உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் - ஓர் விமர்சனப்பார்வை

இரு பொன் விழாக்களல் திணறிப்போன இலக்கிய வாதிகள்
டந்த 11ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள இலங்கை மன்ற மண்டபத்தில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஆய்வுப் பொன் விழா நடந்தேறியது.

இந்த விழாவை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்தியது.

அதே போன்று மருதமுனையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவும் கடந்த 26.11.2016 தொடக்கம் 27.11.2016 வரை நடைபெற்றது.

மருதமுனையில் நடைபெற்ற பொன் விழாவை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் முன்னின்று நடாத்தினார்.

இதே போன்று உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஆய்வுப் பொன் விழாவை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் முன்னின்று நடாத்தி வைத்தார்.

இலங்கையிலுள்ள இரண்டு பெரிய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் இந்த இரண்டு வெவ்வேவேறு விழாக்களுக்கு தலைமை தாங்கி நடாத்தினர்.

மருதமுனையைச் சேர்ந்த செய்யது ஹஸன் மௌலானா என்பவரினால் 1966.12.11ம் திகதி இந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் 2002ம் ஆண்டு இலங்கையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. அதன் பின்னர் 2011ல் மலேசியாவிலும் 2012ல் இந்தியா காயல் பட்டணத்திலும் நடைபெற்றது.

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியாவதையொட்டி இந்த பொன் விழா மாநாடுகள் மருதமுனையிலும் கொழும்பிலும் இரண்டு கோணங்களில் அரங்கேறியது.

மருதமுனையில் நடைபெற்ற விழா ஒரு பிராந்தியம் தழுவிய விழாவாக இருந்தாலும் அதிலும் பல்வேறு குறைபாடுகளும் பல கலை இலக்கிய வாதிகள் புறக்கணிப்பட்டமையும் தனி ஒரு பிரதேசத்தினை மையப்படுத்திய விழாவாக காணப்பட்டது.

இன்னொரு விழாவுக்கு ஏட்டிக்கு போட்டியாக மருதமுனை விழா நடந்தேறியதாக பலதரப்பு கலை இலக்கியவாதிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மருதமுனையில் நடந்த பொன் விழாவில் பிராந்தியத்திலுள்ள இலக்கிய வாதிகள் எழுத்தாளர்களுக்கு களம் கொடுக்கப்படவில்லையென்பதும் அது ஒரு பிரதேசத்தை மட்டுமே இலக்கு வைத்த விழாவாக காணப்பட்டதாகவும் அங்கு கலந்து கொண்ட பலரும் கூறுகின்றனர்.

மருதமுனையில் நடைபெற்ற பொன் விழாவில் கலை இலக்கிய வாதிகள் கலந்து கொண்டதை விட அரசியல் கட்சியின் கிளை அமைப்பாளர்கள் மற்றும் அதன் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள் என்றும் இந்த விழாவைப்பற்றி சிலர் விமர்சிக்கின்றனர்.

மருதமுனையில் கலந்து கொண்ட வெளியூர் பேராளர்களுக்கான தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததுடன் சாப்பாடு மற்றும் தேனீர் சிற்றுண்டி போன்றவைகளும் சிறப்பாக வழங்கப்பட்டதாகவும் இந்த பொன் விழா ஆய்வரங்கம் நடந்த சூழல் சிறப்பாக காணப்பட்டதுடன் ஆய்வரங்கம் ஒரு காத்திரமான விவாதங்களுடன் நடைபெற்று இறதியில் ஒரு தெளிவை பெறக் கூடிய வகையில் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

எனினும் மருதமுனை பொன் விழாவில் கலந்து கொண்ட எவருக்கும் விழாவின் நினைவாக ஒரு நினைவு மலர் வழங்கப்படவுமில்லை அல்லது கலந்து கொண்டமைக்கான சான்றிதழ் அல்லது நினைவுப் பொருளோ வழங்கப்படவில்லை என்பதும் பலரின் குறைபாடாகும்.

இந்த நிலையில் கடந்த 11ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள இலங்கை மன்ற மண்டபத்தில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஆயவுப் பொன் விழா நடைபெற்றது.

