்டறிந்துகொள்ளமுடியும்.
மனிதஉரிமைகள் என்றால் என்ன? மனிதஉரிமைகள் என்பதற்க பலஅர்த்தங்கள் சொல்லப்பட்டபோதிலும் UNHCR இப்படிச் சொல்கிறது.
மனித உரிமைகளானது எங்களுடைய தேசம் வாழிடம் பால் தேசியம் அல்லது இனத்தோற்றம் நிறம் மதம் மொழி அல்லது ஏனையநிலை எவ்வாறிருப்பினும் சகல மனித இனப்பிறவியினதும் உள்ளார்ந்த உரிமைகளாகும். எங்களுடைய மனித உரிமைகள் பாரபட்சமின்றி எங்கள் எல்லோருக்கும் சமமாக உரித்துடையது. இவ் உரிமைகள் எல்லாம் இடைத்தொடர்புடையதுடன் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் மற்றும் பிரிக்கமுடியாது. 1939முதல் 1945 வரைஇரண்டாம் உலக மகா யுத்தம் உலகம் பூராக பல கோரவடுக்களை தோற்றுவித்ததுடன் மனிதம் சீரழிந்ததையும் வெளிப்படுத்தியது. அன்று தளிர்விட்டு 1948இல் மலர்ந்ததுதான் மனிதஉரிமைகள்.
ஜக்கியநாடுகளினால் புதிதாக தாபிக்கப்பட்ட மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிடம் மனித உரிமைகள் ஆவணத்தை தயாரிப்பதற்கான பணி ஒப்படைக்கப்பட்டது. இப்பணி பிரதானமாக எலினர் ருஸ்வெல்ட் அம்மையாhர் தலைமையிலான 18நாடுகளைச்சேர்ந்த பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்டது. அனைத்துலக மனிதஉரிமைகள் பிரகடனம் ஜக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1948ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மிகமுக்கியமான மனித ஆவணமாக இது கருதப்படுகிறது. இது 30உறுப்புரைகளைக்கொண்டது. இவை சர்வதேசத்தினால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை. எனினும் புதிய இலங்கை அதாவது நல்லாட்சியின்கீழான இலங்கை இம் மனிதஉரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஜந்தாண்டு செயற்றிட்டமொன்றை முன்வைத்து செயற்பட ஆரம்பித்துள்ளது.
இலங்கையில்..
இலங்கையில் உதயமாகியுள்ள நல்லாட்சிக்கான அரசாங்கமானது நல்லிணக்கம், யாப்பு சீர்த்திருத்தம், நிலைத்திருக்ககூடிய அபிவிருத்தி மற்றும் மனித உரிமைப் பற்றிய பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றது. அவ்வடிப்படையில் அரசாங்கம் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான தனது கடப்பாட்டைப் பூர்த்தி செய்வதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குமான (2017 – 2021) தனது புதிய மனித உரிமைகளுக்கும் மேம்படுத்தலுக்குமான தேசிய செயற்திட்டத்தைத் தயாரித்து வருகின்றது.
இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய இலக்குகளையும் செயற்பாட்டு விடயங்களையும் சமர்ப்பிப்பது மக்களின் மிக முக்கிய வகிபாகமாகும். குறிப்பாக இலங்கைவாழ் சிறுபான்மை மக்களின் தலையீடும் பங்களிப்பும் இன்றியமையாததாகும். இத்தேசிய செயற்றிட்டம் இலங்கை மக்களுக்கு நன்மைபயக்கும் என்பதில் ஜயமில்லை. ஆனால் இனவாதிகளின் தலையீட்டால் இத்திட்டம் வெற்றியளிக்குமா? என்ற ஜயமும் கூடவே எழுந்துள்ளது.
