இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமை வடகிழக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்பட்டுள்ளது. அந்தவகையில், யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்து இதுவரைக் காலமும் மீள்குடியேற்றப்படாத மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களை மீண்டும் தங்களது பூர்வீக இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இத்திட்டத்தை குழப்பி - இடையூறுகளை விளைவித்து, இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு சில அரசியல் தலைமைகள் முயற்சிக்கின்றமை மிகவும் மனவேதனைக்குரிய விடயமாகும்.
வடகிழக்கு பகுதிகளில் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் பிரதேச செயலாளர் மட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றதுடன், அதில், மட்;டு மாவட்ட கலந்துரையாடல்கள் எனது தலைமையில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் அண்மையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்டபட்ட மக்களது பிரச்சினைகளை இணங்கண்டு அம்மக்களை துரிதகதியில் மீள்குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது.
வாகரை பிரதேச செயலாளர் ஆர்.எஸ்.ரகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசு, மாவட்ட கச்சேரி பிரிநிதிகள், வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது, பொது மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய காணி ஏலம் நடத்துவதற்கான ஆலோசனைகள் என்னால் முன்வைக்கப்பட்டது. அதற்கமை கடந்த மாதம் 17ஆம் திகதி காணிக்கச்சேரியும் நடத்தப்பட்டது. இதில் சட்டரீதியான ஆவணங்களை கையளிக்கும் நபருக்கு இன,மத பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என பிரதேச செயலகத்துக்கு பணிப்புரை வழங்கியிருந்தேன். அதுமட்டுமல்லாது, இக்கலந்துரையாடலில் எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய பிரதேசங்களில் அகதிகளாக வாழ்கின்ற இதுவரைக் காலமும் மீள்குடியேற்றப்படாத மக்களை உடனடியாக மீள்குடியேற்றுவதற்கு தேவையான நிதி, மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எனினும், இந்த மீள்குடியேற்ற கலந்துரையாடல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் உண்மைக்குப் புறம்பான சில விடயங்களை தெரிவித்து வருகின்றனார்.
நாங்கள் மேற்கொள்ளும் மீள்குடியேற்ற முயற்சிகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய அவர் எமக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து, மீள்குடியேற்ற முயற்சிகளுக்கு தடையாக இருப்பது மிகவும் கவலைக்குரிய அம்சமாகும். – என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.