ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
அரநாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்ட 535 குடும்பங்களுக்கு சுமார் ரூபா 35 இலட்சம் பெறுமதியான அத்தியவசியப்பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று அரநாயக்க பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இஸ்லாமிக் ரிலீப் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு இப்றாகிம் சப்ரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அபேவிக்ரம வனசூரிய பிரதம அதிதியாகவும், அரநாயக்க பிரதேச செயலாளர் பைசல்ஆப்தீன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருட்களை வழங்கி வைத்தனர்.
40 நாடுகளில் தனது மனிதநேய செயற்பாடுகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வரும் சர்வதேச அரச சார்பற்றநிறுவனமான இஸ்லாமிக் றிலீப் அமைப்பு தனது மற்றுமொரு கட்டப்பணியாக அரநாயக்கா பிரதேசத்தில் இடம்பெற்றமண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபா 8000 ( எட்டாயிரம் ) பெறுமதியான சமையல் எரிவாயு, சமையல்உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகளினை வழங்கி வைத்தது.
இங்கு உரையாற்றிய பிரதம அதிதி மாவட்ட அரசாங்க அதிபர் அபேவிக்ரம வனசூரிய கருத்தத் தெரிவிக்கையில்;
'இயற்கை அனர்த்தங்கள் இறைவனால் உண்டாக்கப்படுகின்றன. இவை சாதி மத பேதம் பார்த்துத் தாக்குவதில்லை. பாதிப்புக்கள் வரும் போது அப்பிரதேசத்தில் காணப்படும் எல்லா இன மக்களையும் பாதித்தே ஆகும். எனவேநிவாரணங்களை வழங்கும் போது எல்லா மக்களுக்கும் பாகுபாடுகளின்றி வழங்க வேண்டும். அந்த வகையில் இந்தஇஸ்லாமிக் றிலீப் நிறுவனம் சாதி பேதமின்றி மக்களுக்கு உதவி வருவதில் முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. இதன்பணிகள் வளர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்' எனத் தெரிவித்தார்.