எது எப்படியிருப்பினும் இத்தேசியதிட்டம் பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் தெளிவு அவசியம். அதனையொட்டி இக்கட்டுரை சமர்ப்பிக்கப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்காக சொல்லப்பட்ட மனித உரிமைகளுக்கும் மேம்படுத்தலுக்குமான தேசிய செயற்திட்டத்தை தயாரிப்பதற்காக 116ஃ0836ஃ710ஃ016 ஆம் இலக்கத்தைக் கொண்ட அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் 2016 மே மாதம் 10 ஆம் திகதியன்று மனித உரிமைகள் மீதான அமைச்சுகள் மட்டத்திலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நீதி அமைச்சு அடங்கலாக பல அமைச்சுகள் இடம் பெறுகின்றன. மனித உரிமைகளும் மேம்படுத்தலுக்குமான தேசிய செயற்திட்டத்தை மேற்பார்வை செய்தல் மற்றும் வரைதல் நோக்கத்திற்காக அரசாங்க மற்றும் அமைச்சுகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக பிரதிநிதிகளும் வழிகாட்டல் செயற்பாட்டு குழுவாக அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி செயன்முறையினூடாக மனித உரிமைகள் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலுக்குமான செயற்திட்ட நடைமுறையில் பொதுமக்களும் பங்களிப்பு வழங்குவது மிக முக்கியமானதொன்றாகும் என மேற்படி வழிகாட்டல் மற்றும் செயற்திட்ட குழுவின் அங்கத்தவராக பிரேரிக்கப்பட்டுள்ள மனித அபிவிருத்தித்தாபனத்தின் பணிப்பாளரும் சர்வதேச மனிதஉரிமைகள் ஆர்வலருமான பி.பி. சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் பற்றிய அமைச்சர்கள் மட்டத்திலான குழுவானது மனித உரிமைகளுக்கும் மேம்படுத்தலுக்குமான தேசிய செயற்திட்டத்தினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேண்டிய விடயங்களைக் கண்டறிந்து அவதானிப்புரைகளைச் சமர்ப்பிக்குமாறு அமைப்புகளையும் தொகுதிகளையும் உள்ளடக்கிய பொது மக்களிடம் கோரிக்கை விடுகின்றது. அத்துடன் கீழே குறிப்பிடப்பட்ட கருப்பொருள் துறைகளில் ஒவ்வொன்றின் கீழும் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய இலக்குகளையும் செயற்பாட்டு விடயங்களையும் சமர்ப்பிப்பது மக்களின் மிக முக்கிய வகிபாகமாகும். குறிப்பாக இலங்கை சிறுபான்மை மக்களின் தலையீடும் பங்களிப்பும் இன்றியமையாததாகும்.
தேசிய செயற்திட்டம் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக அமையும்.
அ. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள்
ஆ. பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள்
இ. சித்திரவதைகளைத் தடைசெய்தல்
ஈ. பெண்களின் உரிமைகள்
உ. தொழிலாளர் உரிமைகள்
ஊ. இடம் பெயர் தொழிலாளர்களின் உரிமைகள்
எ. சிறுவர்களின் உரிமைகள்
ஏ. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் உரிமைகள்
ஐ. அங்கவீனர்களின் உரிமைகள்
ஒ. சுற்றாடல் உரிமைகள்
மனித உரிமைகளுக்கும் மேம்படுத்தலுக்குமான தேசிய செயல்திட்டம் பின்வரும் வழிகாட்டல் கோட்பாடுகளுக்கு அமைவாக வகுக்கப்படும்.
• இந்த நடைமுறையின் முக்கியத்துவம்:
• உலக மனித உரிமைகளின் தரங்களுக்கு அமைவாக வகுக்கும் பொறுப்பு:
• சர்வதேச கடப்பாடுகளின் நடைமுறைப்படுத்தல்:
• மனித உரிமைகளின் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையும் பிரிக்க முடியாத நிலையும்:
• செயற்பாடுகளைத் தெளிவாக மனித உரிமைகள் சார்ந்துத்தாக்குதல்:
• பொதுமக்களின் பங்குபற்றல்:
• கண்காணித்தலும் மதீப்பீடு செய்தலும்:
• ஓர் தொடர்ந்து கொண்டிருக்கும் நடைமுறை:
• ஓர் தேசிய பொறுப்பேற்பு:
• சர்வதேச பரிமாணம்:
அறிக்கை சமர்ப்பிக்க விரும்பும் தனிநபர்கள், சிவில் அமைப்புகள் மேற்படி விடயங்கள் சம்பந்தமாக குறிக்கோள், செயற்பாடு, இலக்கு காலம், சுட்டிகாட்டிகள் என்பவற்றை தெளிவாக எழுதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,மேஃபா சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் ஃ பல்தரப்பு ஒப்பந்தங்கள்குடியரசுக் கட்டிடம்,கொழும்பு – 01 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தது.
இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் எந்தளவிற்கு மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றது என்பது சற்று சிந்திக்கவேண்டியுள்ளது. மக்களுக்கு இவ்விடயம் தொடர்பாக விரிவாக விளம்பரப்படுத்தி பேரிய காலஅவகாசம் வழங்கப்பட்டு ஆலோசனைகளையும் விதந்துரைப்புகளையும் பெற்று இது தயாரிக்கப்படுதல் காலத்தின்கட்டாயமாகும். சகல தரப்பினரதும் அபிலாசைகளையும் ஆலோசனைகளையும் உள்வாங்கி தயாரித்தால் அது நின்று நிலைத்துநிற்கும் என்பது மக்களின் அபிப்பிராயமாகும்.
எனவே சம்பந்தப்பட்டோர் கவனத்திலெடுத்துச் செயற்பட்டால் நிச்சயம் எதிர்காலத்தில் சுவிற்சலாந்து அவுஸ்திரேலியா போன்று மனிதஉரிமைகளை உய்மையாகப் பேணும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் இடம்பிடிக்கும் என்பதில் ஜயமில்லை.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா-
