தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ, அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்ததாகவும், சிறையிலிருந்து திரும்பிய அவர், மேற்படி சிறைக்கைதிகள் தொடர்பில், உணர்வுபூர்வமானத்து எம்மால் கேள்வியொன்றைத் தன்னிடம் கேட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
“தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இன்னமும் விடுதலை வழங்கப்படவில்லை?" என்ற நாமலின் கேள்வி, என்னை ஆச்சரியப்பட வைத்தது. அந்தக் கேள்வியை அவர், மிகவும் உணர்வுபூர்வமாகவே எழுப்பினார்” என்று மஹிந்த குறிப்பிட்டார்.
“அந்தக் கேள்விக்கு பதிலளித்த நான், அவர்கள் தொடர்பில் வழக்குகள் உள்ளன. அவர்களுக்கெதிரான வழக்குகளை வேண்டுமானால், சட்டமா அதிபர் திணைக்களம், நீக்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால், அவர்கள் தொடர்புடைய வழக்குகளை விரைவுபடுத்தவும், அத்திணைக்களத்தால் முடியும் என்றேன்.
நான், அதிகாரத்தில் இருந்த போது, தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தேன். அப்போது, அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்” என்றார்.