இலவசக் கல்வி மூலம் நாட்டிலுள்ள சகல சிறார்களுக்கும் சமூகத்தில் உயர் அந்தஸ்தைப் பெறுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவர் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா ஆவார். அதே போன்று இந்த நாட்டின் கல்வியில் இரண்டாவது புரட்சியை ஏற்படுத்தியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்பதை மறுக்க முடியாது. அவரது திட்டங்களின் படி, அமைக்கப்பட்ட கல்வி பீடங்கள், தேசிய கல்வி நிறுவகம் போன்றவைகளால் இந்நாட்டின் கல்வித்துறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு அது குறித்த பார்வையில் சிறந்த அறிவுள்ளது. அதனால்தான் எங்களுடைய அரசில், கல்விக்கான நிதியொதுக்கீட்டை அதிகரித்தோம்.
உலகிலுள்ள சகல நாடுகளும் ஏனைய விடயங்களை விட அதிகமாக கல்விக்கு நிதியொதுக்குகின்றன. அவை அநேகமான சந்தர்ப்பங்களில், தேசிய வருமானத்தில் 8 அல்லது 10 வீதம் கல்விக்கு ஒதுக்குகின்றன. ஆனாலும், சென்ற அரசாங்கம் கல்விக்கான முக்கியத்துவத்தை வழங்குவதில் கவனம் செலுத்தவில்லை. அதனால் அவர்கள் 1.4 வீதமான மிகவும் சிறிய தொகையினையே கல்விக்காக ஒதுக்கியது. எனினும், எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ளும் அரசு என்ற வகையில் நமது முதலாவது பட்ஜட்டிலேயே கல்விக்கு 6 வீதம் ஒதுக்கினோம். நாங்கள் உண்மையை காணவேண்டும். இன்றும் நாட்டிலுள்ள கிராமியப் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. அத்துடன், சில பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை காணப்படுகிறது.
இக்குறைபாடுகளை நிவர்த்திக்கவே நாங்கள் தற்போது திட்டங்களை தயாரிக்கிறோம்" என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 27/09/2016 "அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடாசாலை" திட்டத்தின் கீழ் சியம்பலாண்டுவ இரண்டாம் நிலை பாடசாலைக்காக ஒதுக்கப்பட்ட ரூபா 500 இலட்சம் நிதியினை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "இன்று கல்விக்கான கேள்வி நாடளாவிய ரீதியில் அதிகமாக உள்ளது. நாட்டிலுள்ள சகல பெற்றோரும் எதிர்பார்ப்பது பிள்ளைகளை தேசிய பாடசாலையொன்றில் சேர்க்க வேண்டும் என்று. ஆயினும் நாட்டிலுள்ள பிரபல தேசிய பாடசாலைகளோ 376 மட்டுமே. இதை வைத்து சிந்தித்துப் பாருங்கள். இப்பிரச்சினையை நாம் நிவர்த்திக்கவுள்ளோம். அதற்காக நாம் புதிதாக 670 தேசிய பாடசாலைகளை உருவாக்கவுள்ளோம். இதற்கான வேலைத்திட்டம் தான் "அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடாசாலை". இதன் கீழ் சகல பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இருந்து தலா இரு பாடசாலைகள் வீதம் தெரிவு செய்து, சகல வசதிகளும் உள்ளதாக உருவாக்குவோம்.
இதன் ஒரு பகுதியாக சியம்பலாண்டுவ பிரதேச செயலகப்பிரிவிலிருந்து சியம்பலாண்டுவ இரண்டாம் நிலைப்பாடசாலை மற்றும் விலேவல சிறீபாளி மகா வித்தியாலயம் ஆகியவற்றை சகல வசதிகளுடனும் கூடிய பாடசாலைகளாக்குவோம். அதற்காகவே இப்பாடசாலைக்கு ரூபா 500 இலட்சத்தினை இவ்வருடத்திற்காக ஒதுக்கியுள்ளோம். நாங்கள் கல்வியைப் போலவே, பொருளாதாரத்திலும் பின்னடைந்துள்ள மொனறாகலை மாவட்டத்தை முன்னேற்ற முயற்சிக்கிறோம். அதில் எங்களால் செய்ய முடியுமானது, கல்வியை முன்னேற்றுவது. எங்களது அரசின் கீழ் மொனறாகலை மாவட்டத்தின் 121 பாடசாலைகளை சகல வசதிகளுடனும் கூடியதாக அபிவிருத்தி செய்து இப்பிரதேசத்திலுள்ள பிள்ளைகளுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உலக வாழ்வை முகங்கொடுப்பதற்குரிய சூழலை உருவாக்கவுள்ளோம். இதற்காக எமது மாவட்டத்திற்கு, இவ்வருடத்திற்காக மாத்திரம் ரூபா 18 000 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணம் முழுவதற்கும் நாங்கள் ரூபா 42 000 இலட்சம் கல்விக்காக ஒதுக்கியுள்ளோம். இவ்வாறு பாரிய நிதியொதுக்கீடு மூலம் எங்களுடைய பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலமொன்றை உருவாக்கவுள்ளோம். விசேடமாக கிராமியப் பாடசாலைகளிலுள்ள ஆங்கில,விஞ்ஞான,கணித ஆசிரியர் பற்றாக்குறையினை நிரந்தரமாக தீர்ப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இதற்காக 5000 ஆசிரியர் நியமனங்களை வழங்கவிருக்கிறோம்.
இவ் அபிவிருத்தி நிகழ்வின் கீழ் சியம்பலாண்டுவ இரண்டாம் நிலைப் பாடசாலைக்கு வௌியக திரையரங்கு கூடமொன்றும், சகல வசதிகளுடனும் கூடிய சிற்றுண்டிச்சாலை, சுகாதார வசதிகள், அதிபர் இல்லம் போன்றவற்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாகாண சபை பிரதிநிதிகள், அதிபர் குலதுங்க பண்டார உள்ளிட்ட ஏனைய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், பெற்றோர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் பெருந்திரளானோரும் பங்குபற்றினர்.
கஹட்டோவிட்ட ரிஹ்மி -