இந்த விழாவின் ஆரம்ப நாள் அமர்வு 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள இலங்கை மன்ற மண்டபத்தில் ஆரம்பமானது.இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த பேராளர்கள் ஆயிரம் ரூபா பணம் செலுத்தியே இதற்கு விண்ணப்பித்து அதில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

மூன்று நாள் நடைபெற்ற இந்த பொன் விழா மாநாட்டில் இந்தியப் பேச்சாளர்களின் பேச்சுக்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. இலங்கை இந்திய இஸ்லாமிய பாடகர்களின் பாடல்கள் மற்றும் கவியரங்கு என்பனவும் சிறப்பாக அமைந்திருந்தன.

கண்டி மஹ்மூத் பாலிகா மகாவித்தியாலய மாணவிகளின் அபினய நடனம் அனைவரையும் கவர்ந்தது. அதே நேரம் வாழைச்Nனை மாணவர்களின் நாடகம் அனைவரையும் மெய்சிலிக்க வைத்ததுடன் நாடகம் பேராளர்கள் அனைவரினதும் பாராட்டையும் பெற்றிருந்தது.

இந்த நாடகத்தை நடித்த அந்த மாணவர்களை அமைச்சர்கள் அதிதிகள் பாராட்டியதுடன் இதனை தயாரித்த ஆசிரியரையும் பாராட்டினார்கள். இன்று உலகில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்டு வரும் சதித்திட்டங்கள் தொடர்பாகவும் இதனால் ஏற்பட்டுள்ள அவல நிலை தொடர்பாகவும் அந்த நாடகம் தயாரிக்கப்பட்டிருந்தது.

அதே போன்று மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கான மாநாட்டு நினைவுப்பை மற்றும் பேராளர் சான்றுப்பத்திரம் மாநாட்டு நினைவு மலர் மற்றும் சில புத்தகங்களும் பேராளர்களுக்கான அடையாள அட்டையும் இதன் போது வழங்கப்பட்டன.

நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கலை இலக்கிய வாதிகள் எழுத்தாளர்கள் மற்றும் வெளிநாட்டு இலக்கிய வாதிகள் சிலரும் இந்த விழாவில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த மாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வில் பிரதமர் கலந்து கொள்வார் என மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் போடப்பட்டிருந்த போதிலும் அவர் கலந்து கொள்ள வில்லை.

விழாவின் தலைவரும் அமைச்சருமான றிசாட்பதியுதீன் மாநாட்டினை தொடக்கி வைத்தார். இதில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் அமைச்சர் றிசாட்பதியுதீன் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஷி மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதில் ஜனாதிபதி உரையாற்றுவார் என பேராளர்கள் எதிர் பார்த்த போதிலும் ஜனாதிபதி அங்கு உரையாற்றவில்லை.

இதன் போது விழா ஏற்பாட்டாளர்களினால் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு ஜனாதிபதியினால விருதுகள் வழங்கப்பட்டு பொன்னாடைகள் போர்த்தப்பட்டன.

இவைகள் இந்த மாநாட்டின் நிறைவுகளாக காணப்பட்ட போதிலும் பல் வேறு குறைபாடுகள் காணப்பட்டன.

இந்த மாநாடு நடைபெற்ற மூன்று தினங்களிலும் கலந்து கொண்ட பேராளர்களுக்கோ அல்லது பார்வையாளர்களுக்கோ வெறும் டீ (தேனீர்) மாத்திரமே வழங்கப்பட்டது. அதுவும் சிலருக்கு கிடைக்க வில்லை.

ஒரு சிறிய கூட்டம் என்றால் கூட தேனீருடன் சிற்றுண்டி கொடுப்பார்கள் ஆனால் இது உலகம் தழுவிய ஒரு மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படவில்லை. இதை அங்கு கலந்து கொண்ட உள்நாட்டு வெளிநாட்டு பேரளார்கள் தமக்குள் பரவலாக பேசிக் கொண்டனர்.

இதனை மாநாட்டின் இரண்டாவது நான் மாலை நேரம் உரையாற்றிய ஒரு இந்தியப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

சிற்றுண்டி வராததால் எனதுரையையும் சிற்றுரையாக்குகின்றேன் என்றார் இவரின் உரையை யடுத்தாவது மூன்றாவது நாளாவது இதன் ஏற்பாட்டாளர்களான இலக்கிய ஜாம்புவான்கள் சிற்றுண்டியினை எற்பாடு செய்திருக்க வேண்டும் ஆனால் மூன்றாவது நாளும் சிற்றுண்டி வழங்கப்படவில்லை.

மாநாட்டின் தொடக்க நாள் அமர்வு உரிய நேரத்திற்கு ஆரம்பிக்கப்படாததால் பௌத்த மத தேரர் உட்பட சமய தலைவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

மாநாட்டின் இரண்டாவது நாள் காலை ஆய்வரங்கம் அமர்வு பம்லப்பட்டியில் ஒரு இடத்தில் நடைபெற்றது. இந்த இடம் பற்றி பலருக்கு தெரியாததால் உள் நாட்டு பேராளர்கள் ஆய்வாளர்கள் சிலர் தட்டுத்தடுமாறி அங்கு சென்றடைந்தனர்.

இந்த இடத்தினை கண்டு பிடிப்பதற்கு இலகுவாக மாநாட்டு அழைப்பில் ஒரு வரை படத்தினையும் அனுப்பியிருந்தால் அது இலகுவாக இருந்திருக்குமென பன்னூலாசிரியர் எம்.எம்.எம்.மஹ்றூக் கரீம் தெரிவிக்கின்றார்.

மாநாட்டின் இரண்டாவது நாள் காலை ஆய்வரங்கம் அமர்வு நடைபெற்ற சூழல் என்பது ஆய்வரங்கம் நடாத்தவதற்கு பொருத்த மற்ற சூழல் என இங்கு கலந்து கொண்ட ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்தனர்.

ஆய்வரங்கம் ஒரு வீதியோரம் நடப்பது போன்றிருந்தாக குறிப்பிடுவதுடன் ஒரு ஒலி அமைப்பு வசதி இங்கு செய்திருக்க வில்லை அத்துடன் ஒரு ஆய்வரங்கத்தில் முன் வைத்த ஆய்வுக்கட்டுரையை அதே இடத்தில் இன்னுமொரு தலைப்பில் நடைபெற்ற ஆய்வில் ஒரு ஆய்வாளர் முன் வைத்தார். இது பலரின் விமர்சனத்துக்குள்ளானது.

ஆய்வரங்கம் ஒரு விறு விறுப்பாக இருக்கவில்லை என்றும் பலர் கூறுகின்றனர்.

இந்த இரண்டாம் நாள் காலை அமர்வு நடைபெற்ற இடத்தலேயே மாநாட்டு பைகளும் புத்தகங்களும் வழங்கப்பட்டது. பேராளர்களை கியூவரிசையில் நிறுத்தி அதனை வழங்கினார்கள்.

இந்த இடத்தில் வைத்துதான் இரண்டாம் நாளுக்கான பலுணவு வழங்கப்பட்டது. அது பார்சலாக (பொதி) வழங்கப்பட்டது. அந்த பகலுணவு பலருக்கு முட்டை அரிசி சோறு என தமக்குள் பேசிக் கொண்டனர் அதை உண்ட பலருக்கு அன்று மாலையில் வயிற்றுப் போக்கு எனவும் பேராளர்கள் உரைத்துக் கொண்டனர்.

மாநாட்டுக்கு செய்தி சேகரிக்க வந்த மாற்று மத ஊடகவியலாளர்களிடமும் சாப்பிட்டாக்கு டோக்கன் கேட்டதையும் அவதானிக்க முடிந்தது. அவர்களை ஏற்பாட்டாளர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

மாநாட்டின் இரண்டாம் நாள் அரங்கேறிய வாழைச்சேனை மாணவர்களின் நாடகத்தின் போது அந்த மாணவர்களுக்குரிய ஒலி வாங்கியமைப்பு செய்திருக்க வில்லை. இதனால் அந்த மாணவர்களின் கைகளில் அங்கு நின்ற அறிவிப்பாளர்கள் ஒலி வாங்கியினை அவ்வப்போது கையில் கொடுக்கப்பட்டதால் நாடகத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சங்கடப்பட்டதுடன் ஒலி வாங்கியை கொடுத்த அறிவிப்பாளரும் சங்கடப்பட்டார் என்றே கூறவேண்டும்.

