என்.எம்.அப்துல்லாஹ்-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதி, வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அ.அஸ்மின் அவர்களுடைய பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் வாழ்வாதாரம் குன்றிய 100 குடும்பங்களுக்கான சமையல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு அண்மையில் யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது, யாழ்ப்பாணம், வேலனை, சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கே மேற்படி உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வினை வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள்; வடக்கு மாகாணசபையினூடாக நாம் பல்வேறு உதவித்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றோம். அதில் ஒரு அம்சமே இதுவாகும், யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கான 12வது உதவித்திட்டம் இதுவாகும். இதன் மூலம் எமது மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடையவேண்டும் என்பதுவே எனது எதிர்பார்ப்பு. மக்களுக்கு வேறு எதிர்பார்ப்புகள் இருக்க முடியும். வெளியேற்றத்தின் பின்னர் எமது மக்களின் நடத்தைக் கோலத்திலே பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது, அது நிலையான மாற்றமாகவும் அமைந்துவிட்டது;
கஷ்டம் துன்பம், அழிவு வருகின்ற சந்தர்ப்பத்தில் இன்னுமொருவரிடம் தஞ்சம் அடைதல் மிகவும் சாதாரண மனிதப் இயல்பாகும், சுனாமி அழிவு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அதிலே பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படாத மக்களிடம் தஞ்சம் அடைந்தார்கள், ஆனால் அவர்கள் நீண்டகாலமாக தஞ்சமடைந்த மக்களாக இருக்கவில்லை, வடக்கு முஸ்லிம்கள் அவ்வாறில்லை சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக தஞ்சம் அடைந்த மக்களாக இருந்துவிட்டார்கள், இதன் விளைவாக நாம் பல்வேறு சமூக ரீதியான சவால்களை எதிர்நோக்குகின்றோம்.
இந்த நடத்தைக் கோலம் மாற்றமடையவேண்டும், இதில் மாற்றம் ஏற்படாதவரை எமது மக்களை முன்னேற்றகரமான பாதையொன்றில் வழிநடாத்துதல் சிரமமாகவே இருக்கும், உள்ளூர் அரசியல் செயற்பட்டாளர்கள் இதனைக் காரணமாக வைத்து எமது மக்களின் சுதந்திரத்தையும், சுயாதீனத்தையும், கௌரவத்தையும் பறித்து மக்களை வேறுவிதமாக வழிநடாத்தலாமா என்று முயற்சிக்கின்றார்கள். இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும். எமது மக்களை சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும், கௌரவமாகவும் வைத்திருக்க வேண்டியது எமது கடமை என்றுதான் நாம் நினைக்கின்றோம். என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் எம்.எம்.எம்.நிபாஹிர், ஜனாப் எம்.எல்.லாபிர், ஜனாப் எம்.எல். நிராஸ், மற்றும் சமூக சேவைகள் திணைக்கள அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

