எம்.ரீ.ஹைதர் அலி-
தேசிய வாசிப்பு மற்றும் தேசிய உள்ளூராட்சி மாதம் என்பனவற்றை முன்னிட்டு காத்தான்குடி நகரசபையின் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் ”வாசிப்பின் ஊடாக நவீன சமூகத்தை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வாசிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று திங்கள்கிழமை (2016.10.31ஆந்திகதி) முன்னெடுக்கப்பட்டது.
காத்தான்குடி நகரசபையின் செயலாளர் S.M.M. ஸபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு முக்கிய ஊர் பிரமுகர்கள், காத்தான்குடி நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகளவான பாடசாலை மாணவர்களும் இவ்விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்து வரும் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தவதற்கும், ஊக்கமளிக்கும் வகையிலும் காத்தான்குடியின் பிரதான வீதிகளினூடாக இவ்வூர்வலம் முன்னெடுக்கப்பட்டு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறூக்:-
நகரசபையில் அரசியல் ரீதியான சபைகள் உள்ளபோது இருந்ததை விட தற்போது நகரசபையின் செயற்றிறன் அதிகரித்துள்ளது. அரசியல் சபை இருந்த கால கட்டத்தில் ஒரு சிறிய விடயத்தினை மக்களின் நலன்கருதி செயற்படுத்துவதாக இருந்தாலும்கூட ஆளும்கட்சி, எதிர்கட்சிகளுக்கிடையில் அந்த விடயத்தினை நாம் தான் முன்னெடுக்க வேண்டும் இல்லையேல் அந்த விடயம் நடைபெறக்கூடாது என்ற ஒரு போக்கின் காரணமாக மக்களுக்கு பிரயோசனமுள்ள இவ்வாறன பல விடயங்களை முன்னெடுக்க முடியாமல் போனது.
கடந்த வருடம் மே மாதம் 15ஆம் திகதி நகரசபை கலைக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரையுள்ள ஒரு வருடம் 5 மாத காலப்பகுதிக்குள் நாங்கள் நகரசபை மூலம் பல்வேறுபட்ட விடயங்களை முன்னெடுத்திருந்தோம். ஆனால் அதற்கு முன்னர் நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இருந்த காலத்தில் குப்பைகளை அகற்றவும், அரைகுறையாக வரி வசூலிக்கவும் மாத்திரமே நகரசபையால் முடிந்தது. முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு அபிவிருத்தி பணிகளும் நகரசபை மூலம் முறையாக கண்காணிக்கப்படவில்லை. அபிவிருத்தி செய்யப்பட்ட பல வீதிகளில் நீர் தேங்கி காணப்படுகின்றது. எனது வீட்டுக்கு அருகாமையிலுள்ள வீதி ஒன்று பத்து இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக மீண்டும் ஒரு முறை பத்து இலட்சம் ரூபா செலவில் மீண்டும் போடப்படுள்ளது.
ஆனால் தற்போது நடைபெறும் அனைத்து வேலைத்திட்டங்களையும் எனது சொந்த வேலை போல் நினைத்து நகரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்களையும் உரிய இடத்திற்கு அழைத்துச் சென்று அவ்வேலைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதனை தினமும் பார்வையிடுகின்றோம். சில தினங்களுக்கு முன்னர் ஒரு வீதிக்காக கொண்டுவரப்பட்ட கற்கள் தரமற்றவையாக காணப்பட்டதனால் அதனை திருப்பி அனுப்பிவிட்டு தரமான கற்களை பயன்படுத்தி அவ்வீதியினை புனரமைப்பு செய்திருந்தோம். ஆகவே மக்களின் நிதியில் மக்களுக்காக செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் உரிய முறையில் மக்களின் பயனுக்காக செலவு செய்யப்பட வேண்டும்.
மேலும் இத்தகைய நிகழ்வுகளை வருடந்தோறும் ஏற்பாடு செய்வதோடு மாத்திரம் நிறுத்தி விடாமல் மாதம் ஒரு முறையாவது இவ்வாறன விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொள்ளுதல், மற்றும் நடமாடும் நூலக திட்டத்தின் மூலம் வீடு வீடாகச் சென்று நூல்களை வழங்குதல் போன்ற செயத்திட்டங்களினூடாக வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தி சிறந்த சமூகம் ஒன்றை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.