மாநாட்டில் அனேகமான கலை இலக்கிய வாதிகள் கௌரவிக்கப்பட்டார்கள். இதில் இன்னும் பல காத்தரமான படைப்பாளிகள் கலை இலக்கிய வாதிகள் வெளியில் இருக்கின்றனர் அவர்கள் கண்டு கொள்ளப்படவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.

மாநாட்டின் இரண்டாம் நாள் ஜனாதிபதி கலந்து கொண்ட மாலை அமர்வின் போது மண்டபத்தினுள் இரண்டு வரிசைகள் அமைச்சர்கள் மற்றும் அதிதிகள் முக்கியஸ்தர்கள் விருது பெறுகின்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வரிசையின் இரண்டாவது வரிசை ஒதுக்கப்பட்டதாக ஏதேனும் அறிவித்தல் போடாததாலும் இது முக்கியஸ்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட கதிரைகள் என அங்கு கூறததாலும் மாநாட்டில் கலந்து கொண்ட இரண்டு உள் நாட்டு பேரளார்களான ஊடகவியலாளர்கள் இருவர் அந்த வரிசையிலுள்ள கதிரைகளில் அமர்ந்து கொண்டனர்.

அதன் போது மாநாட்டு ஏற்பாட்டுக்குழு தலைமை என்பவர் அவ்விடத்திற்கு வந்து நீங்கள் இவ்விடத்தில் இருக்க வேண்டாம் இது ஒதுக்கீடு செய்யப்பட்ட கதிரை என்று கூறினார் அப்போது அதில் அமர்ந்திருந்த ஒரு பேராளர் நாங்கள் ஆட்கள் வந்தவுடன் எழும்புகின்றோம். இந்த வரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தால் நாங்கள் இருந்திருக்க மாட்டோம் என்று கூறினார்.

பின்னர் அவ்விடத்திற்கு வந்த மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர் என்பவர் உரத்த தொனியில் உங்களை யார் இவ்விடத்தில் இருக்கச் சொன்னது எழும்புங்கள் பின்னால் போங்கள் என்று அழுத்தி சப்தமிட்டு மற்றய பேராளர் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு முன்னிலையில் அவமானப்படுத்தும் வகையில் கூறினார்.

இதையடுத்து அந்த இரண்டு பேராளர்களான ஊடகவியலாளர்கள் எழுந்து அவ்விடத்திலிருந்து அகன்று சென்றனர். பின்னர் அந்த ஏற்பாட்டுக்குழு செயலாளருக்கும் அந்த பேரளாருக்கு மிடையில் ஒரு சில நிமிடம் வாய்த்தர்கம் ஏற்பட்டு முடிந்தது. அந்த நேரம் அநத செயலாளர் பாவித்த வசனங்கள் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது.

இதனை பார்த்துக் கொண்டிருந்த பலரும் அந்த இரண்டு பேராளர்கள் மீது அனுதாபங்களை தெரிவித்தனர்.

உரத்த குரலில் எழும்புங்கள் என்று கூறி இவர்களிருவரையும் அவமானப்டுத்திய அவரின் பண்பாட்டு விருத்தியின் தன்மையும் ஒழுக்கத்தின்; குறையையும் காட்டுகின்றது என்று அங்கிருந்த பலரும் பேசிக் கொண்டனர்.

நாங்கள் அதிகாரமிக்கவர்கள் நாங்கள் இலக்கிய ஜாம்புவான்கள் நீங்கள் எங்களின் பார்வையில் சிறியவர்கள் வெறும் பூஜ்யங்கள் என்ற தோறனையிலே அந்த ஏற்பாட்டாளரின் அதிகாரப் பேச்சு அவ்விடத்தில் இருந்தது. எனினும் இதற்கெல்லாம் இறைவன் போதுமானவன் என நினைத்த அந்த இரண்டு பேராளர்களும் சகித்துக் கொண்டனர். பொறுமை காத்தனர்.

எது எப்படியோ இரண்டு பொன் விழாக்கள் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன. இரண்டு சாராரும் இரண்டு பிரகடனங்களை வெளியிட்டுள்ளனர்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்,
காத்தான்குடி.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -