சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து தமிழகம் முழுவதும் 29 பேர் இறந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பசியாவரம் குப்பத்தை சேர்ந்த சின்னகுழந்தை (75), பொன்னேரி அடுத்த மேலபட்டறை கிராமத்தை சேர்ந்த நைனியப்பன் (60), மீஞ்சூர் அடுத்த தேவதானம் கிராமத்தை சேர்ந்த மீனா (57) ஆகியோர் ஜெயலலிதாவின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து இன்று அதிகாலை மாரடைப்பால் இறந்தனர்.தேனி மாவட்டம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சந்திரன் (33). அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகி. முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தி அறிந்து நேற்று விஷமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், குட்டுப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (60). அதிமுக பிரமுகர். ஜெயலலிதா உடல் நிலை மோசமடைந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் நெஞ்சு வலியால் இறந்தார்.விருதுநகர் மாவட்டம், கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (40). அதிமுக நிர்வாகி. முதல்வர் உடல்நலம் குறித்த செய்தி கேட்டு மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம் மனைக்குளத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (58). அதிமுக கிளை கழக நிர்வாகி. நேற்று இரவு 11.30 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடமாக இருப்பதாக டிவியில் ஒளிபரப்பான செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வீரமலையை சேர்ந்தவர் சின்னபிள்ளை (53). அதிமுக கிளை செயலாளர். நேற்று இரவு முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை டிவியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல், சின்னகரடியூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (76), அதிமுக தொண்டர். நேற்று மாலை முதல்வர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வெளியான தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.காவேரிப்பட்டணம் ஒன்றியம் விலாங்குமுடியை சேர்ந்தவர் பாப்பாத்தி (60). அதிமுகவின் தொண்டர். நேற்று இரவு டிவியில் முதல்வர் ஜெயலலிதா இறந்த செய்தி வெளியானதை பார்த்து அதிர்ச்சியடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
தர்மபுரி மாவட்டம் ஊட்டமலையை சேர்ந்தவர் முருகேசன் (55). அதிமுக தொண்டர். நேற்று மாலை முதல்வர் இறந்ததாக வெளியான தகவலைக் கேட்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.சேலம் மாவட்டம் சென்றாயனூர் பகுதியை சேர்ந்தவர் அய்யம்மாள் (65). அதிமுக தொண்டர். இன்று அதிகாலை டிவியில் முதல்வர் ஜெயலலிதா இறந்த செய்தி வெளியானதை பார்த்து அதிர்ச்சியில் இறந்தார்.நாகை கீச்சாங்குப்பம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ராமன்(54). அதிமுக தொண்டர்.
நேற்று இரவு ராமன் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதா இறந்த செய்தியை பார்்த்து அதிர்ச்சி அடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.திருச்சி திருவெறும்பூர் எல்லக்குடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (80). ஜெயலலிதா இறந்த செய்தியை டிவியில் பார்த்த இவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (65). அதிமுக பிரமுகர். இவர் நேற்று மாலை ஜெயலலிதா கவலைக்கிடம் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்தார்.வேதாரண்யம் தாலுகா சிங்கம்குத்தகையை சேர்ந்தவர் காளியப்பன் (80). அதிமுக உறுப்பினர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்து மனவேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளவிடுதியை சேர்ந்தவர் ராமையா(52). அதிமுக பிரமுகர். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்தியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
கந்தர்வகோட்டை அடுத்த புது நகரை சேர்ந்தவர் பொன்னம்மாள்(52). அதிமுக உறுப்பினர். இன்று அதிகாலை ஜெயலலிதாவின் மரண செய்தியை டிவியில் பார்த்து, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். மன்னார்குடி ஆலத்தூர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம்(53). அதிமுக தொண்டர். இன்று அதிகாலை டிவியில் ஜெயலலிதா இறந்த செய்தியை பார்த்த அமிர்தலிங்கத்திற்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த காரணை கிராமத்தை சேர்ந்தவர் பாபு, அதிமுக நிர்வாகி, இவரது தந்தை விவசாயி மண்ணுப்பிள்ளை (65), செய்யாறு கொடநகர் நல்லதண்ணீர்குளத்தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகர்களான சின்னப்பையன்(70), அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த சையத்வாகித்(68) ஆகியோர் ஜெயலலிதா மரணசெய்தி கேட்டு மாரடைப்பால் இறந்தனர்.
ஆரணி தாலுகா குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சுரேஷ்(24) இன்று காலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் முருகானந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன்(65). ஜெயலலிதா கவலைக்கிடமான செய்தியை பார்த்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(43). அதிமுக தொண்டர். ஜெயலலிதா கவலைக்கிடம் செய்தியை டிவியில் பார்த்து அதிர்ச்சி அடைந்து இறந்தார்.
வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(60). அதிமுக தொண்டர். ஜெயலலிதா இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.கோவை அடுத்த சின்னியம்பாளையம் அருகே உள்ள தொட்டிபாளையம் பிரிவை சேர்ந்தவர் சுப்ரமணி(55). அதிமுக தொண்டர். டிவியில் ஜெயலலிதா உடல்நிலை பற்றிய தகவலை கேட்டு மனவேதனையடைந்து விஷம் குடித்து இறந்தார். நெல்லை மாவட்டம் குமந்தாபுரத்தை சேர்ந்தவர் அருணாசலம் (65). அதிமுக பிரமுகர். முதல்வர் ஜெயலலிதா மரண செய்தியை இன்று அதிகாலை கேட்டு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
தென்காசி ஆசாத்நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (31). அதிமுக தொண்டர். ஜெயலலிதா இறந்த செய்தியை டிவியில் கேட்டு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கருங்காலிவிளையை சேர்ந்த அதிமுக தொண்டர் துரை (75). இவர் ஜெயலலிதா இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து இறந்தார்.