மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறை தொடர்கிறது- ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்

மகிந்தராஜபக்ச அரசாங்கம் ஆயுதங்களை கொண்டு ஊடகவியலாளர்களை அடக்கியது தற்போது நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்தை கொண்டு ஊடகவியலாளர்களை அடக்க முயற்சிக்கின்றதா? என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.

மட்டக்களப்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் ஒருவரின் செயற்பாட்டை
முடக்குவதற்கு தாபன விதிக்கேவையில் உள்ள சரத்துக்களை பயன்படுத்தி கடிதம் அனுப்பியுள்ளமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மகிந்தராஜபக்ச அரசாங்கம் ஆயுதங்களை கொண்டு ஊடகவியலாளர்களை அடக்கியது தற்போது நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்தை கொண்டு ஊடகவியலாளர்களை அடக்க முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஆயிரக்கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கெல்லாம் பார்க்கப்படாத தாபன விதிக்கோவைச் சட்டமானது மட்டக்களப்பில் உள்ள ஒரு ஊடகவியலாளருக்கு மட்டும்ப யன்படுத்தப்பட்டுள்ளதானது எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடம் ஏற்கனவே ஒரு சுயாதீன ஊடகவியலாளர் மீது பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு எதிரான பல மறைமுகமான அழுத்தங்கள் விடுக்கப்பட்டு அவர் தனது ஊடக தொழிலையே இழந்துள்ளார்.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாகவே தற்போது மற்றுமொரு ஊடகவியலாளர் மீது தாபன விதிக்கோவையை பயன்படுத்தி மறைமுகமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரச நிர்வாகத்தை விமர்சித்து கட்டுரை எழுதிய ஊடகவியலாளரை பொலீஸில் கொடுத்து அச்சுறுத்தியவர்கள் தற்போது அவருடன் சேர்ந்து செயற்படும் அரச உத்தியோகத்தர் மீது தாபன விதிக்கோவையை காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அரசாங்க உத்தியோகத்தர்கள் ஊடகப்பணியாற்றும் போது அவர்களுக்கெல்லாம் அனுப்பப்படாத தாபன விதிக்கோவை கடிதம் குறித்த ஊடகவியலாளருக்கு மட்டும் அனுப்பப்பட்டமையானது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்பதையே உறுதிப்படுத்துகின்றது.

அண்மையில் மட்டக்களப்பு அரச நிர்வாக சீர்கேடுகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில் அதற்கான பழிவாங்கள் நடவடிக்கையாக இவை மேற்கொள்ளப்படுகின்றதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகத்தின் இந்த செயற்பாடானது ஒட்டுமொத்த ஊடகத்துறைக்கும் விடுக்கப்பட்ட சவால் என்பதோடு இலஞ்ச ஊழல் நிறைந்து கிடக்கும் அரச நிர்வாகத்தின் முறைகேடுகளை வெளிவராமல் தடுக்கும் செயற்பாடாகவே நோக்கவேண்டியுள்ளது.

இதனை மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியமாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இது குறித்து ஊடகத்துறை அமைச்சு கவனம் செலுத்தி ஊடகவியலாளராகபணியாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அவர் அவர் அமைச்சின் செயலாளர்கள் ஊடாக அனுமதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இத்தால் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மாவட்டத்தில் தங்களது விளம்பரங்களுக்கு ஊடகத்துறையை பயன்படுத்தும்
பிரபலங்களும் அரசியல்வாதிகளும்அதிகாரிகளும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடைபெறும் இது போன்ற அநீதிகளை கண்டும் காணாது இருப்பதே ஊடகத்துறை மீதான அடக்குமுறைகள் தொடர மேலும் காரணமாக உள்ளது.

எனவே இதுபோன்ற தனிப்பட்ட பழிவாங்கல்கள் முளையிலேயே கிள்ளி எரியப்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களின் தனித்துவமான சுதந்திர செயற்பாட்டிற்கு  வழிஏற்படுத்தி கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட்டதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுக்கின்றது.


-நன்றி-
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
மட்டக்களப்பு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -