காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாணத்தில் புதிதாகத் தெரிவான இலங்கை அதிபர் சேவை தரம் 3 ஜச்சேர்ந்த புதிய அதிபர்கள் 336பேரையும் புதிய பாடசாலைகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
இவர்கள் போட்டிப்பரீட்சை மூலம் தெரிவாகி சேவைக்கால முன்பயிற்சிபெற்று முன்பு கடமையாற்றிய அதே பாடசாலைகளில் கடமையாற்றியவந்தவர்களாவர். இவர்களுக்கு அதிபர் பிரதி அதிபர் உபஅதிபர் போன்ற பதவிகளை வழங்கி புதிய பாடசாலைகளில் நியமிப்பதற்கான நடவடிக்கை தற்போடு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் சேவை தரம் 3 அதிபர்களுக்கு வகை 3தர பாடசாலைகளே பொருத்தமாகும்.
முதலில் இவ்வகைப்பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் நிலவுகின்ற பட்சத்தில் அவற்றை நிரப்பிவிட்டு பின்னர் ஏனையவகைப் பாடசாலைகளில் வெற்றிடம் நிலவும் பிரதி உதவி அதிபர் பதவிகளை நிரப்ப ஒழுங்குகள் செய்துள்ளோம். 336 அதிபர்களில் சுமார் 200பேரை வகை 3 பாடசாலைகளில் பொறுப்பதிபர்களாக நியமிக்கவுள்ளோம். ஏனையோரை பிரதி உதவி அதிபர்களாக நியமிக்கவுள்ளோம்.
இதன்படி கடந்த 03 தினங்களில் திருகோணமலை மட்டக்களப்பு கல்முனை மாவட்டங்களைச்சேர்ந்த பிரஸ்தாப புதிய அதிபர்களை அழைத்து கூட்டங்களை நடாத்தி பாடசாலைத் தெரிவை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டிருந்தனர். கிழக்கு கல்வியமைச்சைச் சேர்ந்த கல்விப்பணிப்பாளர் செல்வி அகிலா தலைமையிலாள குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு இறுதியாக நடாத்தப்பட்ட பரீட்சைப் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு இடம்பெற்றது. உதாரணமாக கல்முனைக்கல்வி மாவட்டத்தில் 200முஸ்லிம் அதிபர்களும் 27தமிழ் அதிபர்களும் நியமிக்கப்படவுள்ளனர். அந்தந்த பாடசாலைகளிலே அவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.என்றார்.
இதேவேளை இதுவரைகாலமும் அதிபர் வெற்றிடமாகவிருந்த நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் கடமைநிறைவேற்று அதிபர்களாக சேவையாற்றி வந்த பதில் அதிபர்களின்நிலைப்பாடு பற்றி இதுவரை முடிவெதுவும் எடுக்கப்படவில்லை.
