இந்த நாட்டில் அரசியல் யாப்புத் திருத்தம் குறித்த தேவையற்ற சில பித்தலாட்டங்கள் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றது. இது சம்பபந்தமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் என்பன மூலம் நாட்டின் சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நேர்மையான, நியாயமான தீர்வு குறித்த முயற்சி சாத்தியமாகும் விஷயத்தை குழப்பியடிப்பதற்று சில நடவடிக்கைகள் காரணமாக அமையலாம். அவற்றைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
கண்டி மாவட்ட மக்கள் எதிரநோக்கும் சுத்தமான குடிநீர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காணும் விதத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முன்னெத்துள்ள இரண்டுநாள் நடமாடும் சேவையை வியாழக்கிழமை (29) முற்பகல் கண்டி கட்டுகஸ்தோட்டை பாரிய நீர் சுத்திகரிப்பு வளாகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்றிற்கு பதிலளித்த போது தெரிவித்ததாவது,
காலாகாலமாக இவ்வாறான ஆர்ப்பட்டங்களும், பேரணிகளும் நடந்து வந்தாலும், அவற்றின் மூலம் சில விடயங்கள் தாமதமானாலும், இம்முறை உருவாகியிருக்கின்ற இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்த அரசாங்கத்தை, அதிலும் குறிப்பாக இந்த நாட்டின் சிறுபான்மை இனங்கள் குறித்த நேர்மையான அணுகுமுறையைக் கொண்ட இரண்டு தேசிய தலைமைகள் அதாவது ஜனாதிபதியும், பிரதமரும் சேர்ந்து நடத்தி வருகின்ற இந்த கூட்டு அரசாங்கம் மற்றும் அவற்றுடன் சேர்ந்து சிறுபான்மைக் கட்சிகள் அதற்கு ஆதரவை வழங்கிக் கொண்டிக்கின்ற சந்தர்ப்பத்தில், வழமைக்கு மாற்றமான பாரதூரமான விட்டுக் கொடுப்புகள் நடந்து விடுமென்ற ஒரு பாரிய அச்சத்தை ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.
இதில் தமிழ் மக்கள் மத்தியில் வடக்கில் ஆவேசமான, ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளும் கிழக்கிலே மக்களுக்கு மத்தியில் இன்னொரு விதமாக பீதியை உருவாக்குகின்ற முயற்சியும், தெற்கில், சிங்கள மக்களை காட்டிக் கொடுக்கப்போகின்றார்கள் என்றும், ஒற்றையாட்சி முறை முழுமையாக ஒழிக்கப்பட்டு விடும் உருவாக்குகின்ற இந்த பீதி மனப்பான்மை அரசியல் யாப்பு குறித்த சரியான புரிந்துணர்வு இல்லாமல், அரசியல் முறைமை என்பதும், நாட்டின் ஒருமைப்பாடு என்பதும் இருவேறு விஷயங்கள் என்பதைப் புரியாது, நாட்டின் ஆட்சி முறைமை சமஷ்டியா, ஒற்றையாட்சியா என்பது குறித்து பேசப்படுகின்ற விஷயங்கள் இந்நாடு ஒரே நாடாக இருப்பதை பாதிக்கப்போகின்றவையாகும்.
ஆனால், இதனை எவ்வளவு சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத கருத்துக்கள் குறித்து ஜீரணிக்க முடியாமல் வேண்டுமென்று உண்மைத் தன்மையை மறைக்கின்ற சக்திகள் நீண்ட காலமாக இந்த நாட்டை குழப்பி வருகின்றன. இதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
குறிப்பாக, முஸ்லிம்கள் மத்தியிலும் கூட, முஸ்லிம்களின் அங்கீகாரம் இல்லாமல் வடகிழக்கு இணைக்கப்பட்டு விடலாம் என்ற விஷயம் அதிலும் அதற்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைமை ஏற்கனவே சம்மதம் தெரிவித்து விட்டது என்ற பாணியில் பேசப்பட்டு வருகின்ற விடயம் என்பவற்றில் எந்த உண்மையும் கிடையாது.
இவ்வாறான விஷயங்கள் சம்பந்தமாக சகல தரப்புகளும், பொறுப்புணர்ச்சியோடும், புரிந்துணர்வோடும் பல காரியங்கள் சாதிக்கப்பட வேண்டியிருக்கின்றன. நாட்டில் இறைமை சம்பந்தமான விஷயத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இந்த நாடு பிரிக்கப்பட முடியாதது என்பதில் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருக்கின்றோம்.
இதற்கு மாற்றமாக, அதிகூடிய அதிகாரப்பகிர்வை இயலச் செய்ய வேண்டும் என்பதில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் குறைபாடுகள் இருந்தால் களையப்பட வேண்டும் என்பதில் உடன்பாடு இருக்கின்றது. அரசியலமைப்பு மாற்றம் குறித்து சிறுபான்மையினருக்கு தேர்தல் முறைமையில் இருக்கின்ற பாதிப்புக்கள் குறித்து தெளிவாக நாங்கள் சுட்டிக்காட்டி, அவை மாற்றியமைக்கப்பட வேண்டும் என பேசியிருக்கின்றோம்.
நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், இறைமைக்கும் எல்லைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எந்தவிதமான அம்சங்களும் உத்தேச அரசியலமைப்பில் இடம்பெறமாட்டா. அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும், அதை விடவும், பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு, உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் என்பனவும் உள்ளன.
சகல இனங்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய உகந்த தீர்வு கிட்டுமென்பதில் அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.